கோடி கோடியாக சங்கிகளுக்கு குவியும் வெளிநாட்டுநிதி!
வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்று செயல்படும் நிறுவனங்களைக் குறிவைத்து ஒழிக்கும் முயற்சிகளில் ஒன்றிய ஆட்சி இறங்கியுள்ளது. இதற்கான FCRA சட்டத்தில் திருத்தங்களை செய்யும் மசோதாவை கடந்த மார்ச்-25ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. குறிப்பாக கிறிஸ்துவ நிறுவனங்களை முற்றாக ஒழித்துக் கட்டும் மசோதா இது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் சுட்டிக்காட்டி மசோதாவைத் திரும்பபெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
இந்த மசோதா அமலுக்கு வந்தால் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து நிதி பெறும் உரிமையை ஒன்றிய ஆட்சி ரத்து செய்ய முடியும். உரிமையை ரத்து செய்து விட்டால் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய நிதிக்கு மட்டும் தடையில்லை; மாறாக நிதி உதவியோடு நடத்தப்படும் மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், சர்ச்சுகள் இவைகளை அரசு தானாகவே கைப்பற்றிக் கொள்ள முடியும். இதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. அடிப்படை உரிமைகளையே முடக்கும் கொடூரமான சட்டம்!
வேத பார்ப்பனியம் “சூத்திர பஞ்சமர்களின்” கல்வி உரிமையைத் தடை செய்ததோடு சமஸ்கிருத பள்ளிகளை மட்டுமே நடத்தி வந்தது; இந்தியாவில் பள்ளிக்கல்வி முறையை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் அதிகாரி மெக்காலே என்ற கிறிஸ்தவர்தான். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கல்வி நிலையங்களைத் திறந்தது கிறிஸ்தவ நிறுவனங்கள்தான். குறிப்பாக தமிழ்நாட்டில் கிறிஸ்துவ நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகள் மிகச் சிறந்த சேவைகளை வழங்கி வருகின்றன. சங்கிகளுக்கு இந்த செயல்பாடுகள் எரிச்சல் ஊட்டுகின்றன.
சுனாமி வந்த போதும் கொரோனா காலத்திலும் ஜெயலலிதா “ஆசியால்” சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கிய போதும் ஓடோடி வந்து மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியது கிறிஸ்தவ, இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் தான். மோடி ஆட்சியில் ஏற்கனவே பல கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிதி நிறுத்தப்பட்டதால் பல நிறுவனங்கள் முடங்கி விட்டன. அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு பெற்ற பல நிறுவனங்களுக்கு அயல்நாடுகளில் இருந்து நிதி குவிந்து வருகிறது. இதற்கு எந்தத் தடையும் இல்லை.
ஆர்.எஸ்.எஸ் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் தனது துணை அமைப்புகளான இந்து சுயம்சேவக்; விசுவ இந்து பரிஷத்; சேவா இன்டர்நேஷனல் போன்ற அமைப்புகள் வழியாக வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் நிதி பெற்று வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இந்த அமைப்புகளின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் வழியாக ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்புகளான ஏகல் வித்யாலயா பவுண்டேஷன்; வனவாசி கல்யாண் ஆஷ்ரம்; சேவாபாரதி போன்ற அமைப்புகள் இந்த நிதியைப் பெற்று வருகின்றன.
மருத்துவ சேவை; கல்வித் தொண்டு; நிவாரண உதவிகள் என்ற பெயரில் இந்த நிதி வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த சேவைகள் எதுவும் செய்யாமல் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பரப்பவும் சாகாக்களை நடத்தவும், இந்துத்துவ அரசியலைப் பரப்பவுமே இந்த நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது .
இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கலாம்; ஆதாரங்களையும் கூறுகிறோம்.
இங்கிலாந்தில் சேவை கண்காணிப்பு ஆணையம் என்ற ஒரு அமைப்பு இயங்குகிறது (charity commision scrutiny) இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதி நன்கொடைகள் மக்கள் சேவைக்கு பயன்படுத்தாமல் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளைப் பரப்புவதற்கு பயன்படுத்தப்படுகிறது என்று குறிப்பிடுகிறது.
இங்கிலாந்தில் இருந்து மட்டும் ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்புகளுக்கு 2021 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சி அடையாதீர்கள்! 47.2மில்லியன் டாலர்! செலவிட்டது 28.1 மில்லியன் டாலர். கையில் முடக்கி வைத்திருப்பது 19.1 மில்லியன் டாலர் (178 கோடி ரூபாய்).
இந்த வரவுக் செலவு கணக்கு பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது காரணம் அது கோவிட் தொற்று நோயால் மக்கள் அவதியுற்ற ஆண்டு. அவர்களுக்கு உதவி செய்வதாகக் கூறி பெறப்பட்ட தொகை இது! மரணத்துடன் மக்கள் போராடிக் கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் கூட பெறப்பட்ட தொகையை முழுமையாக செலவிடாமல் 19.1 மில்லியன் டாலரை பதுக்கிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா காலத்தில் ஆர்.எஸ்.எஸ் களம் இறங்கி செயல்பட்டதாக எந்த செய்தியும் கிடையாது. இங்கிலாந்தின் சேவை கண்காணிப்பு ஆணையம் இது குறித்து தனது சந்தேகங்களை பதிவு செய்திருக்கிறது.
ஆண்டுதோறும் ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்புகள் பெற்று வரும் நிதி பற்றிய விவரங்கள் இந்திய வருவாய்த்துறை பதிவேடுகளில் காணக் கிடக்கின்றன கோடிக்கணக்கில் வெளிநாட்டு நிதிகள் குவிவது சான்றுகளோடு பதியப்பட்டுள்ளது.ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவை ஒட்டி தனது தலைமை அலுவலகத்தை நாக்பூரில் இருந்து டெல்லிக்கு மாற்றியது ; இதன் திறப்பு விழா ( பிரவேஷ்உத்சவ்)2025 பிப்ரவரி 19ஆம் தேதி நடந்தது. ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் மிகவும் எளிமையானவர்கள் என்ற பிம்பத்தை இந்த நிகழ்ச்சி தகர்த்து எறிந்தது.
5 லட்சம் சதுர அடியில் 12 அடுக்குகளை கொண்ட 3 மாளிகைகள் கட்டப்பட்டிருக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ்-காரர்களுக்கு வீடுகள்; வெளியூர்களில் இருந்து வருவோருக்கு தங்கும் விடுதிகள்; மருத்துவமனை; உணவு விடுதிகள்; கூட்ட அரங்குகள்; என்று கார்ப்பரேட் அலுவலகங்கள் போல் இந்த மாளிகைகள் எழுப்பப்பட்டுள்ளன இதற்கான செலவு ரூ150 கோடி என்று ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர்கள் செய்தியாளர்களிடம் கூறினர்.
இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களோடு அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் ஜே பி நட்டா பங்கேற்றுள்ளனர். இதற்குப் பின்னால் அதிர்ச்சிகரமான ஒரு செய்தி இருக்கிறது. இந்த மாளிகையை கட்டி எழுப்பியுள்ள ஆர்.எஸ்.எஸ் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் அல்ல; எந்த ஒரு சட்டத்தின் கீழும் கடந்த 100 ஆண்டுகளாக இந்த அமைப்பு தன்னைப் பதிவு செய்து கொள்ளாமலே செயல்பட்டு வருகிறது.
பதிவு செய்யப்படாத ஒரு அமைப்புக்கு எப்படி நிலம் வழங்கப்பட்டது? எப்படி கட்டிட அனுமதி தரப்பட்டது? இதற்கெல்லாம் விடையே கிடையாது! ஆனால் இந்துத்துவா எனும் மதவெறுப்புக் கண்ணோட்டத்தில் பதிவு செய்யப்பட்டு மக்கள் பணியாற்றும் கிறிஸ்துவ நிறுவனங்களின் பதிவுகளை ரத்து செய்யவும் உடைமைகளை பறிமுதல் செய்யவும் துடிக்கிறார்கள். இந்த மதவெறி சக்திகள் தான் அஇஅதிமுகவின் முகமூடியில் பதுங்கிக் கொண்டு தமிழ்நாட்டில் காலூன்றத் துடிக்கின்றன.
பெரியார் முழக்கம் இதழ் 09042026
