நூற்றாண்டு அநீதியை ஒழித்த பெரியார் இயக்கம்!

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். அன்னூர் நல்லிச்செட்டிபாளையத்தில் நடந்த போராட்டம் குறித்த கட்டுரை.
கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியத்தில் உள்ள சுற்றுவட்ட கிராமங்களில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக எண்ணற்ற தீண்டாமைக் கொடுமைகள் நிலவி வந்தன. பொதுக்குழாயில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடிநீர் பிடிக்கத் தடை, செல்போன் பேசத் தடை, இரட்டைக் குவளை முறை, சலூன்களில் தாழ்த்தப்பட்டோருக்கு முடிவெட்டத் தடை, பொது சுடுகாட்டில் தாழ்த்தப்பட்டோரை புதைக்கத் தடை, மோட்டார் பைக் ஓட்டத் தடை என விதவிதமான தீண்டாமைக் கொடுமைகளுக்கு அப்பகுதி மக்கள் ஆளாகியிருந்தனர்.
2000-க்குப் பிந்தைய நவீன உலகிலும்கூட இத்தகைய ஜாதியக் கொடுமைகள் தலைவிரித்தாடுவதை சகித்துக்கொள்ள முடியாமல், இவற்றுக்கெதிராகப் போராட வேண்டுமென்ற எண்ணம் அங்குள்ள நல்லிசெட்டிபாளையம் பகுதி இளைஞர்களுக்கு ஏற்பட்டது. ஈஸ்வரன், ஜோதிராம், ராமன் மற்றும் சில இளைஞர்கள் இணைந்து தங்கள்மீது திணிக்கப்படும் ஜாதிய அநீதிகளைத் துடைத்தெறிய, 2009-இல் பெரியார் திராவிடர் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். ஊரின் ஒரு பகுதியில் இடைநிலை சமூகத்தினரும் மற்றொரு பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். பெரியார் திராவிடர் கழகத்தில் இணைந்து பிறகு ஜாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக மக்களை அணி திரட்டினர். தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியைப் ‘பெரியார் நகர்’ என்று அழைக்கத் தொடங்கினர். கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். மூடநம்பிக்கைகளில் இருந்து மக்களை வெளியேற்றி பகுத்தறிவுச் சிந்தனைகளை வளர்க்கத் தொடங்கினர். சுற்றுப்புறங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் பகுத்தறிவுச் சிந்தனைகளும் சுயமரியாதை எண்ணமும் வேர்விட்டுப் படரத் தொடங்கியது.
அதன் மாற்றங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே வெளிப்படத் தொடங்கியது. குறிப்பாக, அன்னூர் ஒன்றியத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளைப் பட்டியலெடுத்து அவற்றை சரிசெய்ய வேண்டுமென்று, 21.05.11 அன்று கோவை.இராமகிருஷ்ணன் தலைமையில் அன்னூரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தது பெரியார் திராவிடர் கழகம். அதில் குருக்கிளையாம்பாளையம் கிராமத்தில் பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க தீண்டாமைக் கொடுமை நிலவுவதாகச் சுட்டிக்காட்டியிருந்தனர். அதில் குறிப்பிட்டதைப் போலவே 12.06.2011 அன்று குருக்கிளையாம்பாளையத்தில் பொதுக்குழாயில் குடிநீர் பிடிக்கச் சென்ற வசந்தகுமார் என்ற மாணவனை, அங்கிருந்த ஆதிக்க ஜாதியினர் சிலர் தடுத்து தாக்கி அனுப்பினர். அடுத்த ஒரு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு அன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையை மறித்தனர். காவல் நிலையத்தில் நள்ளிரவு ஒரு மணி வரை போராடி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
சுற்றுப்புற கிராமங்கள் அனைத்திலும் நிலவிய தீண்டாமைக் கொடுமைகளைப் பட்டியலெடுத்து பெரியார் திராவிடர் கழகம் சார்பில், மறுநாள் காலையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அப்போது புதிதாக அமைந்திருந்த அ.தி.மு.க. அரசு சிறுவனைத் தாக்கியவர்களைக் கைது செய்யவில்லை. தீண்டாமைக் கொடுமைகளைத் தீர்க்கவும் முனையவில்லை. இதையடுத்து, 27.06.2011, அன்று கொளத்தூர் மணி தலைமையில் ஆயிரம் குடங்களுடன் தண்ணீர் பிடிக்கும் போராட்டத்தில் இறங்கியது பெரியார் திராவிடர் கழகம். வசந்தகுமாரையும் அவரின் தாயாரையும் அதே குழாயில் தண்ணீர் பிடிக்க வைத்துவிட்டே அங்கிருந்து வெளியேறினார் கொளத்தூர் மணி. ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து தண்ணீர் பிடித்தனர். ஒரு நூற்றாண்டு இழிவு ஒரு நொடியில் துடைத்தெறியப்பட்டது. அதற்கான விதையாக நல்லிசெட்டிபாளையம் பெரியார் நகரில் முளைத்த பகுத்தறிவுச் சிந்தனையும் சுயமரியாதை உணர்வும் இருந்தன.
தமிழ்நாட்டு ஊடகங்களைத் தாண்டி அகில இந்திய ஊடகங்கள் வரை செய்தியாகிக் கவனம்பெற்ற போராட்டமாக மாறியது. குருக்குளையாம்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்குழாயில் தண்ணீர் எடுக்கும் போராட்டம். அதன் வெற்றி காரணமாக அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக நிலவிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகத் துணிச்சலோடு செயலாற்றத் தொடங்கியது பெரியார் திராவிடர் கழகம். குறிப்பாக இரட்டைக்குவளை முறை மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்கள் தேநீர் குடித்த டம்ளர்களை அவர்களேதான் கழுவி வைக்க வேண்டுமென்ற நிலைமையும் அங்கு இருந்தது. அதேபோல, நல்லிசெட்டிபாளையத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள ஊர் அக்கரை செங்கப்பள்ளி கிராமம். அங்கு சலூன் கடையில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு முடிவெட்ட அனுமதி மறுக்கும் அவலம் இருந்தது. இப்படி அன்னூர் முழுவதும் பல்வேறு கிராமங்களில் வித விதமான ஜாதி ஆதிக்கம் நடைமுறையில் இருந்தது.
நல்லிசெட்டிபாளையத்தில் உருவான பெரியார் படை, இந்த ஜாதி ஆதிக்கங்களை ஒவ்வொன்றாகத் தவிடுபொடியாக்கியது. இப்போது சுற்றுப்புற கிராமங்களில் எங்கும் இரட்டை டம்ளர் முறை நடைமுறையில் இல்லை. ‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடிவெட்ட மாட்டோம்; தண்ணீர் தர மாட்டோம் என்று சொல்ல எவருக்கும் துணிச்சல் இல்லை’ அதே வேளையில், இன்றும் நடைமுறையில் இருக்கும் இரட்டைச் சுடுகாடு முறைக்கு எதிராகப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2013-ஆம் ஆண்டில், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நல்லிசெட்டிபாளையத்தில் ஒன்றரை சென்ட் நிலம் வாங்கி, பெரியார் இளைஞர் நற்பணி மன்றம் ஒன்றைத் தொடங்கினர். அந்த இடத்தில் தந்தை பெரியார் படிப்பகம் ஒன்றை அமைத்துள்ளனர். அங்கு குழந்தைகளுக்கு டியூஷன், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை அளிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
பெண்களை இடுகாட்டிற்கே அழைத்துச் செல்ல மறுக்கும் பொதுச்சமூகத்தின் பிற்போக்குச் சூழலுக்கு மத்தியில், நல்லிசெட்டிபாளையத்தில் எவரேனும் இறந்தால் பெண்களே அவர்களின் உடல்களைச் சுமந்துசென்று சுடுகாட்டில் அடக்கம் செய்யும் வழக்கத்தைத் தொடங்கிவைத்திருக்கிறது தந்தை பெரியார் திராவிடர் கழகம். ஊரில் கோயில் விழாக்கள் நடைபெற்றாலும், 10-ஆண்டுகளாக அங்கு நடைபெறும் தமிழர் திருநாள் – பொங்கல் விழாக்கள்தான் முதன்மையானவை. தனித்தமிழில் பெயர் சூட்டும் கலாச்சாரமும் பெரியார் தொண்டர்களால் அங்கு உருவாகியிருக்கிறது.
ஒரு நூற்றாண்டாகச் சுமந்துவந்த சமூக அநீதிகளை 20-ஆண்டுகளில் உதறித் தள்ளியிருக்கிறார்கள் நல்லிசெட்டிபாளையம் தாழ்த்தப்பட்ட மக்கள். அந்தத் துணிச்சலின் முகவரியாக இருந்திருக்கிறார் பெரியார். அதனால் ஊரின் ஒரு பகுதிக்கு பெரியார் பெயரைச் சூட்டி, தற்போது பெரியார் சிலையையும் அம்பேத்கர் சிலையோடு சேர்த்து வைக்க ஆயத்தமாகியிருக்கிறது தந்தை பெரியார் திராவிடர் கழகம். ஆறடியில் உயர்ந்து நிற்கப்போகும் பெரியார், அம்பேத்கர் சிலைகள் காலத்துக்கும் சொல்லப் போகிறது, தீண்டாமைக் கொடுமைகளை ஒழித்த வரலாற்றை; ஜாதி ஒழிப்புக்கான வழியை.

பெரியார் முழக்கம் இதழ் 30042026

You may also like...