தமிழ்நாடு மாணவர் கழகம் இளைஞரணி இணைந்து நடத்திய மாணவர்களுக்கான ஓவியப் போட்டி; பங்கேற்ற மாணவிகள் நெகிழ்ச்சி உரை

தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழகம் மற்றும் திராவிடர் விடுதலைக் கழக இளைஞரணி இணைந்து நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி “GEN-Z PERIYAR 2K26” செப்-20 அன்று கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் ஷர்மிளா தலைமை தாங்கினார்.
ஓவியப் போட்டியில் 25-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முதல் பரிசை (ரூ.5,000/- மற்றும் புத்தகம்) பவானி, இரண்டாம் பரிசை (ரூ.3000/- மற்றும் புத்தகம்) கோபிகா, மூன்றாம் பரிசை (ரூ.2000/- மற்றும் புத்தகம்) ஜெசிதா ஆகியோர் வென்றனர். சுபாஸ்ரீ, பார்கவி, புவனேஷ் ஆகிய தோழர்களின் ஓவியங்களுக்கு சிறப்பு பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டது. சிறப்புப் பரிசுக்கான தொகையை ஓவியர் பரதன், வழக்கறிஞர்கள் இரண்யா, இளவரசன் மற்றும் எழிலரசன் வழங்கினர். போட்டியாளர்கள் அனைவருக்கும் நூல்களை ‘எட்வின் புத்தக நிலையம்’ சார்பில் வழங்கப்பட்டது.
நிகழ்வை சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண் மற்றும் மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் பேரன்பு ஆகியோர் ஒருங்கிணைத்தனர். போட்டிக்கு ஓவியர் பரதன் நடுவராக இருந்து பரிசுக்குரிய ஓவியங்களைத் தேர்ந்தெடுத்தார். நீட் எதிர்ப்புக் கூட்டியக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிரத்தினம் வாழ்த்துரை வழங்கினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் முதல் கையெழுத்திட்டார். ஓவியப் போட்டியில் வென்றவர்களுக்கு பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ஓவியர் பரதன், கக்காஷி (WSR), வழக்கறிஞர்.சிவா (The Next public) ஆகியோர் பரிசுகள் வழங்கி, வாழ்த்துரையாற்றினர். கலந்துகொண்ட அனைத்து போட்டியாளர்களின் ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. சைதாப்பேட்டை இசக்கிமுத்து, ஆவடி செந்தில் ஆகியோர் தங்களை இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர்.
போட்டியில் மாணவிகள் பெருமளவில் பங்கேற்றனர். பெண்ணுரிமை ஜாதி ஒழிப்பில் பெரியாரின் பங்களிப்பை தங்களின் கற்பனைத் திறனில் ஓவியங்களாகத் தீட்டியிருந்தனர். ஓவியங்கள் சிறப்பாக இருந்ததால் கூடுதலாக மூன்று பேருக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன. போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் ‘பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்’ நூல் தங்களிடம் மாற்றத்தை உருவாக்கியதை நெகிழ்ச்சியுடன் கூறினார்கள். ஒரு இஸ்ஸாமிய மாணவி தனது குடும்பத்துக்குத் தெரியாமல் இந்த நூலைப் படித்து முடித்ததைக் குறிப்பிட்டார். பெரியார் பெண்ணடிமை, ஜாதி ஒழிப்புக்கு எதிராகவே கடவுள் மறுப்பை பேசியதை ஒரு மாணவி விளக்கிப் பேசினார். தனது ஓவியத்திலும் இந்த கருத்தையே வரைந்தார்
நிகழ்வில் தலைமை நிலையச் செயலாளர் தபசி.குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட துணைச் செயலாளர் இராவணன், மாவட்ட அமைப்பாளர்கள் எட்வின் பிரபாகரன், தட்சிணாமூர்த்தி, உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
பெரியார் முழக்கம் இதழ் 24092026

You may also like...