சனாதனமும் கோயில் நுழைவும்!

பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில் நிர்வாகக் குழு தனது கட்டுப்பாட்டில் உள்ள 45 கோயில்களில் “இந்துக்கள் அல்லாத பிற மதத்தினரை அனுமதிப்பதில்லை” என்று முடிவு எடுத்துள்ளது.

பாலிவுட் நடிகையான சாரா அலிகான் இந்தக் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி கேட்டார்; அதற்கு பதில் அளித்துள்ள கோயில் தலைமை நிர்வாகி ஹேமந்த் திரிவேதி “தனக்கு சனாதன தர்மத்தில் நம்பிக்கை உண்டு” என்று விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு தந்தால் அனுமதிக்கப்படுவார் என்று கூறியுள்ளார்.

இந்து அல்லாதோர் கோயில்களுக்குள் தரிசனம் செய்ய விரும்பினால் சனாதன தர்மத்தில் நம்பிக்கை இருக்கிறது என்று உறுதிமொழி விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு தர வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இந்துக் கடவுள் மீது நம்பிக்கை உண்டு என்று கூறவேண்டிய தேவையில்லை. மாறாக சனாதான தர்மத்தின் மீது அதாவது வர்ணாசிரம தர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளது என்று கூற வேண்டுமாம்.

சனாதனம் என்றால் என்ன?

வடக்கில் இமயமலை முதல் தெற்கில் விந்திய மலைத்தொடர் வரையிலும்; கிழக்கில் வங்காள விரிகுடா முதல் மேற்கில் அரபிக்கடல் வரையிலான பகுதிகளை ‘ஆரியவர்த்தம்’ என மனுதர்ம சாஸ்திரம் முதல் ஸ்ரீமத் பாகவதம் போன்ற சனாதன நூல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த ஆரியவர்த்தம் எனும் பண்டைய நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களின் மதம், ஒழுங்கு, நீதி மற்றும் தத்துவ மரபைக் குறிக்கும் சொல்லாக சனாதன தர்மம் விளங்குகிறது. சனாதன தர்மத்திற்கு ஆரிய மதம், வைதீக மதம், வேத மதம், பிராம்மணீய மதம் எனும் பெயர்களும் உண்டு. சனாதன தர்மத்திற்கு பிரமாண நூல்களாக நான்கு வேதங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட உபநிடதங்கள், இரு இதிகாசங்கள், 18 புராணங்கள், 18 உப புராணங்கள், 18 தர்ம சாஸ்திர நூல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட ஆகம நூல்கள் மற்றும் பல சாஸ்திர நூல்களும் விளங்குகின்றன. இந்த நூல்களில் கூறப்படும் வாழ்வியல் முறைகளைக் கடைப்பிடிப்பவர்களே சனாதனிகள் என அறியப்படுகின்றனர்.

சனாதன தர்மத்தின் அடிப்படை என்பது தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் எனும் ‘புருஷார்த்தம்’ ஆகும். புருஷன் எனும் ஆண் பற்றிய விசயம் என்பதால்தான் பெயரே ‘புருஷார்த்தம்’ என சனாதனிகள் குறிப்பிடுகின்றனர். இதில் பெண்களுக்கு எனத் தனியே ஒரு காரியமும் (சம்ஸ்காரம்), உரிமையும் இல்லை. ஆண் துணையில்லாமல் பெண்ணிற்கு தனியே மோட்சம் இல்லை என்பதுதான் சனாதனத்தின் முடிவு!

இந்த உடலானது அழியக்கூடியது, அதனுள் இருக்கும் ஆத்மா அழிவற்றது. அது உடலைப் பிரிந்து மறுபிறவிகள் எடுப்பதென்பது, செய்யும் கர்ம வினைகளைப் பொறுத்தது. இந்த ஆத்மாவின் பயணம் தர்மம், அர்த்தம், காமம் இவற்றைத் தாண்டி மறுபிறப்பு எனும் சுழற்சியில் உழன்று மோட்சம் அடையும் வரை தொடரும் என்பதே இதன் உள்ளார்ந்த அர்த்தம் .
சனாதன நூல்களான வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள். தர்ம சாஸ்திரங்கள், உபநிடதங்களின்படி ‘ஆரியவர்த்தம்’ எனக் கூறப்படும் நிலப்பரப்பே உலகில் புண்ணிய பூமி ஆகும்.
இந்த நிலப்பரப்பிற்கு வெளியே பிறக்கிறவர்கள், வாழ்கிறவர்கள் அனைவரும் புற மதத்தினர் அல்லது மிலேச்சர்கள் என சனாதன நூல்கள் சித்தரிக்கின்றன. புண்ணிய பூமியான ஆரிய வர்த்தத்தில் பிறக்கிறவர்களை நான்கு முக்கிய பிரிவுகளாக சனாதன நூல்கள் பாகுபடுத்துகின்றன. அவையே பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் எனும் நான்கு வர்ணங்கள். பெண்களுக்கு வர்ணம் ஏதும் இல்லை. அவர்கள் எந்த எந்த வர்ணத்து ஆண் குடும்பத்தில் பிறக்கிறார்களோ அந்த வர்ணத்தைச் சார்ந்த பெண்களாக இன்றளவும் அறியப்படுகின்றனர்.
நான்கு வர்ணங்களைத் தாண்டி வர்ணத்தைச் சாராதவர்கள் எனும் ‘அவர்ணர்கள்’எனும் பிரிவினரையும் சனாதன நூல்கள் குறிப்பிடுகின்றன. இவர்களை வர்ணமற்றவர்கள் என்றும் பஞ்சமர்கள், சண்டாளர்கள், அந்த்யஜர்கள் (பாப ஜென்மங்கள்), புலையர்கள், நிகிருஷ்டர்கள், விராத்தியர்கள் எனும் தீண்டத்தகாதவர்கள் என சனாதன நூல்கள் குறிப்பிடுகின்றன.
– பெரியார் முழக்கம் இதழ் 26032026

You may also like...