உலகிலேயே குடும்பத் தலைவிகளின் உழைப்புக்கு ஊதியம் வழங்கிய ஒரே ஆட்சி தமிழ்நாடு
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பரப்புரையில் மக்களின் இதயங்களோடு உரையாடுகிறார். குறிப்பாக ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும். பெண்களுக்கான தமிழ்நாடு அரசின் உரிமைத் தொகை திட்டம் அவர்களின் குடும்ப உழைப்புக்கு வழங்கப்படும் ஊதியம் என்பதை உள்ளத்தில் பதிய வைக்கிறார். குடும்பத் தலைவி என்ற பெயரில் அவர்கள் உழைக்கிறார்கள்; அதற்கு ஊதியம் இல்லை; வேலைக்குச் செல்லும் ஆண்கள் தான் ஊதியம் பெறுகிறார்கள் என்று சமூகம் கூறுகிறது. குடும்பத் தலைவிகள் காலையில் தொடங்கி குடும்பத்திற்கு வழங்கும் வேலைகளை முதல்வர் பட்டியலிட்டுக் காட்டும்போது பெண்கள் அந்த எதார்த்தத்தை உணர்ந்து முதல்வரின் உரையோடு ஒன்றிப் போகிறார்கள். குடும்பத் தலைவிகளின் ஊதியமற்ற உழைப்புக்கு ஊதியம் வழங்க வேண்டும்; உரிய அங்கீகாரம் வேண்டும் என்ற இயக்கம் உலகம் முழுதும் நடந்து வருகிறது.
பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஜெர்மனி போன்ற நாடுகளில் குடும்பத் தலைவிகளின் ஊதியமற்ற உழைப்புக்கு சட்ட அங்கீகாரம் மட்டுமே கிடைத்திருக்கிறது.
குழந்தை வளர்ப்பு, சொத்துரிமை, ஓய்வூதியம் போன்றவற்றில் பெண்களின் குடும்ப உழைப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து இருக்கின்றன.
இத்தாலி, அயர்லாந்து, போலந்து, போன்ற நாடுகளில் சட்ட அங்கீகாரம் மட்டும் போதாது; நேரடி ஊதியம் வேண்டும் என்ற போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
சோசலிச கியூபாவில் குடும்பத்தில் பெண்ணுக்கும் ஆணுக்கும் சமமான பொறுப்பு இருக்கிறது என்று சட்டம் இருக்கிறது; இலவச கல்வியும் மருத்துவமும் சேவையாக வழங்கப்படுகிறது. ஆனால் வீடுகளில் ஊதியம் ஏதுமின்றி உழைக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஊதியம் என்று உலகில் இதுவரை எந்த ஒரு நாட்டிலும் வழங்கப்படவில்லை.
திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தமிழ்நாடு தான் மகளிர் உரிமைத் தொகை வழியாக இதற்கு முன் உதாரணமாக உலகத்துக்கே வழிகாட்டி தலை நிமிர்ந்து நிற்கிறது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து தெலுங்கானா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் இத்திட்டத்தை பின்பற்றி வருகின்றன. இந்த கோரிக்கைக்காக போராடும் சர்வதேச பெண்கள் இயக்கங்கள் தமிழ்நாடு முன்னுதாரணத்தை சுட்டிக்காட்டி விவாதிக்கின்றன. இந்த சாதனையைத் தான் தமிழ்நாடு முதல்வர் மக்கள் இதயங்களில் பதிய வைத்து வருகிறார்.-
விடுதலை இராசேந்திரன்.
பெரியார் முழக்கம் இதழ் 23042026
