எதிர்ப்புகளை புறந்தள்ளி மயிலாடுதுறையில் கழகம் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!
மயிலாடுதுறை மாவட்டக் கழகம் சார்பில் “ஜாதி நமக்கு அவமானம்! மனிதம் நமது அடையாளம்! மடியட்டும் ஆணவப் படுகொலைகள்” என்ற தலைப்பில் பரப்புரைப் பயணமாக இரண்டு நாட்கள் நடைபெற்றது. 6 பரப்புரைக் கூட்டங்களை தோழர்கள் நடத்தியுள்ளனர்.
முதல் நாள்: செப்-2 அன்று மாலை 4.00 மணிக்கு சீர்காழியில் மாவட்டச் செயலாளர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. தபெதிக மண்டலச் செயலாளர் பெரியார் செல்வம் கலந்து கொண்டு பயணத்தின் நோக்கங்கள் வெற்றி பெற ஆதரித்து பேசினார். மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சியை துரை.தாமோதரன் செய்து காட்டி மக்களிடையே பரப்புரை பயணத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினார்.
தலைமைக் குழு உறுப்பினர் இளையராஜா, மாவட்ட அமைப்பாளர் செந்தில், மாவட்டப் பொருளாளர் விஜயராகவன், தில்லை நாதன், சிதம்பரம் மதன்குமார், பாடாலூர் சுதாகர், மெளனி, வழக்குரைஞர் நன்மாறன், தபெதிக மாவட்டத் தலைவர் பரசுராமன், தமிழர் உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப்பு.மகேசு, தமிழ்மண் தன்னுரிமை இயக்கத்தின் நெறியாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாலை 6.00 மணிக்கு குத்தாலம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. மதிமுக மாநில இளைஞரணிச் செயலாளர் ஆசைத்தம்பி பயணத்தை ஆதரித்து பேசினார். மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சியை தோழர் துரை.தாமோதரன் மக்கள் ஆதரவுடன், சிந்திக்கும் வகையில் நடத்தினார். பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் ஜாதி உருவான விதம், அதை நாம் ஏன் கைவிட வேண்டும் என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகவும், நகைச்சுவையாக உரையாற்றினார்.
இரண்டாம் நாள்: 3.9.25 மதியம் 3.00 மணிக்கு மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் துரை தாமோதரன் அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நடத்தினார். பேராசிரியர் ஜெயராமன் பயணத்தின் நோக்கங்களை விளக்கி விரிவாக பேசினார். பரப்புரையை பாராட்டி விசிகவின் சட்ட மன்ற தொகுதிச் செயலாளர் பொன்னுத்துரை பேசினார். நிகழ்ச்சியில் திமுக நகர துணைச் செயலாளர் தெய்வநாயகம், தமிழர் உரிமை இயக்கம் சுப்பு மகேசு உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
மாலை 4.30 மணிக்கு செம்பனார் கோவில் கடைவீதியில் மந்திரமா?தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சியை தோழர் தாமோதரன் செய்து காட்டிய பிறகு பேராசிரியர் ஜெயராமன் உரையாற்றினார். விசிக பொறுப்பாளர் இராஜசேகர் கலந்து கொண்டார்.
இரவு 7.00 மணியளவில் சங்கரன்பந்தல் கடைவீதியில் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை தாமோதரன் திரளாக கலந்து கொண்ட மக்களிடம் செய்து காட்டிய பிறகு பேராசிரியர் ஜெயராமன் பேச ஆரம்பித்த போது, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நபர் கூட்டத்தில் புகுந்து தேவையற்ற கேள்விகளை எழுப்பினார், அதற்கும் பதில் சொன்ன பேராசிரியர் ஜெயராமன் அவர்களை பேசவிடாமல், கூட்டத்தை கலைக்கும் நோக்கத்துடன் பாஜகவை சேர்ந்த அழகிரி என்ற நபருடன் சேர்ந்து கொண்டு நாம் தமிழர் கட்சி நபர் சத்தம் எழுப்ப பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறை ஆய்வாளர், அனுமதி பெற்று கூட்டம் நடத்துகின்றனர், நீங்க வேண்டுமானால் அனுமதி பெற்று அவர்கள் சொன்னது தவறானது என்று மக்களிடம் பேசுங்கள் என்று கூறினார்.
ஆனால் அங்கு திரண்டிருந்த மக்கள் நீங்க பேசுங்கள் அவர்கள் யார் கேள்வி கேட்க என்று அவர்களை புறக்கணித்தனர். பேசி முடித்த உடன் அப்பகுதி மக்கள் பேராசிரியர் ஜெயராமன் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். தமிழ்மண் தன்னுரிமை இயக்கத்தின் நெறியாளர் பேராசிரியர் ஜெயராமன் பரப்புரையின் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்று பேசியது குறிப்பிடதக்கது. சங்கிகளின் எதிர்ப்புடன் சிறப்பாக பரப்புரை நிகழ்ந்தது.
இரவு 8.30 மணிக்கு கொல்லுமாங்குடி கடைவீதியில் தலைமைக் குழு உறுப்பினர் இளையராஜா தந்தை பெரியார் நடத்திய ஜாதி ஒழிப்பு போராட்டம் குறித்தும், பயணத்தின் நோக்கங்கள் குறித்தும் பேசினார். பேராசிரியர் ஜெயராமன் விரிவாக பயண நோக்கங்கள் குறித்து பேசினார். கூட்டம் முடியும் வரை பேச்சை கேட்ட தொழிலாளி ஒருவர் நன்கொடையும் கொடுத்து தனது அன்பையும் , ஆதரவையும் தெரிவித்து சென்றார். முதல் கட்டமாக இப்பரப்புரை பயணம் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று முடிந்தது.
– செய்தி- மகேஷ்
பெரியார் முழக்கம் இதழ் 25092025
