திராவிட மாடலும் குஜராத் மாடலும்!

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் கவனம் பள்ளிக் கல்வித்துறையில் தீவிரமாக இருந்தது. பல்வேறு திட்டங்கள் மூலமும் தொடர் சாதனைகளை செய்து வருகிறது. “இல்லம் தேடி கல்வி தொடங்கி, காலைச் சிற்றுண்டி, கலைத் திருவிழா, புதுமைப் பெண், தாயுமானவர் திட்டம், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன், கல்விச் சுற்றுலா என ஏராளமான திட்டங்களை வகுத்து அதை சிறப்பாக நடைமுறைப்படுத்தி தமிழ்நாட்டு கல்விக் கட்டமைப்பை அய்ரோப்பிய நாடுகளுக்கு இணையாக உருவாக்கி வருகிறது.

அரசின் தொடர் சாதனைகளால் தமிழ்நாட்டில் கடந்த 20 நாட்களில் 44,439 மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர். மேலும் கல்வியில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் சேர்க்கை 76% விழுக்காடக உயர்ந்துள்ளது. மாணவர்கள் சேர்க்கை 71% விழுக்காடாக அதிகரித்துள்ளது என ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு நேர்மாறாக கல்விக் கட்டமைப்பை சீர்குலைத்து வருகிறது குஜராத் மாடல் பாஜக அரசு. தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. வகுப்பறை குறைபாடுகள், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, ஆசிரியர்கள் பற்றாக்குறை என குஜராத் பள்ளிக் கல்வித்துறை திணறுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக குஜராத்தை தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதும் 2001- 2014 வரை அவர் முதலமைச்சராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குஜராத் சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ எழுப்பிய கேள்விக்கு, பாஜக அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், மாநிலத்தின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.குஜராத் பள்ளிக் கட்டமைப்பு நெருக்கடி தீவிரமடைந்து வருவதால், கல்வித் துறையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் குஜராத்தில் 75 பள்ளிகள் மூடப்பட்டன. அந்த பதிலில், மொத்தம் 9,442 வகுப்பறைகள் பற்றாக்குறை, மாணவர் சேர்க்கை இல்லாததால் 75 அரசு பள்ளிகள் மூடப்பட்டன. 2,674 பள்ளிகள் ‘ஷிப்ட்’ முறையில் இயங்கும் நிலை என முக்கிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், 32 மாவட்டங்களில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகளில் 8,586 வகுப்பறைகள் குறைவாகவும், மேல்நிலைப் பள்ளிகளில் 856 வகுப்பறைகள் பற்றாக்குறையாகவும் உள்ளதாக அரசு ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை இல்லாமல் 75 அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் பாஜக அரசு தெரிவித்துள்ளது.

அகமதாபாத் போன்ற நகரப் பகுதிகளிலும் இந்த பிரச்சினை இருப்பது, இது கிராமப்புறங்களுக்கான பிரச்சினை அல்ல என்பதைக் காட்டுகிறது. தற்போதைய நடவடிக்கைகள் இந்த பிரச்சினையை சமாளிக்க போதுமானதாக இல்லை என்பது தெரியவருகிறது. ஆகவே குஜராத் மாடல் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துகிறது. திராவிட மாடல் அரசு மாணவ, மாணவிகளை அரசு பள்ளிகளில் சேர்த்து சாதனை படைக்கிறது.
பெரியார் முழக்கம் இதழ் 26032026

You may also like...