தனியார் பல்கலைக்கழக மசோதாவைக் கைவிட வேண்டும்!
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி எந்த விவாதங்களும் இன்றி அவசர அவசரமாக சமூக நீதிக்குக் குழிபறிக்கும் மாநில பல்கலைக்கழகம் மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறது.
கல்வியைத் தனியார் மயமாக்கி, விளிம்பு நிலை மக்களுக்குக் கட்டணச் சுமையைத் திணிப்பதோடு, இட ஒதுக்கீடு கொள்கைக்கும் பேராபத்தை உருவாக்கும் மசோதா இது.
தமிழ்நாட்டில் அரசு பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர மாநில தனியார் பல்கலைக்கழகம் (State Private University) 2019 ஆம் ஆண்டில் அஇஅதிமுக ஆட்சியில் அறிமுகமானது.
100 ஏக்கர் நிலமும் 50 கோடி நிரந்தர வைப்புத் தொகை இருந்தால் தனியார் பல்கலைக்கழகத்தைத் தொடங்கலாம் என்று அஇஅதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் 9 பல்கலைக்கழகங்கள் இப்போது இயங்குகின்றன. 2025ல் திமுக ஆட்சி இந்த நிபந்தனைகளைத் தளர்த்த முன்வந்த போது எதிர்ப்புகள் வந்தன. திமுக ஆட்சி திட்டத்தைக் கைவிட்டது. இப்போது தவெக ஆட்சி எந்த விவாதமும் இல்லாமல் சென்னையில் 12 ஏக்கர் நிலமும், மற்ற மாநகராட்சிகளில் 18 ஏக்கர் நிலமும், இதரப் பகுதிகளில் 25 ஏக்கர் நிலமும் இருந்தாலே தனியார் பல்கலைக்கழகத்தை தொடங்கலாம் என்று மசோதா நிறைவற்றியுள்ளது. வைப்புத் தொகையும் ரூ.25 கோடியாக குறைத்துள்ளது.
இதன்படி தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாறுகின்றன. சென்னையைச் சுற்றியே 100 பல்கலைக்கழகங்கள் உருவாகும் தகுதி பெறுகின்றன. இப்படி தனியார் பல்கலைக்கழகங்கள் புற்றீசல் போல் பரவினால் விளிம்பு நிலை மாணவர்கள் கடும் நெருக்கடியைச் சந்திப்பார்கள்.
இப்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு குறைந்த கட்டணம் வாங்கப்படுகிறது. 69 விழுக்காடு இட ஒதுக்கீடு உறுதியாகிறது. இந்தக் கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகங்களாக இந்தச் சட்டத்தின் வழியாக மாறும் போது கட்டண வரம்பு உயர்ந்து, இட ஒதுக்கீடு உரிமையும் பறிபோகிறது.
இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள வைப்புத்தொகை ஏற்கனவே 100 ஏக்கரில் தொடங்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும் என்று மசோதா கூறுகிறது. இதனால் ஒரு வளாகத்துக்குள்ளேயே 7 பல்கலைக்கழகங்களை தொடங்கலாம். தவிர 12 ஏக்கரில் தொடங்கப்படும் பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, சட்டக் கல்லூரி என்று எதை வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். இவையெல்லாம் போக, அந்த வளாகத்தில் விளையாட்டு மைதானம், விடுதி வசதி போன்றவற்றுக்கு இடம் இருக்குமா? என்றே தெரியாது.
`மாநில அரசின் பல்கலைக்கழகங்களில் பெரும்பாலானவை, பல ஆண்டுகளாக துணைவேந்தர்கள் இல்லாமல், நிர்வாகம் முடங்கி, மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், அதைப் பற்றி அக்கறை காட்டாமல் இந்த மசோதாவுக்கு இப்போது என்ன அவசரம்? என்பதே கல்வியாளர்களின் நியாயமான கேள்வி.
ஏற்கனவே கடந்த 25 ஆண்டுகளாக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் தனியார் பல்கலைக்கழகங்களே அதிகம். இந்த பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டுக்கான இடங்கள் குறைவு. கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
அனைத்து அரசியல் கட்சிகளிலும் கல்வி வணிகம் நடத்தும் தலைவர்கள் இருப்பதால் இந்த மசோதாவுக்கான எதிர்ப்புகள் புறந்தள்ளப்படுகின்றன.
இந்தப் புதிய மசோதாவின் வழியாக சமூகநீதியின் நோக்கத்தை தமிழ்நாடு அரசு சிதைக்கிறது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். தமிழ்நாடு அரசு இந்த மசோதாவைக் கைவிட வேண்டும்.
பெரியார் முழக்கம் இதழ் 08102026
