நோபாள வெள்ளத்துக்கும் மூடநம்பிக்கை கதை
அண்மையில், நேபாளத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளத்தின் போதும் கதை கட்டத் தொடங்கினார்கள். நேபாளத்தின் பஞ்ச்கல் பகுதியில், பலஞ்சோக் பகவதி அம்மன் கோவில் இருக்கிறதாம்! கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி மாலை நேரத்தில் பூஜைகள் நடந்தபோது, பகவதி அம்மன் சிலையில் வியர்வைத் துளிகள் போன்ற ஈரப்பதம் இருந்ததைப் பக்தர்கள் கவனித்தார்களாம். பொதுவாக இந்த அம்மன் சிலைக்கு வியர்த்தால், ஏதோ ஒரு பெரிய இயற்கை பேரிடரோ, நெருக்கடியோ ஏற்படப்போகிறது என்பது உள்ளூர் மக்களின் நீண்டகால நம்பிக்கையாம்! இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்கத் தெய்வத்திடம் மன்னிப்பு கோரும் வகையில் கோவிலில் உடனடியாகப் பூஜை நடத்தியுள்ளனர். சிலைக்கு வியர்த்ததாகக் கூறப்பட்ட நிகழ்வு நடந்து, சரியாக நான்கு நாட்களுக்குப் பிறகு, அதாவது ஆகஸ்ட் 26-ஆம் தேதி, நேபாளத்தில் பயங்கரமான திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாம்! சரி, பரிகாரப் பூஜைகள் செய்தார்களே அதற்குப் பலன் என்ன கிடைத்தது? யோசிக்க வேண்டாமா?
எவரெஸ்டில் பனிப்பாறைகள் உருக மனிதச் சிறுநீரும் ஒரு காரணம் என நேபாள, அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் ஆய்வில் அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.
‘ரீஜனல் என்விரான்மெண்டல் சேஞ்ச்’ இதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு புதிய ஆய்வு, மலையேற்ற வீரர்களும், சுற்றுலாவாக மலையேறுபவர்களும் சங்கமிக்கும் எவரெஸ்ட் அடிவார முகாமில் நடைபெறும் மனித நடவடிக்கைகள் ‘கும்பு’ பனிப்பாறை உருகுவதற்குப் பங்களிக்கின்றன என்பதைக் கண்டறிந்துள்ளது.
நேபாளத்தின் நில மேலாண்மை அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த நில அளவை அதிகாரி ஒருவரை உள்ளடக்கிய பன்னாட்டுக் குழுவொன்று மேற்கொண்ட ஆய்வில் 2023-ஆம் ஆண்டின் வசந்த கால மலையேற்றப் பருவத்தின்போது, முகாமில் நடைபெறும் நடவடிக்கைகளின் மூலம் வெளியாகும் வெப்பத்தையும் ஆய்வு செய்துள்ளனர். இதில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG), மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றின் பயன்பாடும் அடங்கும். மேலும் மனிதச் சிறுநீர் வெளியேற்றத்தால் உருவாகும் வெப்பம், உலகளாவிய பருவநிலை மாற்றம் ஆகிய மூன்று முக்கியக் காரணிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். ஆம், சிறிய அளவில் அல்ல; மலையேற்ற வீரர்களும், வழிகாட்டிகளும் தங்கும் இந்த முகாமில் நாளொன்றுக்குச் சராசரியாக 6000 லிட்டர் சிறுநீரைப் பனியில் கழிக்கின்றனராம். இதனால், ஒரு பருவகாலத்தில் மட்டுமே, தோராயமாக 154 டன் பனிப் பாறைகள் உருகுவது கண்டறியப்பட்டுள்ளது.
பெரியார் முழக்கம் இதழ் 17092026
