மதக்கலவரத்தை தூண்டும் நீதிபதிகளுக்கு மகுடம்!
மதக்கலவரத்தை தூண்டும் நீதிபதிகளுக்கு மகுடம்!
ஆர்.எஸ்.எஸ் அமைப்பை புலனாய்வு செய்து ‘கேரவன்’ பத்திரிக்கை விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் ஆர்.எஸ்.எஸின் சட்டப்பிரிவான ஏ.பி.ஏ.பி. அமைப்பு நீதித்துறையில் ஊடுருவி இருக்கும் அதிர்ச்சியான தகவல்களை அதன் அதிகாரபூர்வ பதிவேடுகளில் இருந்து அம்பலப்படுத்தி இருந்தது. நீதிபதிகளாக, வழக்கறிஞர்களாக, சட்டத்துறை அதிகாரிகளாக பல்வேறு மட்டங்களில் ஊடுருவி தங்களின் இந்துத்துவா கொள்கைக்காக நீதித்துறையை பயன்படுத்தி வருகிறார்கள். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கும் தீர்ப்புகளும்,சட்டத்துக்கு எதிரான எல்லை மீறிய செயல்பாடுகளும் இதற்கு சான்றாக நிற்கின்றன. இதற்கான வெகுமதி எதிர்காலத்தில் இவர்களுக்கு காத்திருக்கிறது.
அதே நேரத்தில் மதவாத சக்திகளின் மிரட்டலுக்கு பணியாமல் நேர்மையாக மனித உரிமைக்காக குரல் கொடுத்த சென்னையைச் சேர்ந்த மற்றொரு நீதிபதியை பற்றியும் குறிப்பிட வேண்டும். ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் பழிவாங்கலுக்கு உள்ளான.
இந்த நீதிபதிக்கு இப்போது ஐ.நா.மனித உரிமை ஆணையம் மிக உயர்ந்த பதவியை வெகுமதியாக வழங்கி கவுரவித்திருக்கிறது. அவரது பெயர் “சீனிவாச முரளிதர்.” பாலஸ்தீன ஆக்கிரமிப்புப் பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்த மனித உரிமை மீறல்களை புலனாய்வு செய்து அறிக்கை தரும் மூவர் குழுவுக்கு இவர் தலைமை தாங்குகிறார். 1980 களில் சென்னையில் வழக்கறிஞராக தொழிலை தொடங்கியவர் பிறகு உச்சநீதிமன்றம் சென்று மனித உரிமைகளுக்கான வழக்குகளில் வாதாடி மனித உரிமையாளராக தன்னை அடையாளப்படுத்தியவர்; மனித உரிமை ஆணையத்தின் வழக்கறிஞராக செயல்பட்டவர். உச்சநீதிமன்ற வளாகத்தில் தனது மாருதி கார் வாகனத்தையே அலுவலகமாக்கி மனித உரிமைகளுக்கான வழக்குகளை நடத்தி புகழ் பெற்றவர்.
கோபால் விஷ வாயு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதற்கும், டெல்லியில் சீக்கியர்கள் படுகொலையை நடத்திய குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதிலும் உறுதியாக நின்று தீர்ப்பு வழங்கியவர். அவரது திறமையால் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியானார். நீதிபதிகளுக்கு தரப்படும் காலனி கால மரபுகளை மறுத்ததோடு தன்னை ‘சார்’ என்று அழைத்தால் போதும் என்று அறிவுறுத்தியவர்.
2020 ஆம் ஆண்டு டெல்லியில் மிகப்பெரும் மதக் கலவரம் வெடித்தது. மூன்று பாஜக தலைவர்கள் வெறுப்பு பேச்சால் உருவான இந்த கலவரத்தில் இஸ்லாமியர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். காவல்துறையின் அலட்சியத்தை வன்மையாகக் கண்டித்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்க உத்தரவை அவர் பிறப்பித்தார். அதன் காரணமாக நள்ளிரவில் ஒன்றிய பாஜக ஆட்சி அவரை இடமாற்றம் செய்து பழிவாங்கியது. உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் திறமையான இந்த நீதிபதியை தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பரிந்துரை செய்த போது தமிழ்நாட்டுக்கு அவரை அனுப்பி வைக்க ஒன்றிய பாஜக ஆட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இவர் வந்துவிட்டால் தங்களின் மதவாத அரசியலை நடத்த முடியாது என்ற ஒரே காரணத்தினால் ஒன்றிய ஆட்சி இந்த நியமனத்தை ஏற்க மறுத்தது. வேறு வழி இன்றி கொலிஜியம் இவரை ஒரிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றியது. 2023 ஆம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றார். நீதிமன்ற வரலாற்றில் இல்லாத அளவுக்கு பெரும் எண்ணிக்கையில் வழக்கறிஞர் திரண்டு அவருக்கு பிரியா விடை கொடுத்ததை வழக்கறிஞர்கள் பெருமையுடன் கூறுகிறார்கள். பதவி ஓய்வு பெற்ற இரண்டு ஆண்டுகளில் இப்போது ஐ.நா. அவரை அழைத்து முக்கிய பொறுப்பை வழங்கியிருக்கிறது.
மதக்கலவரத்தை தூண்டும் நீதிபதிகளுக்கு மகுடம்!
மனித உரிமைகளுக்காக சட்டத்தின் வழி நிற்கும் நீதிபதிகளுக்கு அவமதிப்பு! இதுவே இந்துத்துவத்தின் மனுநீதி!”
விடுதலை இராசேந்திரன்,
முகநூல் பதிவு. 08.12.25
பெரியார் முழக்கம் இதழ் 11122025
