ஜாதி ஒழிப்பை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மக்கள் மனதிலிருந்து ஜாதிய உணர்வை ஒழிப்பதற்கான பொறுப்பை அரசு முன்னெடுக்க வேண்டும்’ என, ஆணவக் கொலை வழக்கு விசாரணையின் போது, சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் மென் பொறியாளர் கவின், 25, ஆணவக் கொலை வழக்கில், கவின் காதலியின் தந்தையான போலீஸ் எஸ்.அய்., சரவணன் ஜாமின் மனு மீதான விசாரணை, உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் நேற்று நடந்தது. வழக்கை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அரசுத் தரப்பு வழக்கறிஞர், ‘மனுதாரர் தன் மனைவியுடன் சேர்ந்து ஆதாரங்களை மறைத்தார். அவரது மகள், கவின் இடையிலான காதல் விவகாரத்தை அறிந்திருந்தும், சுர்ஜித் குற்றம் செய்ய உடந்தையாக இருந்தார். ஜாமினில் விடுவித்தால் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும். அது விசாரணையை பாதிக்கும்’ என்றார்.
‘‘குற்றம் செய்வதில் மனுதாரர் நேரடி பங்காற்றவில்லை என்றாலும், தன் மகனை ஜாதிய மனப்பான்மையுடன் வளர்த்ததற்காக அவர் பொறுப்பேற்க வேண்டும். ஜாதிய மனப்பான்மையின் உச்சகட்ட வெளிப்பாடே ஆணவக்கொலை. ஜாதிய உணர்வு சமூகத்தை பிளவுபடுத்துகிறது. ஒரு வழக்கில், உச்சநீதிமன்றம், ‘ஜாதிய உணர்வு நாட்டிற்கே ஒரு சாபம்’ என, சுட்டிக்காட்டியது.
பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில், 59 ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. ஜாதிய உணர்வு, மக்களின் மனங்களில் ஆழமாக வேரூன்றி, ஒட்டுமொத்த அமைப்பையும் சீரழிக்கிறது. ஒவ்வொருவரின் மனதிலும் ஜாதிய உணர்வு நிலவும் சூழலில், இதற்காக மனுதாரரை அல்லது அவரது குடும்பத்தை மட்டும் குறைகூற முடியாது. ஒருவர் எவ்வளவு சக்தி வாய்ந்தவராக அல்லது சலுகை பெற்றவராக இருந்தாலும், ஏதோ ஒரு வகையில் ஜாதியவாதத்தின் தாக்கத்தை எதிர் கொள்கிறார். நீதிபதிகளும் இதிலிருந்து விலக்கல்ல!
வழக்குகளில் தகுதி, ஆதாரங்களின்படி தீர்ப்பளித்தாலும், அதற்குப் பின்னால் ஜாதி அடிப்படையிலான நோக்கங்கள் இருப்பதாக உள்நோக்கம் கற்பிக்கப்படுகிறது. இம்மாற்றத்தை அரசால் மட்டுமே கொண்டு வரமுடியும். இதற்காக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சில அரசியல் கட்சிகள் ஓட்டு வங்கியை திரட்டுவதற்காக, ஜாதியைப் பயன்படுத்தி, இச்சமூகத் தீமைக்கு மேலும் வலு சேர்க்கின்றன. இத்தகைய மனநிலை தென்மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.
பள்ளி மாணவர்களிடையே வன்முறை சம்பவம் ஒன்று நிகழ்ந்த போது, பள்ளிகளில் ஜாதிய உணர்வை ஒழித்து, சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்யும் வழிமுறைகளைப் பரிந்துரைக்க, ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழுவைத் தமிழ்நாடு அரசு அமைத்தது. அக்குழு தன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அப்பரிந்துரைகளை முழுமையாகச் செயல்படுத்தவில்லை. பட்டியல் ஜாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான, வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்கள் எதிர்பார்த்த பலன்களை அளிக்கவில்லை. இச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகள் அதிகரிக்கின்றன. இளம் தலைமுறையினரின் மனநிலையை மாற்றியமைக்க, பள்ளி அளவிலிருந்தே சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும். படை வீரர்கள் நம் எல்லைகளில் தேசத்திற்குச் சேவை செய்கின்றனர். அவர்கள், எதிரியின் தாக்குதலை எதிர்கொண்டு, தாய்நாட்டைப் பாதுகாக்க தங்கள் உயிரைத் தியாகம் செய்யும்போது, அவர்களின் ரத்தம் அல்லது தேச பக்தியில் ஜாதி முத்திரை பதிவதில்லை.
ஜாதியை இயற்கை, அங்கீகரிப்பதில்லை. ஜாதி சார்ந்த செயற்கை யான தடைகளை சமூகம் கடந்து செல்ல வேண்டும். அப்போது தான், அனைவரும் சமம் என்ற உண்மை, ஆணவக் கொலையில் எந்த கவுரவமும் இல்லை; அது ஒரு வெட்கக்கேடான செயல் என்பதை உணர்ந்து விழித்தெழ முடியும். தமிழ்நாட்டில் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், வேட்பாளர்களின் ஜாதி, சமூகப் பின்னணியைக் கருத்தில் கொள்ளாமல், மக்களை ஓட்டளிக்கச் செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளன. ஜாதி சார்ந்த காரணிகளை பெருமளவு புறக்கணித்தே ஓர் அரசு அமைக்கப்பட்டுள்ளது.
மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படும் போது மட்டுமே, அம்மாநிலம் உண்மையான மாற்றத்தை எட்டியதாகக் கூற முடியும். மக்களின் மனதிலிருந்து ஜாதிய உணர்வை ஒழிப்பதற்கான பொறுப்பை முன்னெடுப்பை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும்.’’ என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
பெரியார் முழக்கம் இதழ் 18062026
