வணிகர்கள், பொதுமக்கள் பயணக்குழுவுக்குப் பாராட்டு!
6ம் நாள்: பட்டுக்கோட்டை அம்பேத்கர் சிலை அருகிலும், கைகாட்டி பேருந்து நிலையத்திலும், வடகாடு பேருந்து நிறுத்தத்திலும் ஆக-11 அன்று முறையே பாரி, கலைச்செல்வன், சின்னப்பத்தமிழர் ஆகியோர் தலைமையில் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன.
புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழகப் பொருளாளர் துரைசாமி, பெரியாரின் தளபதி பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி சிலைக்கு நல்லதம்பி ஆகியோர் மாலை அணிவித்தனர்.
எழுகதிர்(தமிழ் வழிக் கல்வி இயக்கம்) வரவேற்புரை ஆற்றினார். ஜாதியில் திருமணம் என்ற தலைப்பில் வீரமணி-நிர்மல்குமார் இருவரும் கேள்வி பதில் பாணியில் உரைநிகழ்த்தினர், வாழ்வில் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் சூலூர் பன்னீர்செல்வம், கலைச்செல்வன், மதத்தில் பார்ப்பனியம் என்ற தலைப்பில் முகில்ராசு, தேன்மொழி, ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக துரைசாமி, அய்யனார், சின்னப்பத்தமிழர் (தமிழ்மொழிக் கல்வி இயக்கம்) ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் திராவிடர் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். பட்டுக்கோட்டையில் ரயில்வே கேட்டில் தோழர்கள் கிருஷ்ணன், நல்லதம்பி, ஜெயச்சந்திரன் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் துண்டறிக்கை வழங்கினர். கூட்டம் முடிவடைந்து செல்லும் வழியில் பட்டுக்கோட்டை பெரியார் சிலைக்கு மலேசியா பெரியசாமி மாலை அணிவிக்க பரப்புரைப் பயணத் தோழர்கள் கொள்கை முழக்கங்கள் எழுப்பினர்.
பெரியார் உணர்வாளர் அண்ணாதுரை காலை உணவு வழங்கினார். மதிய உணவு ஏற்பாடு எஸ்.டி.பி.அய் ரஜாக், கரம்பக்காடு காமராஜ் இல்லத்தில் வழங்கினார். பேராவூரணி அணித் தோழர்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இரவு உணவை கரு. காளிமுத்து வழங்கினார். வடகாடு பகுதியில் சின்னப்பத் தமிழர் தலைமயில் தமிழ்வழிக் கல்வி இயக்கத்தினர் பதாகையுடன் பயணக்குழுத் தோழர்களை வரவேற்றனர்.
7-ஆம் நாள்: கொத்தமங்கலம் பேருந்து நிறுத்தம், அறந்தாங்கி பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் பரப்புரை நடைபெற்றது.
காலை பேராவூரணி ரயில்வே கேட் போடப்பட்டதால் அங்கு வாகனங்களில் காத்துக்கொண்டிருந்த மக்களிடம் துண்டறிக்கைகளை தோழர்கள் நல்லதம்பி, கிருஷ்ணன், பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினார்கள்.
சின்னப்பத் தமிழர், திருவேங்கடம் (தலைமைக்குழு உறுப்பினர்), எழுகதிர் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்டச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செங்கோடன், திமுக இளைஞரணி பொறுப்பாளர் சேதுபதி, தனித்தமிழ் இயக்கம் சிவானந்தம், மஜக மாவட்டச் செயலாளர் முபாரக் அலி ஆகியோர் பரப்புரைப் பயணத்தை வாழ்த்தியும், பயணத்தின் நோக்கத்தை விளக்கியும் உரையாற்றினர்.
ஜாதியில் திருமணம் தலைப்பில் கலைச்செல்வன், மதத்தில் பார்ப்பனியம் தலைப்பில் தேன்மொழி ஆகியோர் உரையாற்றினர். காலை உணவை கொத்தமங்கலத்தில் தோழர்கள் அருணகிரி (எம்.எல்), எழுகதிர், ரத்தினம் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
அறந்தாங்கிக்கு செல்லும் வழியில் சின்னப்பத் தமிழர் அவர்களின் தம்பி இல்லத்தில் அனைவருக்கும் எலுமிச்சை பழச்சாறு பலாப்பழங்கள் கொடுத்தனர். புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் ரமேஷ் கண்ணன் ஆதரவு தெரிவித்து பயணக்குழுத் தோழர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கினார்.
மோகன கிருஷ்ணன் புத்தக விற்பனைப் பணியைச் செய்தார்.
அனைத்து கூட்டங்களிலும் வீரமணி-கிருஷ்ணன் ஆகியோர் பகுத்தறிவுப் பாடல்கள் பாடினார்கள். தோழர்கள் நிர்மல்குமார் -வீரமணி- திருவேங்கடம், தேன்மொழி ஆகியோர் நாடகம் வழியாக ஜாதி எதிர்ப்புப் பரப்புரை மேற்கொண்டனர். நாடகத்தை பார்த்த பொதுமக்கள் பலரும் பாராட்டினார்கள்.
அனைத்து கூட்டங்களிலும் தோழர்கள் திருப்பூர் குணா, மடத்துக்குளம் சிவானந்தம், முகில்ராசு சூலூர்.பன்னீர்செல்வம், நல்லதம்பி பாபு, பேராவூரணி ஜெயச்சந்திரன், விவேகா ஆகியோர் ஒலிபெருக்கி அமைக்கும் பணியையும் துண்டறிக்கை விநியோகம், கடைவீதி வசூல் பணிகளைச் செய்தனர்.
திருச்சி அணி:
4வது நாள்: அரியலூர் மாவட்டம் செந்துறையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கம் எழுப்பி நான்காம் நாள் பரப்புரைப் பயணத்தை ஆக-9 அன்று தொடங்கினர்.
அரியலூர் குன்னத்தில், பெரம்பலூர் நாலு ரோட்டில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பரப்புரை நடைபெற்றது.
கழக பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரை. தாமோதரன், தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சித் தலைவர் செல்வமணியன், பொன். தங்கராசு (புஇமு), மு.விஜயேந்திரன் (தி.க மாவட்டச் செயலாளர்), சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, ஆகியோர் கருத்துரையாற்றினர். பயணக்குழுத் தோழர்களுக்கான தங்கும் வசதிகளையும், உணவு ஏற்பாடுகளையும் தி.க மாவட்டச் செயலாளர் விஜயேந்திரன் செய்து கொடுத்தார்.
அரியலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பரப்புரைப் பயணத்தின் போது பள்ளி மாணவிகள் ஆர்வமுடன் வந்து அமர்ந்து கருத்துகளைக் கேட்டு, கழக வெளியீடுகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். அவ்வழியே சென்ற இளம் பெண் வழக்கறிஞர் ஒருவர், பரப்புரைப் பயணத்தை கவனித்து, தோழர்களுக்கு குளிர்பானங்களை வாங்கிக் கொடுத்தார். சுதாகர் பங்கேற்று ஆதரவளித்தார்.
5வது நாள்: பெரம்பலூர் அம்மாபாளையம், முசிறி, மணப்பாறை ஆகிய பகுதிகளில் ஆக-10 அன்று பரப்புரை நடைபெற்றது. பொன். தங்கராசு (புஇமு), சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி ஆகியோர் கருத்துரையாற்றினர்.
பரப்புரையைக் கவனித்த சவுந்தர்ராஜன் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். கழக வெளியீடுகள் அனைத்தையும் வாங்கிச் சென்றார்.
5வது நாள் நிறைவுக் கூட்டம் மாலை 6 மணிக்கு, திருச்சி மணப்பாறையில், கழக ஒன்றியச் செயலாளர் வி. தனபால் தலைமையில், பொதுக் கூட்டமாக நடைபெற்றது. விராலிமலை ஒன்றியச் செயலாளர் குமரேசன் வரவேற்புரையாற்றினார்.
திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் துரை. காசிநாதன், பாவலர் மு. பசுலுதீன் உரையாற்றினர். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர், ஆசிரியர். சிவகாமி பேசுகையில், மூடநம்பிக்கைகளால் அதிகமாக பாதிக்கப்படும் பெண்கள், அதே மூடநம்பிக்கைகளை பின்பற்றுபவர்களாகவே இருப்பது குறித்தும், தமிழ்நாட்டு பெண்கள் மூடநம்பிக்கைகளை விடுத்து பெரியார் வழிக்கு திரும்ப வேண்டிய தேவை குறித்தும் உரையாற்றினார்.
ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி, “வரலாற்றை அறிந்துகொள்ள மறுப்பவர்களுக்கு கொள்கைத் தலைவர்கள் எதற்கு” என்று வினவினார். பிற்படுத்தப்பட்டோரின் பதவிகளைப் பறிக்கும் பார்ப்பனர்களை எதிர்க்காமல், ஒடுக்கப்பட்டோரை எதிர்ப்பது புத்திசாலித்தனமா?” என்று கருத்துரையாற்றினார்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “தமிழ்நாட்டு பிரிவினையை முன்வைத்த மலையாள நாட்டினர் குறித்தும், ஆகம விதிகள் தற்கால பார்ப்பனருக்கே பொருத்தமற்றதாக இருப்பது குறித்தும் நிறைவுரையாற்றினார். நடுப்பட்டி பாலசுப்பிரமணி நன்றி கூறினார்.உணவு ஏற்பாடுகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சிப் பொறுப்பாளர் இராவணன் கவனித்துக் கொண்டார். அய்ந்தாம்நாள் தோழர்களின் துண்டறிக்கை பிரச்சாரத்துக்கு வணிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.
6வது நாள்: மணப்பாறை காமராஜர் அரசு மருத்துவமனை அருகில், விராலிமலை செக்போஸ்ட், புதுக்கோட்டை இலுப்பூர் ஆகிய இடங்களில் ஆக-11 அன்று பரப்புரை நடைபெற்றது.
தனபால் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் துரை. காசிநாதன், பாவலர் மு. பசுலுதீன், பாடகர் சத்யா ஆகியோர் பிரச்சார பயணத்தின் நோக்கத்தை விளக்கிக் கருத்துரையாற்றினர். அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, தலைமைக் குழு உறுப்பினர் காவை.ஈஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பெரியார் பிஞ்சு திராவிட மகிழனின் துண்டறிக்கை பிரச்சாரம் மக்களை பேரார்வம் கொள்ளச் செய்தது. பள்ளி மாணவிகள் ஆர்வத்துடன் கழக வெளியீடுகளை வாங்கிச் சென்றனர்.
7வது நாள்: ஆக-12 அன்று புதுக்கோட்டை திருமயம் பகுதியில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிவகங்கை கானாடுகாத்தானில் துண்டறிக்கை பரப்புரையை தோழர்கள் மேற்கொண்டனர்.
கழக வெளியீடுகள் ரூ.7953க்கு விற்பனையாகின. ரூ.11,590 கடைவீதி வசூல் வழியாக கிடைத்தது.அனைத்துக் கூட்டங்களிலும் தோழர்கள் லதா, சத்யா, திராவிட மகிழன், உமாபதி, கார்மேகம் ஆகியோரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பாடப்பட்ட பாடல்கள் மக்களை வெகுவாக ஈர்த்தது.
ம.கி. எட்வின் பிரபாகரன், இராவணன், ஆ.வ. வேலு, சுகுமார், ஏசுகுமார், கடலூர் சிவா, இரண்யா, சு.கோபிநாத், த.நா.சூர்யா, மயிலை அருண், வீரா, அசோக், சுரேந்தர், கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நெகிழ்ச்சியான நிகழ்வுகள்
அம்மாபாளையம் பகுதியில் துண்டறிக்கைப் பிரச்சாரத்தின் போது இரண்டு சிறுவர்கள் மெக்கானிக் கடையில் இருந்தார்கள். எங்களைப் பார்த்ததும் அந்தக் கடையின் உரிமையாளர் வெளியேறி கடைக்கு பின்னால் போனார்.
நாங்கள் அந்தச் சிறுவர்களிடம் துண்டறிக்கைய கொடுத்தோம். அந்த சிறுவன் பார்த்த உடனே எங்ககிட்ட கைய காட்டி இருக்க சொல்லி உரிமையாளர் பின்னாடி போய் சிறிது நேரத்தில் ரூ.10 நன்கொடை வழங்கினார். உரிமையாளரிடம் தொந்தரவு செய்து நன்கொடை வழங்கினார்கள் சிறுவர்கள். நன்கொடை தந்த சிறுவனின் பெயர் ஜெயப்பிரகாஷ். தோழர்களுடன் குழு படம் எடுத்துக் கொண்டான்.
இலுப்பூர் பகுதியில் நிகழ்வு முடிந்து வண்டி கிளம்ப தயாராகும் போது அங்கே வந்த பள்ளிச் சிறுவர் இருவர் துண்டறிக்கையைப் படித்துவிட்டு ஏதாவது புத்தகம் கிடைக்குமா? என்று கேட்டு ஆவலோடு வாங்கிச் சென்றனர்.
பெரியார் முழக்கம் இதழ் 20082026
