குமாரபாளையத்தில் இருசக்கர வாகனப் பேரணி
குமாரபாளையத்தில் இருசக்கர வாகனப் பேரணியாகச் சென்று அரசு அலுவலகங்களில் இனிப்புடன் கூடிய வாழ்த்து அட்டை வழங்கினர். இருசக்கர வாகன ஊர்வலம் குமாரபாளையம் காவேரி நகரில் தலைமைக் குழு உறுப்பினர் கேப்டன்.அண்ணாதுரை தலைமையில் மாவட்டச் செயலாளர் மு.சரவணன், மாவட்ட அமைப்பாளர் அ.முத்துப்பாண்டி, மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் முன்னிலையில் நடைபெற்றது. நகரச் செயலாளர் சே.வடிவேல் தலைமை ஏற்க நகரத் தலைவர் மீ.தா தண்டபாணி இருசக்கர வாகனப் பேரணியை துவக்கி வைத்தார். குமராபாளையம் பேருந்து நிலையத்தில் பெரியார் படத்தை திறந்து வைத்தார். ஆட்டோ நிறுத்தத்தில் கலை.கார்த்தி பெரியார் படத்தை திறந்து வைத்து இனிப்பு வழங்க தோழர்கள் முழக்கமிட்டனர். அனைவருக்கும் வாழ்த்து அட்டையும் இனிப்பும் வழங்கப்பட்டது. காவல் நிலையம் சென்று அங்குள்ள அனைவருக்கும் வாழ்த்து அட்டை வழங்கினர்.
நகராட்சி அலுவலகம் எதிரில் நகரத் தலைவர் செல்வி ஜெராக்ஸ் கடையில் பெரியார் படத்தைத் திறந்து வைத்து, ரேணுகா (திமுக) மாலை அணிவித்தார். தாசில்தார் அலுவலகம் அருகில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு பிரபாகரன் மாலை அணிவித்தார். இந்தி எதிர்ப்பு போரில் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவுத் தூணுக்கு மாலை அணிவித்தனர். அரசு கலை அறிவியல் கல்லூரி எதிரில் உள்ள காமராஜர் சிலைக்கு வசந்த் மாலை அணிவித்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேவி-மாதேஷ் குடும்பத்தார் குளிர்பானம் வழங்கினர். தந்தை பெரியார் சமத்துவபுரத்தில் உள்ள சிலைக்கு சுதாமணி ராஜ் மாலை அணிவித்தார். தலைமைக் கழகப் பேச்சாளர் நங்கவள்ளி அன்பு வாழ்த்துரை வழங்கினார். விவேகானந்தன் அனைவருக்கும் நன்றி கூறினார். பா.செல்வம், தேமுதிக பொறுப்பாளர் மகாலிங்கம் உணவு ஏற்பாடு செய்தார். பள்ளிபாளையம் நகரச் செயலாளர் பிரகாஷ், நகரத் தலைவர் நாகராஜ், கோபி காளிப்பட்டி பெரியண்ணன், ஓவியர் பழனிச்சாமி, பவானி பூபதி, சங்ககிரி தலித் குமார், அண்ணாதுரை, திருச்செங்கோடு மனோஜ், காவிரி நகர் செல்வம், ரேணுகா, திராவிட மணி, மணியம்மை கார்த்தி, குமார், தி.க மாவட்டக் காப்பாளர் ஆக்கு குமார், தி.க மாவட்டத் தலைவர் சு.சரவணன், தமிழரசன், எம்.ஜி.ஆர் நகர் வடிவேல், கண்ணகி ஆகியோர் குடும்பத்துடன் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்புகள், பொங்கல் வழங்கி சிறப்பித்தனர். 27 ஆம் தேதி தலைவர் கொளத்தூர் மணி பங்கெடுக்கும் குமாரபாளையம் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து தோழர்கள் ஆலோசனை நடத்தினர்.
திருச்செங்கோடு: நகர கழகம் சார்பில் காலை 9 மணியளவில் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நகரத் தலைவர் பூபதி தலைமையில் அண்ணா சிலை அருகில் கழக ஏற்பாட்டில், திமுக, தமிழ்ப் புலிகள் கட்சி, தி.க உள்ளிட்ட அமைப்புகள் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்றனர். திமுக நகர கழகத் தலைவர் கார்த்திகேயன், நடேசன், நகராட்சி மன்றத் தலைவர் நளினி, சுரேஷ்பாபு மற்றும் திமுக தோழர்கள் ஆகியோரும், தமிழ்ப் புலிகள் மாநில துணைப் பொதுச் செயலாளர் சொல்வ வில்லாளன் உள்ளிட்ட தோழர்களும் கலந்து கொண்டனர்.
(பெரியார் பிறந்தநாள் செய்திகள் அடுத்த இதழிலும் தொடரும்)
பெரியார் முழக்கம் இதழ் 24092026
