பவானியில் இளைய தலைமுறையின் கலந்துரையாடல்
Gen-Z இளைய தலைமுறைகளை ஈர்க்கும் வகையில் திராவிட இயக்க சிந்தனையாளர்கள் சார்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சி 20.09.2026 காலை 10.00 மணி அளவில் ஈரோடு பவானியில் உள்ள பெஸ்ட் மஹாலில் நடைபெற்றது. சிந்தூரி இளங்கோவன் (பவானி நகர மன்றத் தலைவர்) வரவேற்புரையாற்றினார்.
என். நல்லசிவம் (தி.மு.க. ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளர்) எந்த ஒரு கருத்தையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாமல், அதன் வரலாறு என்ன?, அது ஏன் முன்வைக்கப்பட்டது?, சமூகத்தில் அதன் தாக்கம் என்ன? என்பதை இளைஞர்கள் கேள்வி கேட்டு ஆய்வு செய்ய வேண்டும் எனவும், நாம் இளைய சமுதாயத்தை ஊக்குவித்து அரசியல் படுத்த வேண்டும் என உரையாற்றினார். கவிஞர் கோனூர் வைரமணி (தி. மு. க. பேச்சாளர்), நந்தகுமார் (தி. மு. க. இளம்பேச்சாளர்), வடிவேல் (மொழிப்போர் தியாகி) ஆகியோர் உரையாற்றினர்.
அதர்மம் மனோஜ்குமார் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்) பேசுகையில் ஜென்சி இளைஞர்கள் சமூக ஊடகங்களில் வரும் குறுகிய காணொளிகள் அல்லது பரபரப்பான பதிவுகளை மட்டும் நம்பாமல், வரலாற்று நூல்கள், தலைவர்களின் உரைகள், அரசியல் ஆவணங்கள் ஆகியவற்றையும் படிக்க வேண்டும். சமூகநீதி குறித்த விவாதங்களில் பங்கேற்க வேண்டும் எனவும், நாம் கையில் எடுக்க வேண்டிய ஆயுதமாக சமூக வலைதளங்களில் இளைஞர்களுக்கு, நம் கொள்கைகளைக் கொண்டு செல்ல வேண்டும் எனக் கூறி சிறப்புரையாற்றினார்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில் திராவிட இயக்கம் உருவான வரலாறு, பெரியார் முன்வைத்த சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு கருத்துகள், அண்ணா வலியுறுத்திய சமூகநீதி மற்றும் மாநில உரிமைகள் போன்ற சிந்தனைகளை இன்றைய தலைமுறைக்கு புரியும் வகையில் எடுத்துக் கூறியும், நீதிக்கட்சி தமிழ்நாட்டு மக்களுக்காற்றிய பங்கு குறித்தும் நிறைவுரையாற்றினார்.
இறுதியாக வழக்கறிஞர் நவீன்குமார் (தி.மு.க.) நன்றி கூறினார். நிகழ்ச்சியை பவானி பூபதிராஜா தி.மு.க. ஏற்பாடு செய்தார். ப.ரத்தினசாமி (கழக மாநில அமைப்புச் செயலாளர்), காவை ஈஸ்வரன் (தலைமைக் குழு உறுப்பினர்), ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைப் பொறுப்பாளர்கள் மற்றும் தி.மு.க. பொறுப்பாளர்களும், கலந்துகொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 08102026
