‘சோடா பாட்டில்’ வீச்சுப் பேச்சுக்கு ஜீயர் மீது காவல்துறையில் புகார்

‘ஆண்டாள் ஆய்வுக்குரியவளே’ என்ற தலைப்பில் கொளத்தூரில் வரும் 03.02.2018 அன்று நடைபெறவிருக்கும் கருத்தரங்கில் சடகோப ராமானுஜ ஜீயர் என்பவர் சென்று சோடா பாட்டில் வீசுவோம், எதற்கும் துணிவோம் எனவும் நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கும் போது நான் சொல்வது போல் செய்யுங்கள். இந்தக் கால சாமியார் எல்லாம் சும்மா உட்கார்ந்திருக்க மாட்டார்கள். இப்போதெல்லாம் தேவைப்பட்டால் நாங்களும் கண்ணாடி விடுவோம். எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத்தெரியும் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லிவிடுவோம் என்று வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியிருக்கிறார்.

அதனை மேடையில் இருப்பவர்களும் ஆமோதித்து கைதட்டுகிறார்கள். நான் சொன்னபடி செய்வீர்களா என அரங்கில் இருந்தவர்களைப் பார்த்து கேட்கிறார், அனைவரும் செய்வோம் என முழங்குகிறார்கள்.

எனவே சடகோப ராமானுஜ ஜீயர், மேடையில் இருந்தவர்கள், நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் ஆகியோர் மீது வன்முறையை தூண்டுதல், கலவரத்தை ஏற்படுத்தும் உள் நோக்கத்துடனும் கூட்டுச் சதியிலும் ஈடுபட்டதற்காக வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று 27.01.2018 மாலை 4 மணிக்கு தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன்  தலைமையில் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில் தென்சென்னை மாவட்டத் தலைவர் தோழர்.வேழவேந்தன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார், மற்றும் கழகத் தோழர்கள் உடனிருந்தனர்.

நாமக்கல் : கடந்த சனவரி 26 ஆம் தேதி திருச்செங்கோட்டில், வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ஜீயர், சேலம் மாவட்டம் கொளத்தூரில் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி நடைபெற விருக்கும் ‘ஆண்டாள் ஆய்வுக்குரி யவளே’ என்ற கருத்தரங்கில் சோடாபாட்டில்களும், கற்களையும் வீசுவேன் என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். இதைக் கண்டித்து, நாமக்கல் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் மற்றும் அந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மாதொருபாகன் இறைப்பணி ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் மீதும், வன்முறையை தூண்டும் வகையில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யுமாறு, நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் வைரவேல் தலைமையில், திருச்செங்கோடு துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இதில், மாவட்ட தலைவர் சாமிநாதன், மாவட்டப் பொருளாளர் முத்துப்பாண்டி மற்றும் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் நகர தோழர்கள் உடனிருந்தனர்.

ஆபாச வன்முறை பேச்சு: நித்யானந்தா, எச்.ராஜா காவல்துறையில் புகார்

ஒடுக்கப்பட்ட மக்களை இழிவாக “சேரி பிஹேவியர்” என்றும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனி மொழியைத் தரம் தாழ்த்தி விமர்சித்த நித்யானந்த பீடப் பெண்களையும் அவர்களைத் தூண்டிவிடுகிற நித்யானந்தாவையும்  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரியும் தொடர்ச்சியாக மத கலவரங்களை தூண்டும் விதமாக பேசிய எச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரியும் திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் மதுரை காவல் ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள், தமிழ்புலிகள், குறிஞ்சியர் விடுதலை பேரவை, தபெதிக, SDPI உள்ளிட்ட இயக்கங்கள் பங்கு பெற்றன.

பெரியார் முழக்கம் 02022018 இதழ்

You may also like...