தூத்துக்குடியில் நாத்திகம் பி.இராமசாமி 6ஆம் ஆண்டு நினைவேந்தல்: சாதி எதிர்ப்புப் பரப்புரை
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் ‘நாத்திகம்’ இதழ் நிறுவனர் மறைந்த நாத்திகம் பி. இராமசாமி 6ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், ‘எங்கள் தலைமுறைக்கு சாதி வேண்டாம்; எங்கள் இளைய சந்ததிக்கு வேலை வேண்டும்’ என்ற கொள்கை விளக்கப் பொதுக் கூட்டமாக 24.9.2015 அன்று ஆழ்வை சீரணி அரங்கில் ஆழ்வை ஒன்றிய கழகம் சார்பில் நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்திற்கு ஆழ்வை ஒன்றிய கழகத் தலைவர் நாத்திகம் பா.முருகேசன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் ச.கா. பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர் வே.பால்ராசு, செ. செல்லத்துரை, கோ.அ. குமார், மாவட்டத் தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு மற்றும் ஆதித் தமிழர் பேரவை மாநில இளைஞரணி செயலாளர் அருந்ததி அரசு ஆகியோர் உரைக்குப் பின், கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் சிறப்புரை யாற்றினார். அவர் தமது உரையில் நாத்திகம் பி.இராமசாமியின் பணிகளை நினைவு கூர்ந்ததோடு, நாட்டில் நிலவும் கனிமவளக் கொள்ளை, சாதி ஆணவக் கொலைகள் இவற்றைக் கண்டித்தும், தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன் வேண்டும் என்பதையும் மத்திய அரசுப் பணியில் பிற்படுத்தப்பட்ட மக்களின் தேக்க நிலையினை சுட்டிக்காட்டி, சாதியின் பெயரால் சண்டையிட்டது போதும், நமது உரிமைகளுக்காக நமது இளைய சந்ததிகளுக்கு வேலை பெறுவதற்கு போராட வாருங்கள் என அழைப்பு விடுத்து சிறப்புரையாற்றினார். இறுதியில் ஆழ்வை ஒன்றிய செயலாளர் இரா. உதயக்குமார் நன்றி கூறினார்.
நிகழ்வை, தூத்துக்குடி மாவட்டச் செய லாளர் ச. ரவிசங்கர், மாவட்ட அமைப் பாளர் பால்.அறிவழகன், மாவட்டப் பொருளாளர் சு.வீரபெருமாள், நெல்லை காசி ஆகியோர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். தூத்துக்குடி மாவட்டத் திலுள்ள கழகத் தோழர்கள் மற்றும் ஆதித் தமிழர் பேரவை தோழர்கள் திரளாகக கலந்து கொண்டனர். கடைசி வரை கூட்டம் கலைந்து செல்லாமல் இறுதி வரை உரையினைக் கேட்டனர். இரவு தோழர்களுக்கு உணவினை நாத்திகம் பா. முருகேசனார் ஏற்பாடு செய்திருந்தார்.
பெரியார் முழக்கம் 22102015 இதழ்