எடப்பாடி நடத்திய ‘பாஜக’ பினாமி ஆட்சி!
எடப்பாடி ஆட்சியில் நடைபெற்ற மக்கள் விரோத செயல்கள் ஒரு தொகுப்பு:
தமிழ்நாட்டில் எடப்பாடி முதலமைச்சர் ஆக இருந்த காலத்தில் பாஜகவின் பினாமி ஆட்சி தான் நடந்தது. இதற்கு ஏராளமான சான்றுகளை பட்டியலிட முடியும். தமிழ்நாடு பாஜகவினரே எடப்பாடியை மிரட்டி வேலை வாங்கினார்கள். அவர்கள் வைத்த ஒவ்வொரு கோரிக்கைக்கும் எடப்பாடி பணிந்து போனார். உதாரணத்திற்கு சிலவற்றை மட்டும் சுட்டிக் காட்டுகிறோம்.
தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட முக்கிய அதிகார பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களே இருந்தனர்.
தமிழ் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் அரசு பணிகளில் சேரலாம் என்று அரசு தேர்வாணைய விதிகளை திருத்தி எழுதி தமிழ்நாட்டில் அரசு பணிகளிலும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிகளிலும் பொறியியல் கல்லூரி பேராசிரியர் பணிகளிலும் ஏராளமான வடநாட்டுக்காரர்கள் தமிழ்நாட்டிற்கு உள்ளே நுழைய அதிமுக ஆட்சி எடப்பாடி ஆட்சி அனுமதித்தது.
12 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பதவிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் 80 விழுக்காடு வெளி மாநிலத்தவர்களையே தேர்வு செய்தது. திறந்த போட்டியில் மதிப்பெண்களில் குளறுபடி செய்து வடநாட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மெக்கானிக் (இன்ஜினியரிங்) விரி வுரையாளர்களுக்கான திறந்த போட்டியில் 67 பேரில் 48 பேர் வெளிமாநிலத்தவர்கள். மின்னணுவியல் பிரிவில் (ECE) தேர்வுசெய்யப்பட்ட 36 பேரில் 31 பேர் வெளி மாநிலத்தவர்கள். உயர் நீதிமன்றமே இதில் தலையிட்டு தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்தது. எடப்பாடி மவுனமாக இவ்வளவு முறைகேடுகளுக்கும் பச்சைக்கொடி காட்டினார்.
அய்.அய்.டி மற்றும் அய்.அய்.எம் போன்ற உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டன. இது தவிர அனுமதிக்கப்பட்ட ஒரே மாநில மொழி குஜராத் மட்டும்தான். அப்படியானால் தமிழில் ஏன் தேர்வு எழுத உரிமையில்லை என்று எடப்பாடி தட்டிக் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் கேட்கவில்லை.
தெற்கு ரயில்வேயில் மாநில மக்களுக்கே தரப்பட வேண்டிய வேலைகளில் 90 சதவீதம் வடநாட்டவர்களுக்கு தாரைவாக்கப்பட்டது; எடப்பாடி இதை தட்டி கேட்கவில்லை; கைகட்டி நின்றார்.
மருத்துவ உயர்பட்டப் படிப்பில் பிற்படுத் தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மோடி ஆட்சி ரத்து செய்த போது எடப்பாடிமவுனம் சாதித்தார். திமுக ஆட்சியில் தான் முதல்வர் சட்டப் போராட்டம் நடத்தி இந்த உரிமையை மீட்டுத் தந்தார்.
பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் தலித் மாணவர்களுக்கு அரசு வழங்கிய உதவித்தொகை ரூ.85,000 ரூ.50,000 ஆக குறைத்தார் எடப்படி.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா.
இதற்கு நேர் மாறாக ஈழப் போராட்டத்தில் உயிர் நீத்த போராளிகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வுக்கு தமிழக பாஜகவின் மிரட்டலுக்கு பணிந்து எடப்பாடி தடை போட்டார்;
மே 17 இயக்கத்தைச் சார்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவினார் எடப்பாடி.
பல மாதங்கள் சிறைவாசத்திற்குப் பிறகு நீதிமன்றம் வழியாக விடுதலை பெற்ற தோழர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததும் குற்றம் என்று அறிவித்து வழக்கு பதிவு செய்தார் எடப்பாடி.
அயோத்தி ராமன் கோயில் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது சங்பரிவாரங்கள் அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வரை ராமன் ரத யாத்திரை ஒன்றை நடத்தினார்கள். ஒன்றிய உள்துறை அமைச்சகமே தமிழ்நாடு உள்துறைக்கு நேரடியாக ஆணையிட்டு இந்த ரத யாத்திரையை அனுமதிக்க வேண்டும் என்று கூறியது.
தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை உருவாக்கும் இந்த யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்று திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் எதிர்த்த நிலையிலும் எடப்பாடி அந்த ஊர்வலத்தை அனுமதித்தார்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இதை எதிர்த்த போது “இது மத ஊர்வலம்; அரசியலுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும்,
பிற மாநிலங்களில் அனுமதிக்கும் போது ஏன் தமிழ்நாட்டில் அனுமதிக்க கூடாது என்றும் ஆர்.எஸ்.எஸ் குரலிலேயே பேசினார் அதற்கு மு.க. ஸ்டாலின் இது பெரியார் மண் என்று பதிலடி தந்தார்.
தமிழ்நாட்டில் பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்று எச்.ராஜா முகநூலில் பதிவிட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடே கொந்தளித்தது. ஆனால் அவர் மீது எந்த வழக்கையும் எடப்பாடி பதிவு செய்யவில்லை.
ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் நேரடியாக அரசு நிர்வாகங்களில் தலையிட்டார். அரசு அலுவலகங்களை ஆய்வு செய்ய புறப்பட்டார். இந்த அத்துமீறலை கண்டித்து எதிர்க்கட்சியான திமுக தான் போராடியது. முதல்வர் பதவியில் இருந்த எடப்பாடி வாய்மூடி மவுனம் சாதித்தார் .
பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தை ஆளுநரே பறித்து 16 பல்கலைக் கழகங்களுக்கு வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களையும் சங்கிகளையும் துணைவேந்தராக நியமித்தார்.
ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி இப்படி தலையிட்ட போது ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று சட்டம் இயற்றி அதை சென்னா ரெட்டி வாய் வழியாகவே ஆளுநர் உரையில் படிக்கச் செய்தவர் ஜெயலலிதா. ஆனால் எடப்பாடி பாஜக மிரட்டலுக்கு பயந்து கைகட்டி நின்றார். அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற ஜெயக்குமார் ஆளுநரின் இந்த உரிமை பறிப்பை நியாயப்படுத்தி பேசினார்.
திரைப்பட விழா ஒன்றில் பேசிய இயக்குனர் பாரதிராஜா விநாயகன் கடவுள் வடநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று என்ற வரலாற்றுத் தகவலை, பேசியதற்காக,சங்கிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாய்ந்தார்கள்; உடனே பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்தார் எடப்பாடி!
ஒரு குலத்துக்கு ஒரு நீதி பேசும் மனு சாஸ்திரத்தை எதிர்ப்பதே குற்றம் என்றார் எடப்பாடி; விசிக தலைவர் திருமாவளவன் மனுசாஸ்திரம் பெண்களை அடிமைப்படுத்துவதை சுட்டிக்காட்டி பேசிய போது தமிழக பாஜகவினர் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிரட்டினார்கள். உடனே அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தார் எடப்பாடி.
தமிழ்நாடு அரசு அறிவித்த தமிழ்நாடு உதயமான நாளை தமிழருக்கான கொடியேற்றி கொண்டாடியதற்காக தோழர் பொழிலனை கைது செய்து சிறையில் அடைத்தார் எடப்பாடி!
அமைச்சரவை நிறைவேற்றிய நீட் விலக்கு தீர்மானத்தைஏற்க மறுத்து குடியரசு தலைவர் அனுப்பிய கடிதத்தை ஓராண்டு காலம் மக்களுக்கு தெரியாமல் மூடி மறைத்தார் எடப்பாடி; மீண்டும் ஒருமுறை சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பலாம் என்ற கோரிக்கையையும் ஏற்க மறுத்தார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்தான் இந்த வாய்ப்பையும் பயன்படுத்தி 2 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது; மருத்துவ கவுன்சிலை, கூடுதல் அதிகாரங்களோடு மருத்துவத் தேர்வாணையமாக மாற்றி நீட் திணிப்பை சட்டபூர்வமாக உறுதியாக்கிய போதும் ஒன்றிய ஆட்சியை வாய் திறந்து கண்டிக்கவில்லை எடப்பாடி!
கந்த சஷ்டி கவசம் என்ற முருக பக்திப் பாடலில் உள்ள வரிகளை அப்படியே எடுத்து ஒளிபரப்பிய கருப்பர் கூட்டம் என்ற youtube மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கிகள் எடப்பாடி ஆட்சியை மிரட்டினார்கள். பக்தி இலக்கியத்தில் உள்ள பாடல் வரிகளே இந்துக்கள் மனதை புண்படுத்துகிறது என்று கூப்பாடு போட்டார்கள். எடப்பாடி அந்த வலையொலியை (youtube) முடக்கினார். அதில் பதிவேற்றப்பட்ட அனைத்து பதிவுகளையும் சட்ட விரோதமாக காவல்துறை நீக்கியது. அதைத் தொடர்ந்து அந்த வலையொலியை (youtube) நடத்திய நாத்திகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறையில் இருந்தார்.
இந்தக் கைதை கண்டித்து அறிக்கை வெளியிட்ட மறைந்த இயக்குநர் வேலுபிரபாகரனையும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். பாஜகவையோ, கட்சிகளையோ எதிர்த்து பேசவோ, அறிக்கை விடவோ அச்சப்படுகிற சூழலை உருவாக்கினார் எடப்பாடி.
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் பாஜகவினர் சட்டங்களை தங்களது கையில் எடுத்துக்கொண்டு சுதந்திரமாக வெறியாட்டம் போட்டனர் .அவர்களுக்கு எந்த தடையும் இல்லை!
பாஜகவை எதிர்க்கும் கருத்தரங்குகள்; பொதுக்கூட்டங்கள்; நிகழ்ச்சிகள் எல்லாவற்றுக்கும் தடை போடப்பட்டன. ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று தான் கூட்டங்களை நடத்த வேண்டிய நிலையே இருந்தது.
அய்.நாவின் விவாத அரங்கு ஒன்றில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி உரையாற்ற சென்ற திருமுருகன்காந்தி நாடு திரும்பியபோது பெங்களூரு விமான நிலையத்தில் தேச விரோத சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மாடுகளை இறைச்சிக்கு விற்கக் கூடாது என்று ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று கேரளா; புதுவை; மேகாலயா சட்டமன்றங்கள் தீர்மானங்களை நிறைவேற்றின. பாஜக ஆட்சி செய்த கோவா மாநிலமும் இதை எதிர்த்தது. ஆனால் தமிழ்நாட்டில் சரணாகதி எடப்பாடி ஆட்சி இதை அமல்படுத்தவே துடித்தது. சட்டத்தை எதிர்க்க மாட்டோம் என்று பேட்டியளித்தார் எடப்பாடி. இந்த சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட மாட்டுக்கறி விருந்து நிகழ்ச்சிகளை தடை செய்தார்; பாஜக எதிர்த்தால் அவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்தார். உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி சங்கிகளின் எதிர்ப்பால் தடை செய்யப்பட்டது.
மாதம் ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் வரக்கூடிய அருங்காட்சியகத்தின் ‘கியுரேட்டர்’என்ற பதவிக்கு தமிழ்நாட்டில் விண்ணப்பம் செய்ய சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று எடப்பாடி ஆட்சியின் தேர்வாணையம் விளம்பரம் செய்தது.
இந்த பதவிகளை வேதம் படித்த கும்பலுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அதிகார வர்க்கம் செய்த இந்த சூழ்ச்சிக்கு எடப்பாடி உடந்தையாக இருந்தார்.
இந்து பயங்கரவாதிகளால் கர்நாடக பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து சென்னையில் கலை இலக்கியவாதிகள் அக்டோபர்-2ம் தேதி காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார்கள். இருவர் உயிரையும் கொன்ற துப்பாக்கி குண்டுகளின் தத்துவம் மதவெறிதான் என்ற நோக்கோடு மாலையிட வந்தவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்தது எடப்பாடி ஆட்சி.
தேசத் தந்தை பிறந்தநாளில் அவருக்கு மாலை அணிவிப்பதே எடப்பாடி ஆட்சியில் குற்றமா? எடப்பாடி நடத்தியது சங்கிகளின் ஆட்சி என்பதற்கு இது ஒரு வலிமையான சான்று!
ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 தமிழர் விடுதலைக்கு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு எடப்பாடி கடமையை முடித்துக் கொண்டார். ஒன்றிய அரசுக்கு எந்த அழுத்தமும் தரவில்லை. மு.க.ஸ்டாலின் முதல்வராக வந்த பிறகு தான் அவர்களுக்கான விடுதலையை சட்டப்போராட்டம் நடத்தி உறுதி செய்தார்!
இந்து மத செயல்பாடுகளுக்கு கல்வி வளாகங்களை சுதந்திரமாக திறந்து விட்டார் எடப்பாடி. இது சட்ட விரோதம். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது தடை விதித்திருந்தது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் பாஜகவின் செயலகமாக மாறியது துணைவேந்தர் அறை எச்.ராஜாவின் அலுவலகமானது.
நடத்திய `நிவேதிதா’ “(இவர் விவேகானந்தரின் சிஷ்யை) யாத்திரையை ஒவ்வொரு கல்வி வளாகத்துக்குள்ளும் அனுமதித்தார் எடப்பாடி; இதில் மாணவர்கள் பங்கேற்பை கட்டாயப்படுத்தி ஆணையிட்டார் துணைவேந்தர் குழந்தைவேலு!
ஜி.எஸ்.டி வருவாயில் உரிய பங்கு வழங்கப்படவில்லை என்றும் காஜ புயல் நிதி வரவில்லை என்றும் நிர்மலா சீதாராமனிடம் எடப்பாடி நேரில் வலியுறுத்தியும் நிதி நிலை அறிக்கையில் நிர்மலா புறக்கணித்தார். ஆனாலும் கண்டிக்க துணிவில்லை; நிதிநிலை அறிக்கையை பாராட்டி வரவேற்று அறிக்கை விட்டார் எடப்பாடி!
மாட்டு இறைச்சி உணவை வரவேற்று முகநூலில் பதிவிட்டதற்காக திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்ட தோழர் நிர்மல்குமார் மீது பிணையில் வெளிவர முடியாத சட்டப்பிரிவில் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
ஆண்டுதோறும் கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தோடு நடத்தப்படும் விநாயகன் ஊர்வலத்துக்கு நீதிமன்றம் விதித்த பல நிபந்தனைகளை நீக்கினார் எடப்பாடி; பல்வேறு துறைகளிடமிருந்து பெறவேண்டிய அனுமதிகளை காவல்துறையே பெற்றுத் தரும் என்று அறிவித்ததோடு; ஒவ்வொரு விநாயகரின் சிலைக்கும் காவலர்களை பாதுகாப்பாக நியமித்தார்.
அதிமுக ஆட்சியில் 1,100 அரசு பள்ளிகள் இழுத்து மூடப்பட்டன. நிதிநிலை அறிக்கையில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி மிக மோசமாக குறைக்கப்பட்டது.
“பிராமண” சங்கத்தின் கோரிக்கையை ஏற்று பாடத்திட்டத்திலிருந்து நீதிக்கட்சி வரலாறு நீக்கப்பட்டது. 9 மற்றும் 10வது வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பெரியார் பெயருக்கு பின்னால் நாயக்கர் என்ற ஜாதி சேர்க்கப்பட்டது;
ஹிட்லர் மற்றும் முசோலினி கொள்கை முற்போக்கானவை என்றும்; கோயில்களில் தேவதாசி முறை பெருமைக்குரியது என்றும் அவர்கள் “ஆலய சேவகிகள்” என்றும் எழுதினார்கள்; அரசுத் துறையில் ஊடுருவியிருந்த சங்கி அதிகாரிகளின் இந்த திணிப்புகளை எடப்பாடி கண்டு கொள்ளவே இல்லை!
கோட்சேவுக்கு சிலை வைக்கப் போவதாக சங்கிகள் வெளிப்படையாகவே பேசினார்கள். இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் இதைக் கண்டித்து நடந்த கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
குறிப்பாக ஈரோட்டில் காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு சிலை வைப்பதை கண்டித்து பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் “காந்தியை சுட்டுக்கொன்ற” என்ற வாசகத்தை நீக்கினால்தான் கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று எடப்பாடி ஆட்சி நிபந்தனை விதித்தது!
இதைத் தவிர பாஜக ஆட்சிய கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோத சட்டங்களுக்கும் ஆதரவு அளித்தார் எடப்பாடி. உதய் மின்திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், விவசாயிகளின் சட்டம், முத்தலாக் சட்டம் என மாநில உரிமைகளைப் பறித்த காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து சட்டம் மற்றும் டெல்லி யூனியன் பிரதேச அதிகாரங்கள் பறிப்பு சட்டமும் இதில் அடங்கும். ஆட்சியை பாஜகவிடம் அடிமையாக்கிக் காட்டியவர்தான் இப்போது மீண்டும் தமிழ்நாட்டை காட்டிக் கொடுக்க வாக்கு கேட்டு வருகிறார். இப்படி ஏராளமாக பட்டியலிட்டுக் காட்ட முடியும்.
விழித்துக் கொள்வோம்! விரட்டி அடிப்போம்!
தொகுப்பு: விடுதலை இராசேந்திரன்
பெரியார் முழக்கம் இதழ் 16042026
