பெரியாரின் போராட்டங்கள் கள்ளகுறிச்சியில் கழகத்தலைவர் உரை!
கள்ளக்குறிச்சியில் பெரியாரின் 148-வது பிறந்தநாளை ஒட்டி கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகத்தின் சார்பாக 28.09.2026 திங்கட்கிழமை அன்று மதியம் 3.00 மணி அளவில் சங்கராபுரம் வாசவி திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.
ந. வெற்றிவேல் (கள்ளக்குறிச்சி மாவட்ட துணைச் செயலாளர்) தலைமையேற்று, உரையாற்றினார். ந. அய்யனார் (கழகத் தலைமைக்குழு உறுப்பினர்) அமைப்பின் முக்கியத்துவமும், நோக்கமும் என்ற தலைப்பில் ஜாதிய ஏற்றத்தாழ்வுகளையும் தீண்டாமையையும் எதிர்த்துப் போராடவும், விளிம்பு நிலை மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் எனவும், மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூகநீதி, பெண் விடுதலை போன்றவற்றை அமைப்பின் நோக்கமாகக் கருதி தோழர்கள் இயக்கப்பணிகளைச் செய்ய வேண்டும், இல்லையேல் முடிந்த அளவுக்கு உதவிகளைச் செய்து இயக்கப் பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறி கருத்துரையாற்றினார்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி வரலாற்றில் பெரியார் தொண்டர்களின் கொள்கைப் பிடிப்பும், அர்ப்பணிப்பும் என்ற தலைப்பில் சட்ட எரிப்புப் போராட்டம், பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம், இந்தி எழுத்து அழிப்புப் போராட்டம், பிராமணாள் உணவகப் பெயர் அழிப்பு ஆகிய போராட்டங்களிலும் மற்றும் கொள்கைப் பணியில் பெரியாரும், பெரியாரின் தொண்டர்களும் எப்படி நேர்மையாகவும், ஒழுக்கமாகவும், துடிப்புமிக்கவர்களாகவும், கண்ணியமாகவும் இருந்தார்கள் என்பதைக் குறித்தும், தமிழர் உரிமைப் போராட்டம் எடுக்கிற போதெல்லாம், வடவர் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுங்கள் என்று பெரியார் கூறியதைப் பற்றியும், பாரதிதாசன் பார்ப்பானுக்கு எந்தவித உதவியும் செய்யமாட்டேன் எனக் கூறியதைக் குறித்தும் மிக விரிவாக விளக்கத்தைக் கூறி கருத்துரையாற்றினார்.இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைப் பொறுப்பாளர் தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பெரியார் முழக்கம் இதழ் 08102026
