வருவாய்த்துறையின் அதிரடி நடவடிக்கை தீண்டாமைச் சுவர் இடிப்பு
கரூர் மாவட்டம் முத்தலம்பட்டி கிராமத்தில் கடந்த சனிக்கிழமை தீண்டாமைச் சுவர் ஒன்று இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் வாழும் இடைநிலைச் ஜாதிகளான தொட்டிய நாயக்கர் என்ற சமூகத்தினர், அருந்ததியர் சமூக மக்கள் தங்கள் பகுதிக்குள் வர விடாமல் தடுப்பதற்காக இந்த தடுப்புச் சுவரை அரசு புறம்போக்கு நிலத்தில் எழுப்பி இருந்தனர். மூன்று வாரங்களுக்கு முன்பு இந்த சுவர் எழுப்பப்பட்டது.
அருந்ததியர் சமூகத்தினர் தங்கள் மாரியம்மன் திருவிழாவை கொண்டாடுவதற்கு மேடை அமைப்பதற்கும்- அரசு புறம்போக்கு நிலத்தில் கழிப்பறை ஒன்றை கட்டுவதற்கும் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அருந்ததியினர் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த சுவரை 15 நாட்களுக்குள் இடிக்க வேண்டும் என்றும் அரசு நிலத்தில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு இருக்கிறது என்றும் தொட்டிய நாயக்கர் சமூக தலைவருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருந்தனர்.
இது தீண்டாமைச் சுவர் அல்ல; சமூகவிரோதிகள் உள்ளே விடாமல் தடுப்பதற்கான பாதுகாப்புச் சுவர் என்று தொட்டிய நாயக்கர் சமூகத்தின் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. வருவாய்த்துறை இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு மற்றொரு நோட்டீஸ் (தாக்கீது) அனுப்பியது. அடுத்த நாள் சனிக்கிழமை பகல் 11 மணிக்குள் சுவர் இடிக்கப்பட்டாக வேண்டும் என்று கெடு விதித்து எச்சரித்தது.
இரவோடு இரவாக தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு சென்று முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர்.
நிச்சயமாக சுவர் இடிக்கப்படுவது உறுதி; எந்த மாற்றமும் இல்லை என்று கூறிவிட்டனர். அடுத்த நாள் காலை வருவாய்த்துறை அதிகாரிகள் சுவரை இடிக்கச் சென்றபோது தொட்டிய நாயக்கர் சமூகத்தினரே முன்வந்து சுவரை எடுப்பதாகக்கூறி சுவரை இடிக்கத் தொடங்கினர்.
பத்திரிகையாளர்கள் அங்கே இருக்கக் கூடாது; படம் எடுக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்தனர் சுவரை அவர்களே இடித்தனர் வருவாய்த் துறை எடுத்த உறுதியான நடவடிக்கையின் காரணமாக இந்த தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டுள்ளது. இதற்காக வருவாய்த் துறையை பாராட்ட வேண்டும் இந்து ஆங்கில நாளேடு மட்டும்தான் இந்த செய்தியை முக்கியத்துவம் தந்து முதல் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது.
பெரியார்முழக்கம்இதழ்14082025
