திமுக தேர்தல் அறிக்கையின் சிறப்பு; அரசுத்துறை கெடுபிடிகள் எளிமையாக்கப்படும்
ஒற்றைச் சாளரத்தின் (Single Window) வழியே அனைத்து சேவைகளும் வழங்கப்படும். இருந்த இடத்தில் இருந்தபடியே இணையத்தில் ஒரு சாளரத்தைத் திறந்து, தங்களுக்குத் தேவையான சேவையைச் சுட்டிச் சொடுக்கினால், அதற்கான தகவல்களுடன் விண்ணப்பப் படிவமும் வழங்கப்படும். அதனை நிரப்பி பதிவேற்றம் செய்தால் விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டதற்கான சான்று அப்போதே அளிக்கப்பட்டு விரைவில் கோரிய சேவையும் நிறைவேற்றப்படும். கணினித் தொழில்நுட்பத்தின் மூலம் அரசு சேவை வழங்குவதை இத்தகைய நடைமுறை மூலம் எளிமையாக்க உறுதியளிக்கிறோம் இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்….
அரசு விதிமுறைகள் சான்றுகள் ஆகியவற்றில் எவை தற்காலத்தில் தேவையற்றவை என்று ஆய்வு செய்து அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு வழங்க வேண்டிய சேவைகளில் மக்கள் சந்திக்கும் குறைபாடுகளை கோரிக்கை மனுவின் நிலை ஆகியவற்றை ஒரு சாளரத்தின் (Single Window) வழியை எடுத்துக் கூறித் தேர்வு பெறும் நடைமுறை உருவாக்கப்படும்.
பொதுமக்களுக்கு அரசிடம் இருந்து தேவைப்படும் சேவைகளை எளிமையாகப் பெரும் வகையில் ஒரு பெரும் செயலி (Super App) உருவாக்கப்படும். அனைத்துச் சேவைகளும் உங்கள் விரல் நுனியில் என்ற கனவு இதன் மூலம் மெய்ப்படும்.
பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு அரசுத் துறைகளில் இருந்து தேவைப்படும் பல்வேறு சேவைகளை எளிமையாக்கிடும் வகையில் 1000 அரசு சேவைகளின் நடைமுறை மாற்றி அமைக்கப்படும். சான்றிதழ்கள் தடையில்லாச் சான்று உள்ளிட்ட அனைத்தும் இவற்றுள் அடங்கும்.
சான்றிதழ்களை இணையத்திலேயே (online certification) பெற்றுக் கொள்ளும் வகையில் அரசின் இணைய சேவை மேம்படுத்தப்படும்.
மக்களுக்கான அரசுத் திட்டங்களின் செயல்பாடுகளைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளத் தேவையான தகவல்கள் அனைத்தும் தொடர்புடைய அலுவலகங்களில் மின்னணு தகவல் பலகைகள் வாயிலாக அறியும் வசதி உருவாக்கப்படும்.
அரசுத் துறைகளில் ஒவ்வொரு முறையும் சான்றிதழ் கேட்டுப் பெறும் முறை தவிர்க்கப்படும். பெறப்படும் சான்றிதழ்கள் ஒரு தொகுப்பாக (digilocker) போன்ற அமைப்பின் உதவியுடன் சேமிக்கப்பட்டு பாதுகாக்கப்படும். உரியவரோ அல்லது அவரது அனுமதியுடன் தேவைப்படும் அரசுத் துறையோ அதனைப் பெறும் வசதி உருவாக்கப்படும். இதன் மூலம் நேரமும் மனித உழைப்பும் வீணடிக்கப்படுவது தவிர்க்கப்படும்.
அரசின் சேவைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் அதிகம் அணுகக் கூடிய அலுவலகங்களில் வெளிப்படைத் தன்மையும் சேவைகள் விரைவாக கிடைப்பதும் உறுதி செய்யப்படும். கிராம நிர்வாக அலுவலகம் முதல் தலைமைச் செயலகம் வரை உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் 100 விழுக்காடு மின்னணு அலுவலக நடைமுறை செயல்படுத்தப்படும்.
அரசுத்துறை மட்டுமே தரச் சான்றளிக்கும் முறை மாற்றி அமைக்கப்பட்டு நிபுணத்துவம் வாய்ந்த நபர்களைக் கொண்ட மூன்றாம் தரப்பு ஆய்வு செய்து சான்று அளிக்கும் முறை அரசுத் துறைகளில் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும்.
விதிமுறைகளை ஏற்று விண்ணப்பதாரர்கள் வழங்கும் சான்றிதழ்களை ( compliance certificate) அரசுத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து ஏற்கும் முறை எல்லா சூழ்நிலைகளிலும் தேவையற்றது. பொதுமக்களே தாங்கள் விதிமுறைகளை ஏற்று இணங்கி நடப்பதாக வழங்கிடும் சுய சான்றுகளை (self certification) ஏற்கும் முறை அறிமுகப்படுத்தப்படும். தேவைப்படும்போது மட்டுமே அரசுகள் ஆய்வு மேற்கொள்ளும் இவ்வகையில் நம்பிக்கை சார்ந்த ஆளுமை முறை மாநில நிர்வாகத்தில் வளர்த்தெடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறோம்.
பொதுமக்களுக்கு இன்றியமையா சேவைகளை வழங்கும் அரசுத் துறைகளான பத்திரப்பதிவுத்துறை போக்குவரத்துத் துறை போன்ற துறைகள் அனைத்தும் நவீன தொழில்நுட்பத்துடன் முற்றிலும் மாற்றியமைக்கப்படும். பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் சேவையைப் பெறுவது எளிமையாக காலவிரயம் இன்றி நடந்தேற இம்முயற்சிகள் உதவும்!
– திமுக 2026 தேர்தல் அறிக்கையிலிருந்து..
பெரியார் முழக்கம் இதழ் 02042026
