பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா?

தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற ஒரே குற்றச்சாட்டையே அஇஅதிமுக, தவெக கூறி வருகின்றனர். இதற்கு ஒரு ஆணித்தர மறுப்பு!

பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழ்நாடு மோசமான நிலையில் உள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி வருகிறார். தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2023 பதிவின்படி இந்தியாவில் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதலிடம் உத்தரப்பிரதேசம் 66381 சம்பவங்கள் நடந்துள்ளது. இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா -47101 சம்பவங்கள் நிகந்துள்ளது. மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான் -45450 வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளது. முதல் 10 இடங்களில் பாஜக ஆளும் மாநிலங்களில் தான் அதிகமாக பெண்களுக்கு கொடுமைகள் நடந்துள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.

குஜராத்தில் 2016-2021 வரை காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 41,627. 2021-ம் முதல் தற்போது தேசிய குற்றப்பதிவேட்டில் NCRB குஜராத் பதிவுகளே இல்லை. ஒரு நாட்டின் பிரதமரின் சொந்த மாநிலத்தில் தேசிய குற்ற ஆவணக் காப்பகப் பதிவுகளே இல்லை. இதற்கு பிரதமர் பதில் சொல்வாரா?..

ஆண்டுக்கு 10,000-க்கும் மேற்பட்ட பெண்களைக் காணவில்லை. உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2023-2024 ஆண்டில் மட்டும் காணாமல் போனவர்கள் 1,08,300 பேர். 2016-2021 ஆண்டில் டெல்லியில் 51,433 பேர் காணாமல் போனவர்கள். 2025 ஆண்டில் மட்டுமே 23,000 பெண்கள் காணாமல் போனதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதில் கொடுமையானது 4,000-மேற்பட்ட பெண்குழந்தைகள்.

பெண்கள் காணாமல் போவது பற்றி எந்த வித அக்கறையும் காட்டாமல் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் பாஜக ஆளும் மாநிலங்கள் பற்றி வாய் திறக்காமல் தமிழ்நாட்டில பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூப்பாடு போடும் எடப்பாடி, விஜய் ஆகியோர் தலைநகரில் டெல்லியில் நடக்கும் இந்த அவலங்களைப் பேச மறுப்பது ஏன்? கூட்டணி உடன்பாடா இல்லை அதற்கெல்லாம் திமுக காரணம் என்று சொல்ல முடியாது என்ற அற்ப அரசியலா?.

2024-ல் இந்தியாவில் போதைப் பொருள் புழக்கம் குறித்து மாநில வாரியாக புள்ளி விவரங்கள் பார்த்தோமேயானால் தமிழ்நாட்டில் அபின், மார்பின் போன்ற போதைப் பொருட்கள் இல்லை என்று தெரிவிக்கிறது. ஆனால் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், குஜராத், ஹரியானா போன்ற மாநிலங்களில் அபின் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. அதே போல் மகாராஷ்டிராவில் மார்பின் போதைப் பொருள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2024-ல் போதைப் பொருள் குறித்து பதிவான வழக்குகள் தமிழ்நாட்டில் 481 தான். ஆனால் கேரளாவில் 27701, மகாராஷ்டிராவில் 14553, உத்திரப் பிரதேசத்தில் 6204 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் தான் போதைப் பொருள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன. பொய்களைப் பரப்பும் அணில்களும் அடிமைகளும், அதன் ஏஜெண்டுகளும் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது.
பெரியார் முழக்கம் இதழ் 02042026

You may also like...