சட்டத்தின் ஆட்சியா? பார்ப்பன ஆட்சியா?
சபரிமலை அய்யப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களை அனுமதிக்க மறுப்பது ‘தீண்டாமைக் குற்றம்’ என்று 2019ல் உச்ச நீதிமன்றத்தில் ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுக்கள் குவிந்தன. இப்போது 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரை உச்சநீதிமன்றத் தீர்ப்பினை சபரிமலை அய்யப்பன் கோயிலில் அமல்படுத்தவில்லை. தீர்ப்பை உறுதியாக ஆதரித்த கேரள இடதுசாரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி இப்போது தனது முடிவை தேர்தலுக்காக மாற்றிக் கொண்டு விட்டது பெரும் அவலம். சம்பிரதாயங்கள் தொடர்ந்து நீடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி மனு போட்டுள்ளது.
33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பெண்கள் உரிமைக்காக கொண்டு வந்ததை எதிர்க்கட்சிகள் தடுத்து விட்டன என்று மோடி “பெண்ணுரிமைக் காவலர்” போல் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். ஆனால் இதே மோடிஆட்சி உச்ச நீதிமன்றத்தில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக்கூடாது என்று தீவிரமாக வாதிட்டு வருகிறது. ஒன்றிய ஆட்சி சார்பில் வாதாடும் வழக்கறிஞர் துஷார் மேத்தா “கோயில் நடைமுறைகளில் தலையிடும் உரிமை நீதிமன்றங்களுக்கு இல்லை என்றும்; சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மறுப்பது பக்தர்களுக்கும்; தெய்வத்துக்கும் ஆன உரிமை என்றும்; இது பாலின பாகுபாடு அல்ல!” என்றும் வாதாடுகிறார்.
இடைமறித்த நீதிபதி பி.வி நாகாரத்தினா அனைவருக்கும் வழிபாட்டு உரிமைகளை தரவேண்டிய கோயில்கள் ஒரு பிரிவினருக்கு மட்டும் பாகுபாடு காட்டலாமா? என்று கேட்டதற்கு “இது பாகுபாடுகள் அல்ல! ஒரு பிரிவினருக்கான கோயில்களின் சம்பிரதாயம்” என்கிறார் ஒன்றிய ஆட்சியின் வழக்கறிஞர்.
சட்டத்தின்படி ‘இந்து’ என்பது ஒரு மதம் என்றாலும் உண்மையில் அது ஒற்றை மதம் அல்ல; பல்வேறு பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி சம்பிரதாயங்கள் உண்டு என்பதே ஒன்றிய ஆட்சியின் வாதமாக இருக்கிறது. அது மட்டுமல்ல “மதத்தை பகுத்தறிவு அல்லது அறிவியல் அடிப்படையில் பார்க்க முடியாது! என்றும் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சக்தியின் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது” என்றும் வாதிடுகிறார் ஒன்றிய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா.
குழந்தைத் திருமணத் தடை; விதவை மறுமணம்; உடன்கட்டை ஏறுதலுக்குத் தடை என்று ஒவ்வொரு சீர்திருத்த சட்டங்கள் வந்த போதும் இதே போன்ற எதிர்ப்புக் குரல்கள் தான் பார்ப்பனர்களிடமிருந்து வந்தன. கோயில் நுழைவு சட்டம் வந்தபோதும் அதற்கும் ஆகமங்களைக் காட்டி எதிர்த்தார்கள். கோயிலுக்குள் நுழைய உரிமை மறுக்கப்பட்ட “சூத்திர-பஞ்சமர்”களுக்கு கோபுரங்களைக் கட்டி வீதியிலிருந்து வழிபட வைத்தனர். இப்போதும் வைதீக சடங்குகளில் பெண்களுக்கு அனுமதி இல்லை; பார்ப்பன பெண்கள் “பிராமணர்” ஆக முடியாது. மனுதர்மப்படி அவர்களும் ‘சூத்திரர்கள்’ தான். அவர்களுக்குப் பூணூல் போடும் உரிமை இல்லை.
“இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு; எனவே இந்துக்களுக்குத்தான் முன்னுரிமை” என்று அரசியலில் ‘இந்துத்துவா’ கொள்கையை பேசுகிறார்கள். அதே இந்துக்களில் ‘பிராமணர்கள்’ மேலாதிக்கத்தை நிலைநிறுத்த; இந்து மதம் ஒரே மதம் அல்ல! அது பல்வேறு பிரிவுகளைக் கொண்டது; ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி சடங்கு வழிபாட்டு உரிமை இருக்கிறது என்கிறார்கள்.
இந்து மதத்தை ஒரே குடையின் கீழ் பொதுமைப்படுத்தி விட்டால் சிறுபான்மை பார்ப்பனர்களின் வேத மதத்தை பிற பிரிவுகளின் மீது திணிக்க முடியாமல் போய்விடும் என்பதே இதன் நோக்கம். பார்ப்பனரல்லாத பெரும்பான்மை இந்துக்களின்மீது பார்ப்பன வேத மதமும் சடங்குகளும் திணிக்கப்பட்டு அவர்களை ஏற்கச் செய்தால்தான் இந்து மதமும் இந்து சமூகமும் பார்ப்பனிய கட்டுப்பாட்டில் நிலைக்கச் செய்ய முடியும். இதன் காரணமாகவே பல்வேறு மதக் குழுக்களை ஒருங்கிணைத்து பிரிட்டிஷ் ஆட்சியில் இந்து என்ற பெயருக்குள் அடக்கிய போது காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகர சரஸ்வதி ஆதரித்து மகிழ்ச்சியுடன் கூத்தாடினார்.
இப்போது சட்டத்தால் இந்து மதம் ஒரே மதம் என்றாலும் சாஸ்திர சம்பிரதாயங்களால் வெவ்வேறானவை என்றும் எனவே சபரிமலை அய்யப்பன் கோயில் இந்து மதத்தில் ஒரு பிரிவு என்றும் ஒன்றிய பாஜக ஆட்சி பச்சைப் பார்ப்பனியத்தை பேசுகிறது. பெண்களுக்கு அனுமதியை மறுப்பதற்கு இந்த தனிப்பிரிவை ஒரு காரணமாக முன்வைக்கிறார்கள். சனாதனம் என்ற போர்வைக்குள் இந்தத் தீண்டாமைகள் அடங்கிக் கிடக்கின்றன.
“பிராமண” மேலாதிக்கத்தில் பெண்கள் மீதான தீண்டாமையைத் திணிப்பதில் சட்டங்கள் தலையிட முடியாது என்றால் இந்த நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சட்டத்துக்கு அப்பாற்பட்ட பார்ப்பன ஆட்சியா? இதைத்தான் பெரியார் கேட்டார். பெரியார் எழுப்பிய கேள்விகள் இப்போதும் உயிர்த் துடிப்புடன் நீடிக்கிறது என்பதை ஒன்றிய ஆட்சியின் கருத்துக்களே உறுதிப்படுத்துகின்றன.
பெரியார் முழக்கம் இதழ் 23042026
