ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி கருத்தரங்கம்!
ஓபிசி மக்கள் உரிமை கட்சியின் சார்பில், கடந்த ஜூலை-12, (ஞாயிறன்று), சென்னை ராயப்பேட்டை இ.என். சேஷா மகாலில், “இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மீதான ஜாதி கணக்கெடுப்பின் முக்கியத்துவம் மற்றும் அதன் விளைவுகள்’’ எனும் தலைப்பில் முழுநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், திருவல்லிக்கேணி தோழர் அன்பரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முதலாவதாக பேசிய தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் சூரஜ் மண்டல்; பிற்படுத்தப்பட்டோரை பாஜக ஏமாற்றுவது குறித்தும், பார்ப்பனர் ஒற்றுமை – ஓபிசி ஒற்றுமையின்மை குறித்தும் உரையாற்றினார்.
அடுத்ததாக உரையாற்றிய, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அசோக் வர்தன், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஓபிசி ஜாதிகளின் எண்ணிக்கையை 46 லட்சமாக உயர்த்திக்காட்டும் மோசடிகளைச் சுட்டிக்காட்டினார். நீதிபதிகள், அரசுத்துறைச் செயலாளர்கள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள், பெருநிறுவனங்களின் நிர்வாகக் குழுவினர் பெரும்பாலும் முன்னேறிய ஜாதிகளாகவே இருப்பதை வினவினார். நீதிமன்றங்களில் புள்ளிவிவரங்களை வழங்காமல், பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது மோடி தான் என்றார். மேலும், திமுக அமைப்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன், அகில இந்திய ஓபிசி மாணவர்கள் சங்கத் தலைவர் கிரண் குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழ்நாடு பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
பெரியார் முழக்கம் இதழ் 23072026
