கொளத்தூர் குலுங்கியது
சேலம் மாவட்டம் மகளிர் அணி சார்பில் 24.05.2025 அன்று நாத்திகர் விழா அதை ஒட்டி அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம்! மூடநம்பிக்கைகளை ஒழிப்போம் என்கிற முழக்கத்தோடு மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி மற்றும் நாத்திகர் விழா நடைபெற்றது.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து பெண்கள், குழந்தைகள், தோழர்கள் மட்டும் தனி வாகனத்தில் மாநாட்டுக்கு வந்தனர். பெண்கள் மட்டுமே சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கர்ப்பிணிப் பெண்களும், கைக்குழந்தைகளுடனும் பெண்கள் பங்கேற்றனர். குழந்தை பிறந்து 20 நாட்களே ஆன கிருத்திகா அலகு குத்தி பேரணியில் பங்கேற்றார்.
உக்கம்பருத்திக்காடு சு. கோமதி, காவலாண்டியூர் க.கலைச்செல்வி, கொளத்தூர் அழகேஸ்வரி, உக்கம் பருத்திக்காடு கு.லதா, மாதம்மாள் ஆகியோர் பேரணியை ஒருங்கிணைத்தனர்.
சேலம் (கொளத்தூர், காவலாண்டியூர், மேட்டூர், மேட்டூர் ஆர்எஸ், மேச்சேரி, நங்கவள்ளி, கொங்கணாபுரம், ஏற்காடு, ஆத்தூர்) போன்ற பகுதிகளில் இருந்தும் ஈரோடு வடக்கு, தெற்கு, திருப்பூர், கோவை, நாமக்கல், திருச்சி, பொள்ளாச்சி, மடத்துக்குளம், சென்னை, மதுரை, தஞ்சாவூர், தென்காசி, தூத்துக்குடி, வேலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தோழர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி சிந்தனையாளர் இயக்கம் தீனா, பெங்களூர் தோழர்கள் சித்தார்த், மணிமொழி, பெங்களுரூ நாகரத்னா, சபானா, பாபு, விஜய், ஜார்ஜ் – (Educate and Organize), தெலுங்கானா (பைரி நரேஷ் (MNS) மூட நம்பிக்கை நிர்மூல சங்கம்), உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தோழர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மாநாட்டுக்கு நீதிமன்றத்தில் வாதாடி அனுமதி பெற்றுத் தந்த வழக்குரைஞர் திருமூர்த்தி மற்றும் அவரது சக வழக்கறிஞர்களுடன் பங்கேற்றார்.
மாலை 4 மணியளவில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி மு.கீதா தலைமையில் நடைபெற்றது. காயத்ரி பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் தீச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல், பறவைக்காவடி, கார் இழுத்தல், ஆணிப்படுக்கை, கண்ணாடி சில்லுகள் மேல் நடப்பது, நெருப்பு கக்குவது, மண்டைக் கட்டு போன்ற பல்வேறு மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்வுகளை செய்து இவைகளை கடவுள் உருவாக்கியதா? என்று முழக்கமிட்டனர். கடவுள், மதம், பெண்ணடிமை, ஜாதிக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தி நடந்து சென்றனர்.
வழிநெடுக கடவுள் மறுப்பு, அறிவியல் பூர்வமான கேள்விகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பேரணியை கண்டுகளித்தனர். மேலும் பலர் காணொளி எடுத்தனர்.
மேடை நிகழ்வாக பெரியார் பிஞ்சுகள் திராவிட மகிழ்நன், யாழினி பாடல்களை பாடினார்கள். ஆசிரியர் சிவகாமி, கொளத்தூர் கனலி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். காஞ்சி மக்கள் மன்றத்தின் புரட்சிகர கலைநிகழ்ச்சிகள் மற்றும் மேடை நாடகங்கள் உணர்ச்சியூட்டின. பெங்களூர் சிறுவர்கள் மூடநம்பிக்கை ஒழிப்புப் பாடலுக்கு சிறப்பாக நடனமாடினர்.
மேடையில் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்வுகளை இரண்யா, சரிதா, யாழிசை, தேன் மொழி (கண்ணாடிச் சில்லுகள் மேல் நின்று தன் 4 வயது மகளுடன்) செய்து காட்டினார்கள்.
தேன்மொழி-ஆனந்தி இணைந்து மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை நடத்தினர். தமிழ்நாட்டில் பெண்களே இந்த அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நடத்துவது இது ஒரு முன்மாதிரி. குறுகிய காலத்தில் நாத்திகர் விழாவுக்காக மந்திரமா? தந்திரமா கலையை கற்றுக் கொண்டனர். பெரம்பலூர் தாமோதரன் இந்த கலையை பெண்களுக்கு பயிற்றுவித்தார். சிற்பி இராசன் நிகழ்வில் கலந்து கொண்டார்.
சுதா(சேலம் மாவட்ட மகளிர் அணி தலைவர்) தலைமையில் விழா நிகழ்ச்சிகள் துவங்கின. ரா.சரஸ்வதி (சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்), ரா.ஆனந்தி (சேலம் மாநகர செயலாளர்), இந்திராணி (நங்கவள்ளி திவிக), ஜாஸ்மின் ஸ்ரீ (சேலம் மாவட்ட அமைப்பாளர்), அ.ச.அறிவுமதி (தமிழ்நாடு மாணவர் கழகம்) முன்னிலை வகித்தனர்.
காயத்ரி வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் வீ.சிவகாமி தொடக்கவுரையாற்றினர்.
ஏற்காடு சரிதா, காஞ்சி மக்கள் மன்றத்தின் ஜெசி, பேராசிரியர் சுந்தரவள்ளி (தமுஎகச), கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
கோவை சாந்தகுமார் தோழர்களுக்கு அழகுகளை குத்தினார்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றினார். சே.கோமதி நன்றி கூறினார்.
கடந்த மார்ச் 30-ம் நாள் ஏற்காட்டில் நடைபெற்ற மகளிர் ஒன்றுகூடல் கலந்துரையாடல் கூட்டத்தில் நாத்திகர் விழாவை பெண்களே நடத்துவது என்று முடிவு செய்யபட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக திருப்பூர், சேலம் பெண்கள் கடைவீதி வசூல், தனிநபர் வசூல் பணிகளையும், கொடி கட்டுவது, தீச்சட்டி வண்ணம் பூசுவது போன்ற மாநாட்டு ஏற்பாட்டு வேலைகளையும் பெண்களே முன்னின்று செய்தனர். சுதா, சரஸ்வதி, சிவகாமி ஒருங்கிணைப்பு பணிகளையும், அனைத்து மாவட்ட பெண் தோழர்களையும் அழைத்துப் பேசி அவர்களை திரளாகப் பங்கேற்கச் செய்தனர்.
மாநாட்டில் கிருத்திகா- தமிழ்செல்வன் இணையரின் பெண் குழந்தைக்கு கழகத் தலைவர் குயிலி எனப் பெயர் சூட்டினார்.
சேலம் மாவட்டத் தோழர்கள், பொறுப்பாளர்கள் ஒத்துழைப்புடன், மாநில நிர்வாகிகள் வழிகாட்டுதலுடன் மாநாடு நடைபெற்றது. கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
சென்னை கழகத் தோழர்கள் அருண், சூர்யா , குமார், எழில், அருண் (ஆட்டோ) ஆகியோர் இரண்டு நாட்களுக்கு முன்பே கொளத்தூர் வந்து மேடை வடிவமைப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
கழகத்தை சார்ந்த கொளத்தூர் கபிலன் ஸ்டுடியோ குழுவினரான விஜி, இளவரசன், கபிலன், வளவன் ஆகியோர் படங்கள் மற்றும் காணொளிகளை படமாக்கினர்.
பேரணி காட்சிகளை உடனடியாக எடிட் செய்து நிகழ்ச்சியிலேயே காணொளியை ஒளிப்பரப்பினார் கபிலன் ஸ்டுடியோ இளவரசன்.
பெரியார் முழக்க சந்தாவாக காவலாண்டியூர் பகுதிச் சார்பாக ஈஸ்வரன் (தலைமைக் குழு உறுப்பினர்) ரூபாய் 43,500 வழங்கினார்.
நாத்திக ஜோதி (ஈரோடு வடக்கு மாவட்ட கழகத் தலைவர்) ரூபாய் 7,500 பெரியார் முழக்க சந்தாவாக வழங்கினார்.
ஆசிரியர்கள் செல்வேந்திரன், வெங்கடேஷ், சரவணன் ஆகியோர் நாத்திகர் விழாவில் பங்கேற்ற தோழர்களுக்கு இரவு உணவு ஏற்பாடுகளை செய்தனர்.
-நமது செய்தியாளர்கள்.
பெரியார் முழக்கம் 29052025இதழ்
