எதையும் ஏன்? என்று கேள்வி கேள்!குழந்தைகள் மகிழ்வு பழகுமுகாம்
தமிழ்நாடு மாணவர் கழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் மன்றம் இணைந்து நடத்திய குழந்தைகள் பழகு மகிழ்வு ஒரு நாள் முகாம் 30.05.2026 சனிக்கிழமை கொளத்தூர் உக்கம்பருத்திக்காடு பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.
சுகந்தன் பிரபாகரன் (தமிழ்நாடு மாணவர் கழகம்) தலைமை வகித்தார். செ.யாழ் இன்பன் (தமிழ்நாடு மாணவர் கழகம்) முன்னிலையில் நடைபெற்றது.
முதல் வகுப்பாக தன்னை அறிதல் என்ற தலைப்பில் `சிறார் நண்பன்’ ஆனந்த் குழந்தைகள் தாங்கள் யார்? தங்களின் அடையாளம் என்ன? வாழ்வில் தாங்கள் அடையவேண்டிய இலக்குகளை எவ்வாறு திட்டமிடுவது? என்பது குறித்து ஒரு கலந்துரையாடலாக, செயல்பாடுகளுடன் வகுப்பு நடைபெற்றது.
ஏனென்று கேள்வி கேள்? என்ற தலைப்பிலான வகுப்பை தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி நடத்தினார். சமூகத்தில் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை எழுப்பி அதற்கு பதிலையும் பெற வேண்டும் என்பதனை குழந்தைகள் அறிந்து கொள்ளும் வகையில் செயல்பாடுகள், கதைகள் மூலம் வகுப்பு எடுத்தார். உணவு இடைவேளைக்குப் பின்னர் காவை.இளவரசன் மந்திரமில்லை! தந்திரமே என்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சிகளை குழந்தைகளின் பங்கேற்புடன் சிறப்பாக நடந்தது. இறுதியாக முகாம் குறித்த குழந்தைகளின் கருத்துகள் கேட்டறியும் மீளாய்வு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு மதிய உணவு, தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி குழந்தைகளுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். முகாமில் 32 குழந்தைகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
குழந்தைகளுக்கு நினைவுப் பரிசாக எவர்சில்வர் நீர்க்குடுவைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாணவர் கழகத் தோழர்கள் சுகந்தன் பிரபாகரன், யாழ் இன்பன் , நாகராஜ் , சு.அன்புமலர் ஆகியோர் செய்தனர். நிகழ்ச்சியில் கருத்தாளர்களாகச் செயல்பட்ட சிவகாமி, சிறார் நண்பன் ஆனந்த் , இளவரசன், சுதா ஆகியோரின் சிறப்பான செயல்பாடுகளால் முகாம் மகிழ்வுடனும் கொண்டாட்டமாகவும் பயனுள்ளதாகவும் நடைபெற்றது. செல்வேந்திரன், காவலாண்டியூர் ஈஸ்வரன், எஸ்.எம்.டி பிரபு ஆகியோர் உரிய வழிகாட்டுதல்களை மேற்கொண்டனர்.
இறுதியாக தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் சு.அன்புமலர் நன்றி கூறினார். கொளத்தூர், மேட்டூர் உக்கம்பருத்திக்காடு காவலாண்டியூர், நங்கவள்ளி, இளம்பிள்ளை, சேலம் கேம்ப் ஆகிய பகுதி தோழர்களும், பொறுப்பாளர்களும் இந்தப் பழகு முகாமில் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 04062026
