கருத்தரங்கு, குடும்ப விழா நிகழ்வுகளுக்கு தயாராகிறது சென்னை மாவட்டம்
சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், ஆக-23 அன்று மாலை 6 மணிக்கு கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
சமகால அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், கழகச் செயல்பாடுகள் குறித்தும் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தனது உரையில் குறிப்பிட்டார். ‘‘கழகத் தோழர்களுக்கிடையே நட்புணர்வையும், ஒருங்கிணைப்பையும் வலிமையாக்கும் நோக்கத்துடன் இந்தப் பரப்புரைப் பயணத்தை ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறோம். அந்த நோக்கத்தில் இந்தப் பயணங்கள் கழகத்துக்கு புத்துணர்வை உருவாக்கி வருகிறது’’என்றார். கட்சி அரசியல் வேண்டாம் என்று பெரியார் இயக்கம் நோக்கி, வரும் தோழர்கள் அரசியல் கட்சிகளின் பண்புகளாகிய சுய விளம்பரம், தன்முனைப்புகளை தவிர்த்துக் கொள்கை உணர்வுகளுக்கு முன்னுரிமை தரும் உளவியலை வளர்த்துக் கொள்ள வேண்டும். கழகத்தின் பதவிகள் செயல்பாட்டுக்கு உரியவைகளே தவிர, அதிகார மய்யம் அல்ல என்ற உணர்வோடு தோழமையை வளர்த்தெடுக்க வேண்டும்” என்றார்.
1996 ஆம் ஆண்டிலிருந்து பெரியார் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகமாக பயணித்து களப்பணிகளில் முன்னிலையில் நிற்கிறது சென்னை மாவட்டக் கழகம். பல்வேறு வழக்குகளில் மாதக்கணக்கில் சிறையில் இருந்த பல தோழர்கள் நமது கழகத்தில் இருக்கிறார்கள். இலட்சியத்துக்கு தந்த இந்த விலையை அவர்கள் அமைதியாக ஏற்றுக்கொண்டு களப்பணி ஆற்றுகிறார்கள் என்று குறிப்பிட்டார் விடுதலை ராசேந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழகமும், திராவிடர் விடுதலைக் கழகமும் தனித்தனி அமைப்புகளாக செயல்பட திட்டமிட்டபோது இலகுவான நட்புகளோடு பிரிந்ததைப் பலரும் பாராட்டியதை குறிப்பிட்டார்.
அடுத்து கழகம் நடத்த இருக்கும் குடும்ப விழாக்களை நடத்துவதற்கான திட்டமிடல்களை தொடங்க வேண்டும் என்றார். திறந்த போட்டியாளர்கள் என்ற போர்வையில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பார்ப்பனர்கள் போராடத் தொடங்கி இருப்பதையும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இளைஞர்களின் எழுச்சி ஒன்றிய ஆட்சியாளர்களை மிரள வைத்திருப்பதையும் சுட்டிக்காட்டினார். தொகுதி மறுவரையறையைச் சட்டமாக்கி விட்டால் பாஜகவினரின் ஆட்சி மட்டுமே காலம் காலத்திற்கும் உறுதிப்படுத்தப்படும் என்ற ஆபத்தையும் அவர் விளக்கிக் கூறினார்.
பரப்புரைப் பயணத்தில் சென்னை அணியின் செயல்பாடுகளை தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் பாராட்டினார், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி பேசுகையில், “பெரியாரைப் புறக்கணிக்கும் திராவிட எதிர்ப்பாளர்களை எச்சரிக்கையாக அணுக வேண்டும்” என்றார். மாநாட்டுப் பணிகளை மேற்கொண்ட தோழர்களைப் பாராட்டினார்.
“சென்னையில் நடந்த நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர் கழகத்தின் பங்கு குறித்தும், புத்தகக் கண்காட்சிக்கு புதிய தலைப்புகளில் நூல்களைக் கொண்டு வருவது குறித்தும் மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் தன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். இளைஞரணி களப்பணிக்கு காத்திருக்கிறது. வேலைத்திட்டங்களைத் தலைமை தர வேண்டும் என்று, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண் கேட்டுக்கொண்டார்.
சமூக வலைதளங்களில், சிறுசிறு வீடியோக்கள் மூலம் கொள்கைப் பிரச்சாரம் செய்வது குறித்தும், அதன் செயல்படும் விதம் குறித்தும், நிமிர்வோம் வாசகர் வட்ட அமைப்பாளர் ர.பிரகாசு விளக்கினார். நீட் எதிர்ப்புப் போராட்டங்களின் அனுபவங்களையும், சென்னை கோயம்பேடு திருவள்ளுவர் இல்லத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன் மெத்தை அமைத்துக் கொடுத்தார். போராட்டத்தை ஆதரிக்க வருகை தந்தவர்களுக்கு மாவட்ட அமைப்பாளர் ந. தட்சிணாமூர்த்தி உணவு ஏற்பாடு செய்திருந்ததையும் தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரன்பு பகிர்ந்து கொண்டார். கழகத் தோழர்களோடு கலந்துரையாடவும், இணைந்து பயணிக்கவும், இந்தப் பயணம் பெரிதும் பயன்பட்டது என்றார் இரண்யா. தனது பயண அனுபவங்களை உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொண்டார்.
வடசென்னை மாணவர் கழக அமைப்பாளராக தோழர் ‘குடிஅரசு’ செயல்படுவார் என்று கழகப் பொதுச்செயலாளர் அறிவித்தார். கழகத் தோழர் விஜயன் அவர்களின் மகன் இரண்யன் 23-வது பிறந்தநாளை முன்னிட்டு ரூ.1000 கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்கத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. – நமது செய்தியாளர்.
பெரியார் முழக்கம் இதழ் 27082026
