தமிழ்நாட்டின் வளர்ச்சியும் தனித்துவமும் உறுத்துகிறதா?
ஆளுநர் வாசிக்க மறுத்த உரையில் இருந்தது இதுதான்!
தேசிய கீதத்தை பாட மறுத்ததால் உரையை வாசிக்காமல் சட்டப் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. சட்டமன்ற மரபுப்படி அவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்படுகிறது. அந்த நடைமுறைதான் இம்முறையும் பின்பற்றப்பட்டது. எனினும் அரசியலமைப்பு கடைமையைச் செய்யக்கூடாது என்ற கொள்கையோடு வாழும் ஆர்.என்.ரவி தொடர்ந்து முன்றாவது ஆண்டாக உரையை வாசிக்காமல் ஓட்டம் பிடித்தார். ஆர்.எஸ்எஸ் ரவியால் ஏற்றுக் கொள்ள இயலாத அளவுக்கு சாதனைகளும், பா.ஜ.க.வுக்கு எதிரான தமிழ்நாட்டின் தனித்துவப் பார்வையும் இருந்ததே உரையை வாசிக்க மறுத்ததற்குக் காரணம் என்பதே உண்மை.
அவற்றில் இருந்து சில துளிகளை மட்டும் தருகிறோம்.
ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையில் வரையறுக்கப்பட்ட மும்மொழிப் பாடத்திட்டத்தை இந்த அரசு ஏற்கவில்லை. இதனால், தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட வேண்டிய மானியங்கள் நிறுத்திவைக்கப்பட்ட போதும், அதனால் பெரும் நிதிச்சுமை ஏற்பட்டபோதும், ஒன்றிய அரசின் மும்மொழிப் பாடத்திட்டத்தை ஏற்பதில்லை என்பதை பல்வேறு தருணங்களில் இந்த அரசு தெளிவுபடுத்தி வந்துள்ளது. என்றுமே இருமொழிப் பாடத்திட்டம் என்பதே தமிழ்நாட்டின் கொள்கை என்பதை இந்த அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையில் உறுதியாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. 1968ம் ஆண்டு அண்ணா வகுத்துத் தந்த இருமொழிக் கல்வித் திட்டத்தினை நாம் நமது இரு கண்களைப் போல காத்து வருகிறோம். நம் உயிரோடும். உணர்வோடும் கலந்துள்ள செந்தமிழைக் காப்பதில் சமரசம் என்ற பேச்சிற்கே இடமில்லை.
இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து இம்மாமன்றம் பல்வேறு காலங்களில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. தற்போது அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மூன்றாம் மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த நடவடிக்கையை மறைமுக இந்தி மொழித் திணிப்பாக மட்டுமே இவ்வரசு கருதுவதோடு, இதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என ஒன்றிய அரசை இவ்வரசு வலியுறுத்துகிறது.
ஒன்றிய அரசு எதிர்மறை மனப்பான்மையுடன் மாநில அரசை அணுகி வருவதால், மாநில அரசிற்கு உரிய திட்டங்களுக்கான அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்ந்து நிராகரிக்கபட்டு வருவது கவலைக்குரியது. தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிரான நிபந்தனைகளை ஒன்றிய அரசு விதித்து, அத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் பெருந்தடைகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், திட்டங்கள் முற்றிலும் முடங்கும் சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. இது, மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பெருந்தடையாக உள்ளது.
மிக்ஜாம், பெஞ்சல் போன்ற இயற்கைப் பேரிடர்களால் தமிழ்நாடு பெரும் சேதத்தைச் சந்தித்த நேரங்களில் மாநிலத்தின் நிவாரண உதவி கோரிக்கைகளை முழுமையாக ஏற்காமல் சொற்பமான தொகையை விடுவித்தது ஏமாற்றம் தருகிறது. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் ஆண்டுப் பணித் திட்டத்திற்கான தொகையை ஒன்றிய அரசு முழுமையாக விடுவிக்காமல் உள்ளது. ரூ.3.548 கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவிக்காததன் காரணமாக, அத்திட்டங்களுக்குரிய முழுச் செலவையும் மாநில அரசே ஏற்றுள்ளது.
பள்ளிக் குழந்தைகளின் நலன் காத்திட நமது முதல்வர் இந்தியாவிலேயே முதன்முறையாக ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’ அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் தற்போது 19.34 லட்சம் குழந்தைகள் பயன் பெற்று வருகின்றனர். நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுக்கும் தேவையான ஊட்டச்சத்து உறுதி செய்யப்பட்டுள்ளது மட்டுமின்றி, அவர்களின் பள்ளி வருகையும், கற்றல் திறனும் உயர்ந்துள்ளதை மாநில திட்டக்குழுவின் ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
தோழி விடுதி திட்டத்தால் தொழிற்சாலைகளில் அதிக பெண் ஊழியர் பணிபுரியும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது: தங்கள் இருப்பிடங்களை விட்டு நகரங்களுக்கு வரும் பெண்கள் நவீன வசதிகளுடன் நியாயமான கட்டணத்தில் பாதுகாப்பான தங்கும் வசதியை பெற்றிட 19 ‘தோழி விடுதிகள்’ ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய திட்டங்கள் மூலம் இந்தியாவிலேயே தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களை அதிகமாகக் கொண்ட (40.3%) மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
கடந்த நிதியாண்டில் 11.19 விழுக்காடு என்ற உயரிய பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது. கடந்த 14 ஆண்டுகளில் இத்தகைய உயர் வளர்ச்சியை நமது மாநில அடைவது இதுவே முதல்முறை. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.
பெரியார் முழக்கம் இதழ் 22012026
