அக்ரஹாரத் தடையை தகர்த்த கொக்கூர்
வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரை தொடரை முரசொலியில் ர.பிரகாஷ் எழுதி வருகிறார். கொக்கூர் வரலாறு இது. கடந்த இதழின் தொடர்ச்சி…
கொக்கூர் கிராமத்திற்குள் அக்ரஹாரம் வழியாகப் பெரியார் நுழைந்தபோது, அந்தத் தெருவில் பிறர் நுழையக் கூடாது என தடுக்கப்பட்டிருந்த தென்னை மரத் தடுப்புகள் தகர்த்து வீசப்பட்டன. பண்ணையார் ஐயர் குடும்பம் கதவைத் தாழிட்டுக்கொண்டது. மேல் சட்டையோடு, காலில் செருப்பு அணிந்துகொண்டு அக்ரஹாரத் தெருவுக்குள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் நுழைந்ததைக் கண்டு கொக்கூர் மக்கள் சுயமரியாதை உணர்வு பெற்றனர். அங்கிருந்து அரை கிலோ மீட்டருக்கு அப்பால்தான் கூட்டம் நடைபெற்றது. ஆனால் பெரியாரின் பேச்சை ஐயர் கேட்க வேண்டுமென்று அக்ரஹார முனையில் ஒலிபெருக்கி அமைத்திருந்தனர்.
3 மணி நேரம் பெரியார் பேசினார். கொக்கூர் மக்களின் மூளைகளில் இடப்பட்டி ருந்த அடிமை விலங்கு அறுபட்டது. அதன்பின்னர்தான் எல்லோரும் கல்வி கற்றனர். அக்ரஹாரத் தெருவுக்குள் அனைவரும் துணிந்து செல்லத் தொடங்கினர். சிறுவனாக இருந்த பெரியாரியவாதி குஞ்சிதபாதம் அப்பகுதியின் திராவிடர் கழகத் தலைவரானார். முருகையன் செயலாளரானார். சுந்தரேசன் பொருளாளரானார்.
1957-இல் பெரியார் அறிவித்த சட்ட எரிப்புப் போராட்டத்தில் கொக்கூரில் இருந்து 4 பேர் பங்கேற்றனர். காவல்துறை கைது செய்யாததால், அதிருப்தி அடைந்து குத்தாலத்திற்குச் சென்று மீண்டும் கொளுத்தினர். இதே காலகட்டத்தில் பெரியாரியவாதி குஞ்சிதபாதத்தின் சகோதரர் கோவிந்தசாமி சிங்கப் பூரில் இருந்தார். மாதிரிமங்கலம் என்.டி. சாமியின் மனைவியின் சகோதரரான வீரையன் அப்போது சிங்கப்பூரில் திராவிடர் கழகத் தலைவராக இருந்தார். வீரையனே தேடிச்சென்று கோவிந்தசாமியைச் சந்தித்து திராவிடர் கழகத்தில் இணைத்தார்.
1959-இல் கோவிந்தசாமி கொக்கூர் திரும்பினார். அவரும் இந்தி எழுத்துக்கள் அழிப்பு, அஞ்சலக மறியல் என பல போராட்டங்களில் பங்கெடுத்து, சிறைக்குச் சென்றார். தீவிர கடவுள் பக்தியாளரான கோவிந்த சாமியின் அம்மா சிவபாக்கியத் தம்மாள் பகுத்தறிவாளராகி, கறுப்புப் புடவையுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார். அவரோடு மற்ற பெண்களும் வரத் தொடங்கினர். அந்த ஊரில் யார் இறந்தாலும், இறுதி ஊர்வலம் மேற்கு நோக்கித்தான் செல்லும். ஆனால் சிவபாக்கியத் தம்மாளுக்கு 1979-இல் உடல்நலம் குன்றியபோது, தனது உடலை கிழக்கு நோக்கி எடுத்துச் செல்லுங்கள் என்றார். கிழக்கே, அக்ரஹாரத் தெரு வழியாக எடுத்துச் செல்லுங்கள் என்பதைத்தான் அப்படிச்சொன்னார். அதன்படியே இறுதி ஊர்வலம் நடந்தது.
பேரறிஞர் அண்ணா முதலமைச்சராகி பெரியாரைச் சந்தித்த பின்பு, கொக்கூரில் உள்ள வீடுகள் எங்கும் தி.மு.கழகக் கொடியும் பறக்கத் தொடங்கியது. அங்கிருந்து 1 கிலோ மீட்டரில்தான் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் வீடு இருந்தது. கொக்கூர் கொள்கைவாதிகளோடு மிக நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்தார் கோ.சி.மணி.
முருகையன் இருமுறையும், கோவிந்தசாமி ஒரு முறையும் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தனர். கொக்கூரில் 100% எல்லோரும் படித்துவிட்டனர். எண்ணற்ற ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடக்கின்றன. முதல் சுயமரியாதைத் திருமணமே முருகையன் திருமணம்தான். அது அண்ணா ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நடந்தது.
கொக்கூர் கழ(ல)கக்காரர்களின் வாழும் சாட்சியமாக முருகையன் இன்றும் இருக்கிறார். ஆனால், பார்ப்பனர்கள் ஒருவர் கூட இப்போது அங்கே இல்லை. யாருக்கும் யாரும் ஆதிக்கம் இல்லை என பெரியாரியச் சிந்தனையில் ஊறிய கருப்பு-சிவப்பாக இன்றும் அந்த ஊர் காட்சியளிக்கிறது.
பெரியார்முழக்கம்இதழ்07082025
