அதிகாரிகளை மாற்ற தேர்தல் ஆணையத்துக்கு உரிமை உண்டா?

தேர்தல் ஆணையம் தனது அதிகார வரம்பை மீறி தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர்; காவல்துறை இயக்குனர் ; உளவுத்துறை இயக்குனர் போன்ற உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி அவரிடம் அதிகாரிகள் இடமாற்றலை வலியுறுத்தினார் என்ற செய்தி ஏற்கனவே வந்தது. பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவது உறுதியாகி உள்ளது.

மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் அதிகாரிகளை கண்மூடித்தனமாக இடமாற்றம் செய்வதை எதிர்த்து மம்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்றம் அதிகாரிகளின் இடமாட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறது. இப்போது தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் இந்த நாடகத்தை துவங்கி இருக்கிறது. உண்மையிலேயே உயர் அதிகாரிகளை இப்படி பந்தாடும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறதா? இதுகுறித்து நாடாளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் பி.டி.டி ஆச்சாரி `இந்து’ ஆங்கில நாளேட்டில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். (ஏப்ரல்-3,2026) அதில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை சுட்டிக்காட்டுகிறோம்.

சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கான முழு அதிகாரத்தையும் தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் சட்டத்தின் 324 வது பிரிவு வழங்கியிருந்தாலும் அந்த அதிகாரம் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் இதை தெளிவுபடுத்தி இருக்கிறது.

குறிப்பாக மொகிந்தர்சிங் தேர்தல் ஆணையர் வழக்கு மிகவும் முக்கியமானது (1978).

சுதந்திரமான தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட உரிமையை மனம் போன போக்கில் செயல்படுத்த முடியாது.

நாடாளுமன்றமும் சட்டமன்றமும் நிறைவேற்றியுள்ள சட்டங்கள் அமுலில் உள்ள போது தேர்தல் ஆணையம் அந்த சட்டங்களோடு இணைந்து செயல்பட வேண்டுமே தவிர, அதை மீறும் முயற்சிகளில் இறங்க கூடாது.

அய்.ஏ.எஸ் மற்றும் அய்.பி.எஸ் அதிகாரிகள் மாநில அரசுக்கு கட்டுப்பட்டவர்கள். அரசியல் சட்டத்தில் 7ஆவது பிரிவு இதை உறுதி செய்கிறது.

தேர்தலை நடத்துவதற்கு தேவையான அதிகாரிகளையும் ஊழியர்களையும் தேர்தல் ஆணையம் மாநில அரசிடம் இருந்துதான் கேட்டுப் பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கும் 324 வது உட்பிரிவு 6 கூறுகிறது.

தேர்தல் ஆணையத்திற்கு தனியாக நிர்வாக் கட்டமைப்பு எதுவும் இல்லை.

1950 மற்றும் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் தேர்தல் ஆணையத்திற்கு உள்ள அதிகாரங்களை விரிவாக விளக்குகிறது. அதில் எந்த ஒரு இடத்திலும் அதிகாரிகளை மாற்றும் உரிமையை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்படவே இல்லை.

இடமாற்றம் செய்யப்படும் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் எந்த குறுக்கீடுகளை செய்தார்கள் என்பதற்கான காரணங்களை கூறாமலே இடமாற்ற அதிகாரத்தை கையில் எடுப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

இந்த இடமாற்றங்களை தேர்தல் ஆணையம் அண்மைக் காலமாகவே கையில் எடுத்திருக்கிறது.இதனால் அதிகாரிகள் மன பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மொகிந்தர்கில்சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் “இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் பேரரசுகளும் இல்லை; பேர் அரசர்களும் இல்லை. தேர்தல் ஆணையம் தனக்கு வழங்கப்பட்ட சட்ட உரிமையை ஆயுதம் ஆக்கக்கூடாது வரம்பற்ற அதிகாரத்திற்கு நமது அரசியல் அமைப்பில் இடமில்லை” என்று தேர்தல் ஆணையத்தின் தலையில் குட்டு வைத்திருக்கிறது.

அதிகாரிகளை மாற்றுவதாலேயே ஆட்சி மாற்றம் வந்துவிடாது. எடப்பாடிகளும் அமித்க்ஷாக்களும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இப்படி குத்தாட்டம் போடலாம். தேர்தல் முடிவுக்கு பிறகு திராவிட மாடல் ஆட்சி இதே அதிகாரிகளை அந்தந்த பதவிகளில் நியமிக்கப்படுவதை தமிழ்நாடு பார்க்கப் போகிறது.
பெரியார் முழக்கம் இதழ் 16042026

You may also like...