பண்ணையார்களைப் பணியவைத்த திருவாதிரைமங்கலம்!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். திருவாதிரை மங்கலம் குறித்தும் திராவிட தொழிலாளர் சங்கம் குறித்தும் விவரிக்கிறது இக்கட்டுரை தொடர்.

நெடுங்காட்டன்குடி, சூரனூர், சோழிங்கநல்லூர், வடகுடி, எழுமுக்கால், கீழவைப்பூர், குரும்பேரி, தேராகுளம் உள்ளிட்ட 18 கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சி, திருவாதிரை மங்கலம். அதன் தலைகிராமம் திருவாதிரை மங்கலம்தான். 1950-க்கு முன்பு, ஊராட்சி முழுவதுமே ஆண்டான் – அடிமை, முதலாளி – தொழிலாளி, ‘ஆதிக்கஜாதி – ஒடுக்கப்பட்ட ஜாதி’ என வர்க்கமும் வர்ணமும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த சூழலே நிலவியது. பண்ணையார்கள் வீட்டிற்குள்கூட தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய முடியாது. உணவோ, தண்ணீரோ திண்ணையில் அமர்ந்துகூட உண்ண முடியாது. கொல்லைப்புறத்தில் வைத்து கொடுப்பார்கள். பள்ளி செல்லவும் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி கிடையாது. இந்தச் சூழலில் 1950-களின் பிற்பகுதியில், நாகை மற்றும் திருவாரூரில் வீச்சாகப் பரவிய திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம் திருவாதிரைமங்கலத்திலும் ஆழ வேரூன்றியது. உத்திராபதி, அந்தோணிசாமி, மாரியப்பா என திராவிடர் கழக முன்னோடிகள் பலர் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கத்தைப் பலப்படுத்தி, பெரும்பகுதி மக்களை இயக்கமாக்கினர். ஆண்டுக்கு ஒரு முறையாவது பெரியாரை அழைத்துவந்து ஏதேனும் ஒரு குக்கிராமத்தில் கூட்டம் நடத்துவதை வழக்கமாக்கினர். பேருந்து வசதிகூட இல்லாத அக்காலத்தில், பெரும்பாலும் மாட்டுவண்டியிலேயே பெரியாரை அழைத்துவந்து அக்கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

பெரியாரும் அங்கு நிலவிய ஏற்றத்தாழ்வுகளைக் கடுமையாகச் சாடி பேசியிருக்கிறார். பண்ணையார்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த பெரியாரின் பேச்சுகள் ஏற்படுத்திய தாக்கத்தால், பள்ளி செல்லும் வயதிலேயே நூற்றுக்கணக்கான சிறுவர்கள் பெரியார் தொண்டர்கள் ஆகினர். திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம் குக்கிராமங்கள் வரை விரிவடைந்து வளர்ந்தது. பண்ணையார்கள் வீட்டுக்கு ஆடு, மாடு மேய்க்க செல்லக்கூடாது, அடிமை வேலைகளுக்குச் செல்லக் கூடாது எனத் தடுத்தது திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம். சாணி அள்ளக்கூடாது, பறை அடிக்க செல்லக்கூடாது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அதனால், சங்கத்தில் இருப்போரை கூலியாட்களாக அழைப்பதையே தவிர்க்கத் தொடங்கினர் பண்ணையார்கள். ஆனாலும், மற்ற மக்களையும் திரட்டி அடிமைத்தனத்தில் இருந்து வெளியேறவும், கூலித்தொகையைப் பங்காக உயர்த்தித் தரவேண்டுமென்றும் கேட்டு போராட்டத்தை வலுப்படுத்தியது. தொடர் நெருக்கடிகளால், பேச்சுவார்த்தைகளால் பண்ணையார்கள் பணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆதிக்கம் தவிடுபொடியானது. விவசாய சங்கம் வலுப்பெற்ற காலத்திலேயே திருவாதிரைமங்கலத்தில் படிப்பகம் ஒன்றை உருவாக்கினர்.

வீட்டுக்கு வீடு வானொலிகூட இல்லாத அந்தக் காலத்திலேயே படிப்பகத்தில் வானொலி வாங்கி வைத்து தினமும் மக்கள் செய்திகளை அறிந்து கொள்ள வழிவகை செய்தனர். எல்லோருக்கும் படிக்கத் தெரியாத காலம் என்பதால், ‘விடுதலை’ பத்திரிகையை ஒருவர் வாசிக்க, பலர் கூட்டமாக அமர்ந்து செய்திகளைக் கேட்டுக்கொள்வார்கள். கல்வியறிவு பெறுவதற்கு முன்பே சமூக அறிவை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பை ‘வானொலி’யும் ‘விடுதலை’ நாளிதழும் ஏற்படுத்தின. பின்னர், சோழிங்கநல்லூர் கிராமத்தில் பெரியார் மருத்துவமனை கட்டப்பட்டது. அரசிடம் பேசிப்பேசி திருவாதிரைமங்கலத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிகளை ஏற்படுத்தினர்.

நியாய விலைக்கடைகளைப் பெற்றுக்கொடுத்தனர். இயக்கப் பணிகளோடு நின்றுவிடாமல் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை ஏற்படுத்தித் தருவதிலும் முன்நின்றனர். திருவாதிரைமங்கலத்தில் திராவிட இயக்கத்தின் இருப்பை உறுதி செய்வதற்கான ஆதாரமாக அந்தப் படிப்பகமும் மருத்துவமனையும், கல்விக் கூடங்களும் இன்றும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன.

திருவாதிரைமங்கலத்தில் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக, விவசாயப் பிரச்சினைகள் மட்டுமல்லாது, பகுத்தறிவுச் சிந்தனைகளை நோக்கியும் ஊர்மக்களின் கவனம் திரும்பியது. கோயில் திருவிழாக்களைத் தவிர்க்கத் தொடங்கினர். தீபாவளி கொண்டாடும் வழக்கத்தைக் கைவிட்டனர். பட்டாசு வெடித்தால் அபராதம் விதிக்கப்பட்டது. ஜோசியம் பார்க்கக்கூடாது, குறிசொல்ல ஊருக்குள் வர எவருக்கும் அனுமதி இல்லை. வேண்டுதல் என்ற பெயரில், மொட்டை அடிக்கக்கூடாது. ஊர் எல்லையிலேயே இந்தக் கட்டுப்பாடுகளை எழுதி, பதாகை வைக்கப்பட்டிருக்கும். அவற்றையெல்லாம் ஊர் மக்கள் கட்டுப்பாடாக அல்ல, கடமையாகக் கருதி அப்படியே பின்பற்றினார்கள். இன்னொருபுறம், பெரியார் அறிவித்த அத்தனை போராட்டங்களிலும் திருவாதிரை மங்கலம் மக்கள் தவறாமல் பங்கெடுத்தனர். 1973-இல் பெரியார் மறைந்தபோது, லாரி நிரம்ப ஆட்கள் சென்னைக்கு வருகைதந்து, ராஜாஜி அரங்கில் பெரியாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அடுத்த ஆண்டே பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் ஏற்பாடு செய்த ராவண லீலாவுக்கும் திருவாதிரைமங்கலத்தில் இருந்து மட்டும் ஒரு தனி லாரி புறப்பட்டது.

1980-களில் அருகே உள்ள உக்கூர் கிராமத்தில் பெரியார் சிலையை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சேதப்படுத்தியுள்ளார். அந்த நபரையே வரவைத்து சிலையைச் சரிசெய்ய வேண்டுமென்று ஒட்டுமொத்த திருவாதிரைமங்கலம் மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறைக்கும் நெருக்கடிகள் முற்றவே, சிலையைச் சேதப்படுத்திய நபரே பயந்துபோய், தன் செயலுக்கு வருந்தி சிலையைச் சரிசெய்து கொடுத்தார்.

கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்த அந்த ஊரில்தான் திருவாதிரைமங்கலம் சிவலோகநாதசுவாமி கோயிலும் உள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் நடமாட்டமே இல்லாமல், சிதிலமடைந்து கைவிடப்பட்ட நிலையில் இக்கோயில் இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் மீண்டும் புனரமைத்து வழிபடத் தொடங்கியுள்ளனர். எனினும், இப்போதும் திருவாதிரைமங்கலத்தைச் சேர்ந்த மக்கள் செல்வது மிகச் சொற்பம்தான். ஏனெனில், இன்றும் அங்கு நூற்றுக்கணக்கான குடும்பங்கள் திராவிட இயக்க உணர்வோடு பின்னிப்பிணைந்த குடும்பங்களே. அதன் காரணமாகவே ஊருக்குள் இப்போது ஜாதி ஆதிக்கமோ, மற்றெந்த ஆதிக்கமோ நடைமுறையில் இல்லை.
திராவிடர் கழகத்தை சேர்ந்த ராஜேந்திரன் இவ்வாறு கூறுகிறார்:
“என்னுடைய சிறுவயதில் விவசாயம் தொடர்பாக, நாகை பாட்சாவை சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது, நிகழ்ச்சிக்காக பெரியார் அங்கு வந்திருந்த நிலையில், என்னையும் அழைத்துச் சென்றார். அன்றைக்கு பெரியார் பேசியதைக் கேட்டு ஈர்ப்பு ஏற்பட்டு, பிறகு சுற்றுவட்டார கிராமங்களுக்கு பெரியார் எப்போது வந்தாலும் பார்க்கச் சென்றுவிடுவேன். என் பள்ளிக்காலத்திலேயே 16 முறை அப்படி பார்த்துவிட்டேன். பெரியார் ஒருவரால்தான் எங்கள் ஊரில் ஜாதி ஆதிக்கம் ஒழிந்து கல்வி, வேலைவாய்ப்பில் மக்கள் முன்னேற்றம் கண்டனர்’’.
இயக்கப் பணிகளோடு நின்றுவிடாமல் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை ஏற்படுத்தித் தருவதிலும் திருவாதிரைமங்கலத்தில் திராவிட இயக்கத்தினர் முன்நின்றனர்.
பெரியார் முழக்கம் இதழ் 07052026

You may also like...