பயிலரங்கத்தின் வெற்றி; பயிற்சி பெற்றவர்கள் நெகிழ்ச்சி

சேலம் பயிலரங்கத்தில் பங்கேற்றவர்கள் நிகழ்வின் இறுதியில் பயிலரங்கம் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
நாமக்கல் ரேஷிகா வர்சினி: பெரியார் குறித்த எனக்குத் தெரிந்த விவரங்களைத் தாண்டி பெரியார் பற்றிய வரலாறுகளை விரிவாக கற்றுக் கொள்ள முடிந்தது. இது என்னுடைய படிப்புக்கு உதவியாக இருக்கும். நான் பார்ப்பனரல்லாத குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அனைத்து சடங்குகளையும் பின்பற்றி வந்தது என்னுடைய குடும்பம். இந்த பயிலரங்கத்துக்கு வந்ததற்குப் பிறகு விடுதலை அடைந்த உணர்வை எட்டி இருக்கிறேன். இனி நல்ல வாழ்க்கை முறைக்கு ஒரு வழி கிடைத்திருக்கிறது. அதற்கு காரணம் பெரியார் தான் என்று கூறினார்.

இசக்கி ராஜன் (திருநெல்வேலி): இங்கே வருவதற்கு முன் பெரியார் குறித்த நான் நிறைய படித்திருக்கிறேன் என்று நினைத்து இருந்தேன். ஆனால் இங்கே தோழர்கள் பேசியதற்குப் பிறகு நான் இன்னும் படிக்காதது நிறைய இருக்கு என்று உணர்ந்து கொண்டேன். ஜாதி குறித்தும் சடங்குகள் எப்படி பெண்கள் வழியாக கடத்தப்படுகிறது என்பது பற்றியும் பெரியாரின் போராட்ட வரலாறு குறித்தும் புதிய செய்திகளை அறிந்து கொண்டேன்.

சஞ்சய் : நான் சேலத்தைச் சேர்ந்தவன் தான். ஓமலூர் பக்கத்துல புளியம்பட்டி என்கிற ஒரு ஊரு. எங்க வீட்டுல ஒரு அம்பேத்கர் படம் இருக்கும். அந்த படம் எங்க அப்பா அம்மா கல்யாணத்துல பரிசா கொடுத்தது. சின்ன வயசுல இருந்தே அந்த படத்தை பார்த்து வந்ததுனால எனக்கு அம்பேத்கர் பரிச்சயமானவர். ஆனா பெரியார் எனக்கு பரிச்சயம் கிடையாது. அவர் படத்தை நான் புத்தகத்தில் பார்த்ததோடு சரி, வேற எங்கேயும் நான் பார்த்தது கிடையாது. இப்படி இருக்கும்போது தோழர் கொளத்தூர் மணி நான் படித்த பள்ளியில் சான்றிதழ் வழங்கும் விழாவுக்கு வராரு. அப்பதான் வந்து கொளத்தூர் மணி அவர்களை முதல்ல சந்திக்கிறேன். அதுக்கப்புறம் தான் பெரியார் யாரு, பெரியார் என்ன பண்ணாரு, பெரியாரை நாம் ஏன் ஆதரிக்கணும் அப்படிங்கற விஷயத்தை படிக்க ஆரம்பிக்கிறேன். பெரியார் சமத்துவம், பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு போன்ற கொள்கைகள் மேல் எனக்கு ஈர்ப்பு வருது. முக்கியமா பெண் அடிமைத்தனம் ஒழிப்பது சாதாரணமா எங்க வீட்டிலேயே நடக்கக்கூடியது தான். இன்னைக்கு கூட எங்க வீட்டுல சண்டை போட்டுட்டு தான் வந்தேன். ஏன்னா எங்க அப்பா வீட்டுல ஒரு வேலை செய்யல. அதை எங்க அம்மா கேட்கும்போது, “அது பொம்பளை வேலை, நான் எதுக்கு செய்யணும்?” அப்படின்னு சண்டை போட்டார். இப்ப நான் அதை எதிர்த்து கேள்வி கேட்கிறேன். ஏன் வேலையில் கூட ஆம்பள, பொம்பளைன்னு இருக்கா? ஏன் ஆம்பள செஞ்சா என்ன? பொம்பளை தான் செய்யணுமா? அப்படின்னு எங்க அப்பா கிட்ட சண்டை போட்டேன். எங்க அம்மாவுக்கு ஆதரவா, என்னைப் பெற்ற என்னுடைய தகப்பனையே எதிர்த்து நான் கேள்வி கேட்கிறேன். இந்த விழிப்புணர்வு கொடுத்தது பெரியாருடைய கொள்கை தான்.

பெற்றோரா இருந்தாலும் அந்த இடத்தில் கேள்வி கேட்கணும்னு நம்மளை ஒரு கருத்தியல் தள்ளுது பாத்தீங்களா? இந்த உந்துசக்தி தான் எல்லாருக்கும் தேவை. பொதுவாவே பெற்றோர்கள் எல்லாருக்கும் ஒரு பயம் இருக்கும். பையன் நல்லா படிக்கணும், படிச்சு செட்டில் ஆகணும்னு எல்லாரும் ஆசைப்படுவாங்க. அதே போல தான் எங்க வீட்டிலயும். இப்ப அவங்களைப் பொருத்தவரை சஞ்சய் வந்தான், ரெண்டு நாள் ஏதோ மீட்டிங்னு போனான், வீட்டுல தங்கல, வீட்டுல சாப்பிடல அப்படிங்கறது மட்டும் தான் அவங்களுக்கு தெரியும். இங்க நான் எப்படிப்பட்ட மனிதர்களை சந்திக்கிறேன், ஒரே கொள்கை உடைய மக்களை நான் சந்திக்கும்போது அந்த சூழ்நிலை எப்படி இருக்கு, அந்த அனுபவம் எப்படி இருக்கு அப்படிங்கறது சொல்லிப் புரிய வைக்க முடியாத ஒரு உணர்வு. ஒரே கருத்தியல் கொண்ட பல மக்களை ஒரே இடத்தில் பார்த்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இந்த உணர்வு ஒரு புது உணர்வா இருக்கு. இப்படி வீட்டுல தங்காம நீ பாட்டுக்கு போயிட்டு இருக்க அப்படின்னு சொல்லி திட்டுனாங்க. தப்பா போயிடுவேன்னு பயந்தாங்க. அப்ப நான் அவங்க கிட்ட ஒரு விஷயம் தான் சொல்லிட்டு வந்தேன். “உன் பையன் தண்ணி அடிக்க போகல, ஊர் சுத்தப் போகல, பொறுக்கித்தனம் பண்ணப் போகல. அரசியல் பண்போடு, பகுத்தறிவு சிந்தனையோடு உள்ள சிந்தனையாளர்களையும் பகுத்தறிவுவாதிகளையும் பார்க்கத்தான் போயிருக்கேன்”னு சொல்லிட்டு வந்தேன். இந்த சந்திப்பு எனக்கு எப்படி வாழ்க்கையில் ஒரு பக்குவப்பட்ட மனிதனா வாழணும்னு எனக்கு உணர்த்தி இருக்கு.

பெரியார் முழக்கம் இதழ் 25062026

You may also like...