நவீன பொருளாரதாத்தில் ஜாதியின் புதிய வடிவங்கள்

இந்தியாவில் பார்ப்பனர்களும் உயர் ஜாதியினரும் பாகுபாடுகளைக் கொண்ட சமூகத்தில் மிகவும் சொகுசான வாழ்க்கைக்கு பழகிவிட்டனர். அவர்கள் தாராளமயம் என்ற ஏற்றத்தாழ்வு கொள்கையை நியாயப்படுத்த ஜாதிகள் தானாகவே மறைந்துவிடும் என்று பேசி வருகிறார்கள் என்கிறார் இந்தியாவின் தலை சிறந்த சமூகவியல் ஆய்வாளர், பேராசிரியர் சுரிந்தர் ஜோத்கா. இவர் புதுடெல்லியில் ஜவஹர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். உலகமயமாக்கல் கொள்கை வந்த பிறகு ஜாதி மீண்டும் புதிய வடிவம் எடுத்துள்ளது என்பதை அவர் ஒரு பேட்டியில் விளக்குகிறார். அவரது பேட்டியில் இருந்து சில பகுதிகள்.

கேள்வி: இந்தியாவின் நவதாராளவாத பொருளாதார சூழலில் ஜாதி எவ்வாறு வெளிப்பட்டுள்ளது?
இது முக்கிய விவாதம். எல்லாமே மாறுகின்றன; ஜாதியும் அதற்கு விதிவிலக்கல்ல. ஜாதி என்பது நிலையான ஒன்றல்ல. அது மனித உறவுகளை ஒழுங்குபடுத்தும் ஒரு சமூக நடைமுறை. ஜாதியை ஒரு உறவாகப் புரிந்துகொண்டால், அது படிநிலை, சமத்துவமின்மை, ஒதுக்கல், மறுப்பு மற்றும் பாகுபாடு ஆகியவற்றோடு தொடர்புடையது. மனித வாழ்வின் பொருளாதார, அரசியல், புவியியல் அமைப்புகள் மாறுவது போலவே, ஜாதியும் காலப்போக்கில் மாற்றத்துக்கு உள்ளாகிறது. இந்தியா ஒரு தேசமாகவும் ஜனநாயக அரசியலமைப்பாகவும் மாறியபோது கிட்டத்தட்ட அனைத்தும் மாறத் தொடங்கின. அனைவரும் சம தகுதியை விரும்பத் தொடங்கினர்; அதையே நாம் குடியுரிமை (Citizenship) என்று அழைக்கிறோம்.

குடியுரிமை என்பது ஒவ்வொரு தனிநபரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை முன்வைக்கிறது. இந்த அரசியல் மாற்றம் மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. அதே நேரத்தில், இந்தியா வறுமையும் கடுமையான சமத்துவமின்மையும் கொண்ட சமூகமாக இருந்ததால், அரசு வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தது. உதாரணமாக இடஒதுக்கீடு (Reservtion). இத்தகைய கொள்கைகள் மக்களுக்கு சமூக முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கின.

பின்னர், 1990-களில் இந்தியா பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையை ஏற்றது. அதற்குப்பிறகு மதமும் பார்ப்பனியமும் உருவாக்கிய ஜாதி என்ற கண்ணோட்டத்தில் மாற்றம் வந்தது. குடிமக்கள் என்ற பார்வையில் பார்ப்பனிய மத அடையாளங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. குடிமக்கள் என்ற அறிவியல் மொழிப் பார்வை உருவானது. `பிராமணர், சூத்திரர், பஞ்சமர்’ என்ற அடையாளங்கள் பட்டியல் இனப் பிரிவு, பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டனர்.

குறிப்பாக இந்திய சமூகத்தின் விளிம்புநிலைகளில் வரலாற்று ரீதியாக வாழ்ந்த பட்டியல் ஜாதியினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) கீழ்த்தட்டு பிரிவினர் தாங்கள் அதிகாரம் மற்றும் சலுகை நிறைந்த பதவிகளில் புறக்கணிக்கப்படுவதை உணரத் தொடங்கினர். அவர்களுக்கு அரசியல் கட்சிகளில் பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கலாம். ஆனால் அரசு நிர்வாகம், நீதித்துறை மற்றும் முக்கிய அரசு நிறுவனங்களில் நுழைவது கடினமாகவே இருந்தது. வளர்ந்து வரும் பொருளாதாரத்திலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தனர். அப்போது அவர்கள் “இந்தப் புறக்கணிப்புக்கு ஜாதி ஒரு காரணமாகவே இருக்கிறது” என்பதை உணர்ந்தனர். இதனால் ஒரு முரண்பாடான நிலை உருவானது. ஜாதியால் அதிகம் பாதிக்கப்படுபவர்களே தங்கள் உரிமைக்காக ஜாதியை பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஏனெனில் புதிய பொருளாதார அமைப்பிலும் ஜாதி அவர்களை விளிம்புநிலையிலேயே வைத்திருக்கிறது.
கேள்வி: 1990-களுக்குப் பிறகு ஜாதி அமைப்பு தனது வடிவத்தை மாற்றிக்கொண்டது போலத் தெரிகிறது. இன்றைய சந்தைப் பொருளாதாரத்தில் ஜாதி எவ்வாறு செயல்படுகிறது?
சுரிந்தர் ஜோத்கா: இதனை இரண்டு வழிகளில் பார்க்கலாம். நேரு காலத்தில் இந்திய நடுத்தர வர்க்கம் ஜாதியை மதம் சார்ந்த பாரம்பரிய படிநிலை அமைப்பாக மட்டுமே பார்த்தது. இந்தியா தொழில்மயமாக்கப்பட்டு நகரமயமாக்கப்பட்டால் ஜாதி தானாகவே மறைந்துவிடும் என்று அவர்கள் நம்பினர். கிராமத்தில் வாழும்போது மட்டுமே ஜாதி நம்மை ஆளுகிறது; நகரத்திற்கு வந்துவிட்டால் அது மறைந்துவிடும் என்று கருதினர். ஏனெனில் நகரத்தில் அண்டை வீட்டுக்காரர் யார்?, உணவை யார் சமைத்தார்கள்?, குடிநீர் எங்கிருந்து வருகிறது? என்பதைக் கூட நாம் அறியமாட்டோம்.
மேலும் ஜாதி என்பது இந்தியாவுக்கே உரிய ஒரு பிரச்சினை என்று அவர்கள் நினைத்தனர்.

ஆனால் உலகின் பிற பகுதிகளிலும் இதேபோன்ற படிநிலை மற்றும் ஒதுக்கல் அமைப்புகள் உள்ளன. உதாரணமாக அமெரிக்காவில் இனவெறி (Race). இன்னும் தொடர்கிறது. உலகமயமாக்கல் கொள்கைக்குப் பிறகு ஜாதி மேலும் ஆழமாக ஊடுருவியுள்ளது என்பதே உண்மை. அது தானாக மறைந்துவிடவில்லை.உதாரணமாக, நில உடைமை அமைப்புகள் ஜாதியுடன் பிணைந்துள்ளன. பிரிட்டிஷ் காலத்தில் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்து ஆங்கிலக் கல்வி பெற்றவர்கள். பார்ப்பன உயர் ஜாதியினரே அதிகாரம் நிறைந்த பதவிகளை கைப்பற்றினர்.

பார்ப்பன உயர்ஜாதியினரின் மிகப்பெரிய சொத்து கல்வியும் ஆங்கிலப் புலமையும் ஆகும். இவை இன்றும் உலகளாவிய சந்தைப் பொருளாதாரத்தில் வெற்றி பெற முக்கியமான கலாச்சார மூலதனங்களாக இருக்கின்றன. தனிநபர் திறமையாக பேசப்படுவது அதிகாரம் நிறைந்த உயர்ஜாதி குடும்பம் மற்றும் உறவினர்களின் வழியாகக் கிடைக்கும் வாய்ப்புகளாகும். நகர்ப்புற குடிசைப்பகுதிகளில் வளர்ந்தவர்கள் அல்லது புதிதாக நகரத்துக்கு இடம் பெயர்ந்தவர்கள் இத்தகைய கலாச்சார மூலதனத்தை எளிதில் பெற முடியாது.

இதனால் புதிய சமத்துவமின்மை உருவாகிறது. அதனால் ஜாதி என்பது வெறும் பாரம்பரிய அடையாள அமைப்பு அல்ல. அது இனஒதுக்கலையும் பாகுபாட்டையும் உருவாக்கும் ஒரு அமைப்பாகவே உள்ளது. எனவே ஜாதியை அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டும்.

கேள்வி: இன்று சமூகத்தில் ஜாதி பெரிய பங்கு வகிப்பதில்லை, உண்மையில் மக்களின் வாழ்க்கை வாய்ப்புகளை நிர்ணயிப்பது வர்க்கம் (Class) தான் என்று ஒரு கருத்து நிலவுகிறது. மேலும் இந்திய நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதி தங்களை “ஜாதியற்றவர்கள்” (Casteless) என்று அடையாளப்படுத்திக் கொள்கிறது. “நான் ஜாதியை நம்புவதில்லை” என்று கூறுபவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சுரிந்தர் ஜோத்கா: கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் உலகளவில் சமூகத்தைப் பற்றிய அறிவு எவ்வாறு உருவாகியுள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சமூகவியல் மற்றும் பொருளாதாரப் பாடநூல்களில் காணப்படும் கோட்பாடுகள், ஜாதியை ஒரு பாரம்பரிய அமைப்பாகவும், இந்தியாவை ஒரு பாரம்பரிய சமூகமாகவும் சித்தரிக்கின்றன. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மூலமாக இந்தியாவில் நவீனத்துவம் வந்தது, இன்னும் முழுமையான நவீன சமூகமாக மாற வேண்டிய தூரம் உள்ளது.

உண்மையில் சந்தைப் பொருளாதாரம் வளரும்போது, ஏற்கனவே சமூகத்தில் அதிகம் வாய்ப்புகளைப் பெற்றிருந்த சில உயர்ஜாதி சமூகக் குழுக்கள்தான் தொடர்ந்து அதே சலுகைகளை அனுபவிக்கின்றன. மேற்கத்திய நாடுகளிலும் இதே நிலைதான் ; அங்கே ஏற்கனவே செல்வாக்கு பெற்றிருந்தவர்களே தாராளமயக் கொள்கையில் மேலும் பயனடைகிறார்கள். உழைப்பு மற்றும் கல்வி இருந்தால் மட்டும் போதும் சமூகம் தானாகவே முன்னேறி விடும் என்று கூறுவதை ஏற்க முடியாது. நவீனத்துவமும் முதலாளித்துவமும் உருவாக்கிய கற்பனைக் கட்டுகதை இது; ஏற்கனேவே உயர்ஜாதிப் பின்புலம் கொண்டவர்கள் மட்டுமே முன்னேற முடிகிறது.

அமெரிக்காவில் இனவெறியை எடுத்துக்கொள்ளுங்கள். அது வெறும் தோல், நிறம் அல்லது தோற்றம் சார்ந்த பிரச்சினை அல்ல. அது அமெரிக்க பொருளாதாரத்திலும் சமூக அமைப்பிலும் ஆழமாகப் பதிந்துள்ளது. அதேபோல் இந்தியாவில் ஜாதிக்கும் தனித்துவமான அம்சங்கள் உள்ளன. அவற்றை உள்ளூர் ஜாதிச் சூழல்களில் புரிந்துகொண்டு எதிர்கொள்ள வேண்டும். “வர்க்கம் மட்டுமே முக்கியம்”, “நாம் ஜாதியற்றவர்கள்” என்று பேசிக் கடந்துவிட முடியாது. ஜாதியின் புதிய வடிவத்தை புரிந்து கொண்டு அதற்கு எதிராகப் போராட வேண்டும்.

அரசியல், சமூகம் அதிகாரம் வழியாக ஜாதி புதிய ‘அவதாரம்’ எடுத்துள்ளது. தனியார் பள்ளிகளில் உயர்ஜாதி சமூக செல்வாக்கு உடைய குழந்தைகளும் அரசுப் பள்ளிகளில் ஒடுக்கப்பட்ட வசதி வாய்ப்பற்ற குழந்தைகளும் படிக்கும் நிலையே நீடிக்கிறது. இதன் வழியாகவும் குழந்தைகள் ஜாதி கடந்து பழகும் நிலை தடுக்கப்படுகிறது. இத்தகைய பள்ளி, கல்வி அமைப்பும் ஜாதியை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.
.உண்மையில் சந்தைப் பொருளாதாரம் வளரும்போது, ஏற்கனவே சமூகத்தில் அதிகம் வாய்ப்புகளைப் பெற்றிருந்த சில உயர்ஜாதி சமூகக் குழுக்கள்தான் தொடர்ந்து அதே சலுகைகளை அனுபவிக்கின்றன.

பெரியார் முழக்கம் இதழ் 02072026

You may also like...