கொளத்தூர் மணியின் மிகச்சிறந்த ஆய்வுகளின் தொகுப்பு – பேரா.வீ.அரசு

எதிர்நீச்சல் போட்டு குடிஅரசு தொகுப்பை வெளியிட்டு பதிப்புத் துறையில் சாதனை புரிந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களுக்கு சீர் வாசகர் வட்டம் சிறந்த பதிப்பாளர் விருது வழங்கி ஒரு லட்சம் பணம் முடிப்பையும் வழங்கியது. விருது வழங்கி சிறப்புரையாற்றினார் பேராசிரியர், சென்னை பல்கலைக்கழக மேனாள் தமிழ் இலக்கியத்துறை தலைவர் வீ.அரசு. அவரது உரையில் இருந்து….
சீர்வாசகர் வட்டம் தோழர் மணி அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான இந்த விருதை வழங்குகிறது. தோழர் மணி என்ன செய்திருக்கிறார்? நாங்கள் எல்லாம் 19-ஆம் நூற்றாண்டில் உருவான மார்க்ஸ், எங்கல்ஸ் உலகத்துக்கு தந்த ஒரு மிகப்பெரிய தத்துவ மரபின் மீது ஈடுபாடு கொண்டு அதை வாசித்தவர்கள், அதோடு வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள். அது உலகம் முழுவதும் என்னென்ன வடிவத்தில் எப்படி எப்படி எல்லாம் மாற்றிக்கொண்டும் செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறது என்பது பற்றி மிகுந்த அக்கறை உடையவர்கள்.
லத்தின் அமெரிக்க நாடுகளிலே அது செயல்படுகிற முறையிலும், ஆப்பிரிக்க நாடுகளிலே அது செயல்படுகிற முறையிலும் ,இப்படி சீனாவிலேயும் ரஷ்யாவிலேயும் இப்படி பல வடிவங்களில் அந்த தத்துவ மரபுகளின் செயல்படுகிற முறைகளையும் நாம் அறிவோம்.
ஆனால் தமிழ்ச் சமூககத்திற்கு வருகிறபொழுது அந்த தத்துவ மரபை நாம் எப்படி புரிந்து கொள்ள வேண்டும். தோழர் மணி அவர்களுடைய அந்த அறிவு சிந்தனை மரபு சார்ந்த கருத்துகளில் ஓரிரண்டை மட்டும் நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அந்த தத்துவம் நம்முடைய மண்ணில் நம் ஊரில் எப்படி வளர்ந்தது? அது சார்ந்து நாம் என்ன செய்திருக்கிறோம், என்பது மிக முக்கியமானது.
அது பற்றி பெரியார் 1925-ல் இறுதியில் உருவாக்கிய சுயமரியாதை இயக்கம் தொடங்கி 1938 வரையான அந்த காலங்களில் பெரியார் என்ன பேசினார்? பெரியார் சோவியத்யூனியனுக்கு சென்று வந்த பிறகு என்ன பேசினார்? பெரியாரோடு சிங்காரவேலரும், ஜீவாவும், சாத்தான்குளம் ராகவனும் இப்படி பல பல கம்யூனிஸ்ட்கள் அவரோடு ஏன் சேர்ந்தார்கள்? அதன் விளைவாக ஈரோட்டில் உருவான ஒரு “சுயமரியாதை சமதர்ம கட்சி” என்ற ஒரு கட்சியை ஏன் உருவாக்கினார்கள். இவை அனைத்துக்கும் தொடர்பு உண்டு.
சுயமரியாதை சமதர்ம கட்சி மார்க்சிய சிந்தனைகளுக்கு தமிழ் மரபுக்கு ஏற்றவாறு கொள்கைத் திட்டங்களை வகுத்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு செயல்திட்டம் உள்ளதுபோல் பெரியார் சுயமரியாதை தத்துவ அடிப்படையில் உருவாக்கிய இந்த கட்சிக்கும் செயல்திட்டம் உண்டு. 1925-1938 என்ற அந்த காலங்களை புரிந்து கொள்வதற்கும் அதில் பெரியார் செயல்பாடுகளை புரிந்து கொள்வதற்கும் முக்கியமான காலமாக இருந்திருக்கிறது. இதை தோழர் மணி மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளார்.
தன்னை அம்பேத்கரிஸ்ட் என்பார்கள்; தன்னை பெரியாரிஸ்ட் என்பார்கள்; அம்பேத்கரிஸ்ட் மார்க்சிஸ்ட் என்பார்கள்; பெரியாரிஸ்ட் மார்க்சிஸ்ட் என்பார்கள், இதெல்லாம் ரொம்ப ஒரு வியப்பளிக்கக்கூடிய ஜோக்.
மார்க்சியத்தின் தமிழ் வடிவமாக சுயமரியாதை மரபுகளை தன்னுடைய புரிதல் சார்ந்து கட்டமைத்தவர் பெரியார், அதுதான் முக்கியம். அந்த கட்டமைத்த மரபு வழியாக அவர் பேசியது முக்கியம். அவர் பேசிய கருத்துக்களை இன்றைக்கு நாம் எப்படி உணர்கிறோம், புரிந்து கொள்கிறோம் என்பது முக்கியம்.
அதே போல்தான் அவர் சுயமரியாதை இயக்கம் பற்றி பேசுகிற பேச்சு கொளத்தூர் மணி தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒரு மிக முக்கியமான பேச்சு. 1929 செங்கல்பட்டு சுயமரியாதை மாநாடு பற்றிய ஒரு பேச்சு இருக்கிறது. நான் அந்த 1929 சுயமரியாதை மாநாடு பற்றி நிறைய வாசித்திருக்கிறேன். நண்பர்களே! அந்த மாநாட்டில் கொண்டுவந்த தீர்மானங்கள் மற்றும் செயல்திட்டங்கள் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை அறிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது தான். இன்னும் சொல்லப்போனால் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் வேறு ஒரு வடிவமாக தமிழ்ச் சமூகத்திற்கான வடிவமாக அதை சொல்லலாம்.
1937ல் நீதிக்கட்சியோடு பெரியார் இணைந்து செயல்பட வேண்டும் என்ற ஒரு சூழல் வருகிற பொழுது பெரியார் அவர்களுக்கு ஒரு கொள்கை ஆவணத்தை தருகிறார். ஒரு 14 வகையான திட்டங்களை அதில் விவரிக்கிறார். அவை அனைத்துமே கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம்தான். இந்தத் திட்டத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டால் நான் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்று சொன்னவர் பெரியார். தோழர் மணி இந்த அரிய கருத்தை பதிவுச் செய்துள்ளார்.
பெரியார் மார்க்சியத்தை எப்படிப் புரிந்து கொண்டார்; தன் வாழ்வில் மார்க்சியத்தை எப்படி கடைபிடித்தார்; பெரியாரை விட்டு மார்க்சியர்கள் எப்படி விலகினார்கள்; மார்க்சியத்தை தமிழ்ச் சூழலில் பெரியார் சிந்தனையிலிருந்து நாம் எப்படி கண்டறிவது என்பது பற்றியான கொளத்தூர் மணியின் இந்த ஆய்வு வேறு எந்த திராவிட இயக்கத்தைச் சார்ந்த ஆய்வாளர்களால் விரிவாக பேசப்பட்டிருக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை.
நம்முடைய தோழர் விடுதலை இராசேந்திரன் அவருடைய எழுத்துக்களில் அவற்றை சிலவற்றைக் காண முடியும். இப்படியான புரிதலை உருவாக்குவதன் மூலம் என்னைப் போன்ற பல இளைஞர்களுக்கு சரியான பார்வை கிடைக்கிறது. இளம் வயதிலிருந்தே நான் ஒரு பெரியாரிஸ்டாக வளர்ந்தவன் ஆனால் கல்லூரிப் படிப்பு வருகிற பொழுது என்னை மார்க்சியம் ஆட்கொள்கிறது. அப்பொழுது வருகிற முரண் பெரியார் மார்க்சிஸ்டோடு சேர முடியுமா? சேர முடியாதா? என்ற ஒரு கேள்வி. அதற்கு மிக அழகான பதிலை மணி அவர்களுடைய பேச்சு சொல்கிறது.
ஒவ்வொரு காலங்களிலும் மார்க்சியம் சமூக நிகழ்வுகளோடு இணைத்துக் கொண்டு மாற்றம் பெற்று அது சரியான செயல்பாடாக வளர வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை பெரியாருடைய அந்த சுயமரியாதை இயக்க மரபுச் சார்ந்த செயல்பாடுகளோடு புரிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை இந்த சமூகத்திற்கு வழங்கியதில் தோழர் மணி அவர்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு. இதற்காக நாம் அவருக்கு என்றும் நன்றி கடன்பட்டிருக்கிறோம்.
சுயமரியாதை இயக்கம் பற்றிய அவருடைய புரிதலும் மிக மிக முக்கியமானது. 1925லிருந்து 1938 வரை 28 தொகுதிகளாக மணி தொகுத்திருக்கிற அந்த குடிஅரசு இதழ்கள் மிக முக்கியமான ஆவணம். நான் சொல்லுகிற இந்தக் கால செயல்பாடுகள் மிக முக்கியமாக இருக்கிறது.
பெரியார் பற்றி இருக்கக்கூடிய ஒரு வகையான ஒவ்வாமையையும் கம்யூனிஸ்ட்கள் மத்தியிலே இருக்கக்கூடிய சிக்கல்களை உடைத்தெறிந்ததிலும் தோழர் மணி அவர்களுக்கு முக்கியமான பங்களிப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். இந்த 28 தொகுதிகளை நீங்கள் வாசித்தீர்கள் என்று சொன்னால் பெரியார் சோவியத்துக்கு சென்றது; பெரியார் இங்கிலாந்தில் பேசியது; பெரியார் சிங்காரவேலரோடு உரையாடியது; ஜீவா சிங்காரவேலரோடு சண்டை போட்டது; பேன்ற வரலாறுகளை அறிய முடியும். இந்தியாவில் 1934ல் கட்சிகள் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு தடை செய்யப்படுகிறது.
அந்த காலங்களில் பெரியாருடைய இயக்கத்திற்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் மிகப்பெரிய நெருக்கடி உருவானது. இந்த நெருக்கடியை பெரியார் எப்படி எதிர்கொண்டார்? இயக்கத்தை முன்னெடுப்பதற்கு எத்தகைய அணுகுமுறையை மேற்கொண்டார் என்பதை இந்த தொகுப்பு விளக்குகிறது.
எனவே நீண்ட நேரம் பேசுவதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில் தோழர் மணி என்ற ஒரு சமூக அறிவியலாளர்; சமூகப் போராளி; சமூகத்தைப் பற்றியான ஒரு தெளிவான புரிதலோடு தோழர் மணியின் வாழ்க்கைப் பயணம் அமைந்திருக்கிறது. உள்ளூர் களப் போராளியாக அவர் செயல்பட்டிருப்பது தான் மிகப் பெரிய சாதனை. எதிர்நீச்சலோடு தான் இந்த களப்பணியை செய்ய முடியும்.
ஒரு நேர்மையான அரசியல் புரிதல் உள்ள நபர்கள் தான் பொதுவாழ்வில் உள்ளூர் போராளியாக சாதிக்க முடியும். அந்த வகையில் மணி அந்த காலங்களில் நிறைய சாதித்திருக்கிறார்.
– தொடரும்….
பெரியார் முழக்கம் இதழ் 11092025

You may also like...