GenZ இளைஞர்களும் பெரியாரும் கோவையில் கருத்தரங்கம்

தந்தை பெரியாரும் GenZ இளைஞர்களும் என்ற தலைப்பில் கோவை மாவட்ட கழகம் சார்பில் 19.09.2026 அன்று மாலை 5.00 மணி அளவில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள திருமூர்த்தி லே அவுட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது. கோவை மாநகர அமைப்பாளர் நவீன்குமார் தலைமை வகித்தார். கோவை மாநகரத் துணைத் தலைவர் சக்தியமூர்த்தி வரவேற்புரையாற்றினார். சவுந்தர்யா, நிலவழகன், கதிரவன், சுதர்சன், அப்ரித் ஆகிய தோழர்கள் முன்னிலை வகித்தனர்.
அன்னூர் விஷ்ணு பேசுகையில், GenZ இளைஞர்களுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் ஒரு நெடிய தொடர்பு இருக்கிறது. பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், வாளாடி பெரியசாமி உள்ளிட்ட தலைவர்கள் எல்லாம் தன்னுடைய மாணவர் பருவத்திலேயே பொது வாழ்விற்கு வந்தவர்கள். தன்னை தமிழ்ச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக ஒப்படைத்துக் கொண்ட மகத்தான GenZ இளைஞர்கள்தான். இவர்களை இளைஞர்களாகிய நம்மோடு இணைத்தவர் தலைவர் தந்தை பெரியார் என்பதையும் விரிவாகப் பேசினார்.
எழுத்தாளர் பாமரன் பேசுகையில் இளைய தலைமுறை இளைஞர்கள் அரசியல் தெளிவு இல்லாமல் இருப்பவர்களை நாம் கேலி செய்யாமல் அவர்களுக்கு அரசியல் தெளிவினை ஏற்படுத்த வேண்டும் எனவும், பெரியார் பற்றியும், திரைத்துறை, கலை இயக்கத்தில் திராவிடக் கொள்கை சிந்தனைகளைப் பற்றியும் இளைஞர்கள் வாழ்வில் முன்னேற முற்போக்கு சிந்தனைகளை எடுத்துக்கூறியும் சிறப்புரையாற்றினார்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில் தந்தை பெரியார் மீதான விமர்சனங்களும், வரலாற்று ஆதாரங்களின்றி பொதுமக்களிடையே அள்ளிதெளிக்கும் பிற்போக்கு சக்திகளின் அவதூறுகளைப் பற்றிய கேள்விகளுக்கும், இட ஒதுக்கீடு வரலாறு , நீட், 10% இடஒதுக்கீடு, திராவிடர் இயக்கம் குறித்த வரலாறுகளை விளக்கிப் பேசினார்.
இளைஞர்கள், மாணவர்களின் கேள்விகளுக்கு கழகத் தலைவர் விளக்கமாக பதிலளித்தார். சாலை வழியாக செல்லும்போது வாழைப்பழத் தோலை பார்த்ததும், தாண்டி குதித்துவிட்டு அப்பாடா நாம் விழவில்லை, என மட்டும் நினைக்காமல் மற்றவர்களும் விழாமல் இருக்க, வாழைப்பழத் தோலை குப்பையில் போட்டுச் செல்லுங்கள். அப்படித்தான் நாங்களும் கொள்கை மற்றும் பொதுப்பணிகளை செய்து வருகிறோம்; நீங்களும் செய்ய முன்வாருங்கள் என இளைஞர்களிடம் கூறி நிறைவுரையாற்றினார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணா நகருக்கு ஜாதியத் தீண்டாமையைப் பின்பற்றி அரசுப் பேருந்து 21 செல்லாமல் இருந்தது. இந்தக் கொடுமையை வெளிக் கொண்டு வந்து அதற்காக தொடர்ந்து போராடி வெற்றிபெற பெரும் பங்கு வகித்த கழக கோவை மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், கோவை மாநகரத் தலைவர் நிர்மல்குமார், கிருஷ்ணன் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
கழகத் தலைவர் முன்னிலையில் சவுந்தர்யா, லோகேஷ் ஆகிய தோழர்கள் தங்களை கழகத்தில் இணைத்துக்கொண்டனர். இறுதியாக கோவை மாநகர துணைச் செயலாளர் தரணி நன்றிகூறினார். இளைஞர்கள், மாணவ, மாணவிகள் என 70-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 24092026

You may also like...