பெரியார் எனும் பெருநெருப்பு மாநாடு போல் நடந்த கொளத்தூர் கருத்தரங்கு

கொளத்தூரில் நடந்த ‘பெரியார் எனும் பெருநெருப்பு’ கருத்தரங்கம் மாநாடு போல் எழுச்சியுடன் நடந்தது. அரங்கம் நிரம்பி வழிந்த்து.

சேலம் மாவட்டம் கொளத்தூரில் ஆகஸ்ட்17-ல் கே.வி.ஆர் மண்டபத்தில் ஈசுவரன் (தலைமைக் குழு உறுப்பினர்) தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழு கோவிந்தராஜ் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம் இணைந்து பகுத்தறிவு பாடல்கள் பாடினார்கள்.

கொளத்தூர் இளைஞரணி தோழர் குமரேசன் வரவேற்புரையாற்றினார்,
ஆசிரியர் செல்வேந்திரன் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். மிதுன் சக்கரவர்த்தி (திமுக மேற்கு மாவட்ட ஒன்றியச் செயலாளர்) கருத்தரங்கத்தில் ஏராளமான தோழர்களுடன் கலந்து கொண்டு கழகத்தின் ஜாதி எதிர்ப்புப் பரப்புரையின் அவசியத்தை பாராட்டி பேசினார்.

மில்டன்: பேரலை வலையொளி மில்டன் தனது உரையில்; பெரியார் அறிமுகப்படுத்திய சுயமரியாதை திருமணம் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது என்று குறிப்பிட்டார். ஜாதி கட்டமைப்பையும் பெண் அடிமையையும் சமூகத்தில் அது அசைத்தது. இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பு என்பது மொழித் திணிப்பு எதிர்ப்பு மட்டுமல்ல! அது பண்பாட்டுத் திணிப்பு எதிர்ப்பு என்றார்.

இந்தியை திணிப்பதின் நோக்கம் சமஸ்கிருத பார்ப்பனிய பண்பாட்டை நிலைப்படுத்திட வேண்டும் என்பதே என்று பெரியார் விளக்கினார் . மொழித் திணிப்பை தமிழ்நாடு ஏற்க மறுப்பது பண்பாட்டு உரிமைப் போராட்டமாகும். திராவிடர் இயக்கத்தின் சுயமரியாதை ஜாதி எதிர்ப்பு கருத்துக்களை திராவிட அரசியல் கட்சிகள் தங்களுக்கான வேலைத்திட்டம் அல்ல என்று ஒதுக்கி விடக்கூடாது என்றார் மில்ட‌ன்.

வழக்கறிஞர் திருமூர்த்தி: சமூக மாற்றத்துக்கான ஆக்சிஜனைத் தந்த தலைவர் பெரியார் என்பதால் அவர் ஒரு பெரும் நெருப்பு என்றார் திருமூர்த்தி. ஜாதி மறுப்பு திருமணங்களை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது; அது மட்டுமல்ல ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும், அவர்களின் வாழ்வாதாரங்களையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதை சுட்டிக்காட்டினார்.

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்குவது, பிறப்பு சான்றிதழில்லாதவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படுவதைப் போன்ற அரசியல் நடவடிக்கைகள் பாஜகவின் மற்றுமொரு பாசிச அணுகுமுறையின் வெளிப்பாடாகும். இது இந்தியாவின் அடிப்படைக் குடிமக்களுக்கான உரிமைகளை மறுக்கிறது. ஹிட்லர் எப்படி யூதர்களை சட்டப்படி ஒழிக்க முயற்சித்தரோ அதே போல் மோடி அரசு பார்ப்பனரல்லாத மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற முயற்சித்து வருகிறது‌ என்றார்.

மைனர்: “யூடுபூருட்டஸ்” வலையொலி மைனர், பார்ப்பனர் அல்லாத ஒடுக்கப்பட்ட மக்கள் மீது பார்ப்பனியம் திணித்த சமூகக் கொடுமைகளை வரலாற்று ஆதாரங்களுடன் விளக்கினார்.

மானம் என்பது தனிமனித உடல் சார்ந்ததாகவோ, ஒழுக்கம் சார்ந்ததாகவோ சமூகம் பார்க்கிறது. அதைவிட ஒரு சமூகமே கீழானது, இழிவானது என்று நிலை நிறுத்தப்பட்டுள்ள இழிவை சமூகம் பார்க்க மறுக்கிறது. பெரியார் பேசிய சுயமரியாதையும், மானமும் சமூகம் சார்ந்தது மானம் பறிக்கப்பட்டு அதன் வழியாக இழிவுப்படுத்தப்பட்டு அதன் வழியாக சமூக உரிமைகளை பறித்தது. அந்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக “மானம் பாராமல்” போராடிய தலைவர் பெரியார் என்ற வரலாற்றுச் சான்றுகளோடு முன் வைத்தார்.

இந்திரகுமார் தேரடி: இந்துத்துவ பாசிச எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளி நம்மை இணைத்து வைத்துள்ளது என்றார் இந்திரகுமார். பெரியார் முன்மொழிந்த திராவிடம் என்ற குறியீட்டுச் சொல் இப்போது விவாதப் பொருளாகி இருக்கிறது. திராவிட எதிர்ப்பு என்ற ஒற்றை வார்த்தைக்குள்ளேயே அரசியலை நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள். வேறு வார்த்தை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறேன் என்றார் பெரியார்.

ஆனால் அந்த வார்த்தை பார்ப்பனர்கள் ஊடுருவலை தடுக்கக்கூடிய வார்த்தையாக இருக்க வேண்டும் என்றார். இப்போது அதிகாரத்துடன் பார்ப்பனியம் திணிக்கப்படுகிறது. சுதந்திர நாள் விழாவில் கொடியேற்றி 105 நிமிடங்கள் மோடி பேசினார். இதில் 48 முறை இந்தியா என்ற சொல்லை உச்சரித்திருக்கிறார். அதுவும் நாட்டை குறிப்பதற்காக அல்ல! அவர் பெருமையுடன் அறிவித்துக் கொண்டிருக்கும் திட்டமான ‘மேக்கிங் இந்தியா’ என்ற திட்டத்தை குறிப்பிடுவதற்காகவே பயன்படுத்தினார். ஆனால் ‘பாரதம்’ என்ற சொல்லை 58 முறை உச்சரித்தார். பாட நூல்களில் ‘இந்தியா’ என்பது நீக்கப்பட்டு ‘பாரதம்’ என்பது இப்போது பயன்படுத்தப்படுகிறது. என்ன காரணம்? அவரது குருநாதர் கோல்வாக்கர் “பாரதம்” என்பது மட்டுமே இந்துக்களின் நாட்டைக் குறிக்கும் என்று எழுதி வைத்துள்ளார்.

ஸ்ரீநிதி: சமூக ஊடகங்களில் பெரியார் கருத்துகளை பரப்பி வரும் ஸ்ரீநிதியின் ‘லவுட் ஸ்பீக்கர்’ வலைதளம் மிகவும் பிரபலமாகி வருகிறது. கொளத்தூர் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசினார். பொது மேடையில் தான் பங்கேற்கும் இரண்டாவது மேடை என்று அவர் குறிப்பிட்டார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

தமிழ்நாட்டில் அரசியல் செய்ய யார் முன் வந்தாலும் பெரியார் கொள்கையை பிடித்து தான் இங்கே நிற்க முடியும்; அதுதான் இங்கே அரசியல் முகவரி. இந்த பெரியார் என்ற ஒத்த தலையை வாங்குவதற்கு பத்து தலைகள் இங்கே வந்து கொண்டிருக்கின்றன என்பதிலிருந்து பெரியார் எவ்வளவு சக்தியாக இருக்கிறார் என்பது புரியும்.

“தம்பி நான் குட்டிக் கதை சொல்லுபவனல்ல கட்டுக்கதை சொல்ல வந்தோம்” என்று கதை எல்லாம் அடித்துவிடுவாங்க, நாம் உண்மையைத் தான் பேச முடியும். சமூக நீதியின் பிறப்பிடமாகவும் அதன் முகவரியுமாக தமிழ்நாடு இருக்கிறது என்பதை 1979-ல் மண்டல் கமிஷன் தன் முகவுரையில் எழுதியுள்ளது.

நம்ம வம்சத்தில் ஒருத்தன் கூட கோழை இல்லை என்று ஜாதிப் பெருமை பேசுகிறார்கள். வரலாறு படிக்கும் போதுதான் தெரிகிறது ஒருவருக்கும் மூளை இல்லை என்பது. தமிழ்த் தேசியத்தை தமிழ்நாட்டில் முதன்முதலில் கையில் எடுத்ததே பெரியார் என்ற வரலாறு தெரியுமா? பெரியாரை தெலுங்கர் என்று சொல்லும் வசை சொற்களை பெரியார் தன் வாழ்நாளிலே கேட்டுவிட்டார். வட நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்து மத ஆட்சியை தருவோம் என்று சொல்லித் தான் வாக்கு கேட்க வேண்டிய சூழல் அங்கு நிலவுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அப்படி சொன்னால் ஒரு ஓட்டு கூட விழாது. மாறாக தமிழ்நாட்டில் சமூக நீதி திட்டங்களை சொன்னால் தான் இங்கு ஆட்சிக்கு வர முடியும் இது தான் திராவிடர் இயக்க சாதனை என்று தனது பாணியில் பேசினார்.

நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில்: ஜாதி ஒழிப்பு என்ற லட்சியத்திற்கு தடையாக நிற்கும் பார்ப்பனியம், இந்திய தேசியம், ஆணாதிக்கம், மூட நம்பிக்கைகளை எதிர்த்து போராடியது பெரியார் இயக்கம் என்றார். பொதுவுடமை கட்சியின் தொழிற்சங்கத் தலைவராக இருந்த ஏ.எஸ். ஐயங்கார் தனது ஜாதி அடையாளத்தை அரசு பதிவேடுகளின் (கெசட்) வழியாகவே நீக்கிக் கொண்டார். ஜாதி விலக்கத்தின் அடையாளமாக தமிழ்நாடு இருக்கிறது. ஜாதிய உணர்வுகள் இருந்தாலும் பெயர்களோடு சேர்த்து அடையாளப்படுத்துவதை அவமானம் என்ற உளவியல் தமிழ்நாட்டில் மட்டுமே உருவாகி இருக்கிறது என்பது பெரியார் இயக்கத்தின் சாதனை என்றார்.

கருத்தரங்கிற்கு‌ மேடை வடிவமைப்பு பணிகளைச் செய்த சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் த.நா சூர்யா, யாழினி, குமார், எழிலரசன், ப.அருண் ஆகியோரை பாராட்டி கழகத் தலைவர் பயனாடை அணிவித்தார்.

நாத்திகர் விழாவில் பார்வையாளராக வந்த தோழர் மாய கண்ணன் விழாவில் வாய்வழி நெருப்பு வித்தை காட்டினார். அவருக்கு கழகத் தலைவர் பயனாடை அணிவித்தார்.

கருத்தரங்கத்தில் சேலம், மேட்டூர், நங்கவள்ளி கழக பொறுப்பாளர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள், இளைஞரணி தோழர்கள், மாணவர் கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். படங்கள் எடுக்கும் பணியை கழகத் தோழர்கள் விஜி, இளவரசன் (கபிலன் ஸ்டுடியோ) செய்தனர்.

திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கோவை, சென்னை, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுகந்தன் (தமிழ்நாடு மாணவர் கழகம்) நன்றி தெரிவித்தார்.

நிகழ்வில் கே.வி கந்தசாமி (சமூக ஆர்வலர்) கழகத் தலைவரின் தொடர் பணிகளை பாராட்டி தலைவருக்கு பிறந்தநாள் பரிசாக ரூ.50000 வழங்கினார்.

சேலம் மாவட்டக் கழகம் சார்பாக கோவிந்தராஜ் ( மாவட்டச் செயலாளர்) ரூ.41,600-அய் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக வழங்கினார்.
பெரியார்முழக்கம்இதழ்28082025

You may also like...