நீதிபதியின் துணிவானக் கருத்து

உச்ச நீதிமன்றத்தைக் கண்காணிக்க சிறப்பு அதிகாரம் கொண்ட நிபுணர்கள் குழு ஒன்றை (Distinguished Jurists) குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் பேசி இருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒன்றாகும். குடியரசுத் தலைவருக்கு சட்டம் இந்த உரிமையை வழங்கி இருக்கிறது என்றாலும், 76 ஆண்டு காலமாக இதுவரை அப்படி ஒரு நியமனம் நடக்கவில்லை என்று நீதிபதி புயான் புதுதில்லி தேசிய பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பேசியிருக்கிறார்.

இந்த உரை நிகழ்த்தப்பட்ட சூழல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.கே.அய் சூரியகாந்த் இளைஞர்களைக் கரப்பான் பூச்சிக்கு ஒப்பிட்டுக் கூறிய கருத்துக்கு இளைஞர்கள், மாணவர்களிடையே எதிர்ப்புகள் வெடித்துக் கிளம்பின. இதைத் தொடர்ந்து அய்தராபாத்தில் உள்ள நெல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தலைமை நீதிபதி அழைக்கப்பட்டதற்கு, மாணவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தலைமை நீதிபதி நிகழ்ச்சிக்கு வரவில்லை. உடனே வழக்கறிஞர்களின் அமைப்பான பார் கவுன்சில் படித்து முடித்த நெல்சார் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்குவதற்கு தடை விதித்தது. கடும் எதிர்ப்புக்குப் பிறகு பார்கவுன்சில் தனது தடையைத் திரும்பப் பெற்றது. இந்தச் சூழ்நிலையில் தான் உஜ்ஜல் புயான் இந்தக் கருத்துகளை வெளிப்படுத்தினார்.

“சகிப்புத்தன்மை என்பது தனி மனிதர் பண்பு என்று சுருக்கிவிட முடியாது. அது சட்டத்திற்கான மதிப்பு; அனைவரும் ஒரே கருத்தை பேசுவது ஜனநாயகம் அல்ல, மாற்றுக் கருத்துக்களும் மதிக்கப்பட வேண்டும்” என்றார்.

நீதித்துறை தனது வெளிப்படைத் தன்மையை முற்றாக இழந்து நிற்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் கருத்தியலில் நம்பிக்கை கொண்டவர்களும், பார்ப்பன உயர்ஜாதியினருமே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். நீதிபதிகளைத் தேர்வு செய்யும் கொலிஜியம் என்ற அமைப்பை சட்டம் உருவாக்கவில்லை; நீதிமன்றங்களே உருவாக்கிக் கொண்டன.

காலிப் பணியிடங்கள் குறித்தோ, தகுதி குறித்தோ, தேர்வு முறை குறித்தோ எந்த அறிவிப்புகளும் இல்லாமல் மர்மமாகவே நீதிபதி நியமனங்கள் நடக்கின்றன. நீதித்துறையில் இடஒதுக்கீடு இல்லை; பார்ப்பன உயர்ஜாதி ஆதிக்கம் தான் தலைவிரித்தாடுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்ப்பனர்களுடைய எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து விட்டது.

ஒன்றிய ஆட்சியின் சி.பி.அய் அமலாக்கத்துறை போன்ற துறைகளில் வழக்கறிஞர்களாக இருந்தவர்கள் நீதிபதியாக நியமனம் பெற்றுள்ளனர். தலித், முஸ்லிம், பெண்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது. ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளுக்காக சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்துகிறார்கள். பதவியில் இருக்கும் நீதிபதிகள் தங்கள் உறவினர்களைப் பரிந்துரைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. உயர்நீதிமன்ற நீதிபதிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் உறவுக்காரர்கள் (Uncle Judges) என்று முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம் லோதா வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இது குறித்து ‘இந்து ஆங்கில’ நாளேட்டில் ஆகஸ்ட்-26 2026 வெளிவந்த கட்டுரையில் அதிர்ச்சியான தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

2018 அலகாபாத் உயர்நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்த 33 நீதிபதிகளில் 11 பேர் ஓய்வுப் பெற்ற நீதிபதிகளின் உறவினர்கள்; இவர்களைத் தான் ஒன்றிய ஆட்சி தேர்வு செய்தது. 2025 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 30 விழுக்காட்டினர் (33 நீதிபதிகளில் 10 பேர்) முன்னாள் நீதிபதிகளின் உறவினர்கள் என்பது கண்டறியப்பட்டது. இதன் பிறகுதான் நீதிபதிகள் உறவினர்களுக்காக வழங்கும் பரிந்துரைகளை ஏற்கக்கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டது.

நீதிபதி நியமனங்கள் பின்வாசல் வழியாக நியமிக்கப்படக் கூடாது; அது வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் வெளிப்படையாக தேர்வு செய்யப்படும் போது நீதிபதிகள் தேர்வு மட்டும் ஏன் ரகசியமாக நடக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேட்டது. (கர்நாடகா எதிர் உமாதேவி வழக்கு 2006). தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்துக்கு கட்டுப்பட்டது என்றும் உச்சநீதிமன்றம் 2019-ல் தீர்ப்பளித்திருக்கிறது. (சி.பி.அய்.ஒ எதிர் சுபாஷ் சந்திரா அகர்வால் வழக்கு)

பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நீதிபதி தேர்வு ஆணையங்கள் வழியாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு தொலைக்காட்சி வழியாக நேர்முகப் போட்டிகளை நடத்தி நீதிபதிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.பார்ப்பன ஆதிக்கத்தில் நீதிமன்றங்கள் செயல்பட்டதால் இத்தகைய வெளிப்படைத் தன்மைகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டன என்பதே உண்மை.

அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் தேர்வுகளைப் போல் அகில இந்திய தேர்வுகள் வழியாக நீதிபதிகள் தேர்வு நடைபெற வேண்டும் என்று பிரதமராக இருந்தபோது சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் விரும்பினார். ஆனால் அவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாமல் போய்விட்டது. இந்தப் பின்னணியில் உச்ச நீதிமன்றம் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று நீதிபதி உஜாய் புயான் வெளியிட்ட கருத்து மிகவும் புரட்சிகரமானது; வரவேற்றுப் பாராட்ட வேண்டியதாகும்.
பெரியார் முழக்கம் இதழ் 03092026

You may also like...