தலையங்கம்: உடல் உழைப்பு இழிவானதா?

40 சதவித மக்கள் இந்தியாவில் வேலை வாய்ப்பற்றவர்களாக இருக்கிறார்கள் என்று அசிம்பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 40 ஆண்டுகளாக வேலையில்லாத பிரச்சனை நீடித்து வருகிறது.

வேலையில்லாத் திண்டாட்டத்துக்கான அடிப்படை காரணங்களாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ள கருத்து மிகவும் முக்கியமானது. மூளையை பயன்படுத்தி செய்யும் வேலை மரியாதைக்குரியதாகவும், உடல் உழைப்பு வேலை இழிவாகவும் கருதும் மனநிலைதான் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கான அடிப்படையான காரணம் என்று சுட்டிக் காட்டுகிறது இந்த ஆய்வு. ஜாதிக் கட்டமைப்பும் வர்க்க வேறுபாடுகளும் இதற்கு அடிப்படையான காரணம் என்றும் கூறுகிறது.

நடுத்தர வர்கத்தினரும் அதை நோக்கி செல்லத் துடிப்பவரும் மூளை வேலைகளை உயர்வாகவும் உடல் உழைப்பு வேலைகளை இழிவாகவும் கருதுவதாக அந்த ஆய்வு மேலும் கூறுகிறது. இதற்கு ஜாதி வர்க்கப் பார்வையில் இருந்து சமூகத்தை விடுவிக்க வேண்டும். அப்போதுதான் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க முடியும் என்று ஆய்வு சுட்டி காட்டியிருப்பது மிகச் சரியான கருத்தாகும்.

பார்ப்பனியம் உருவாக்கிய ஜாதிக் கட்டமைப்பு வேலைகளை ஜாதியோடு இணைத்தது. ஒவ்வொரு ஜாதிக்கும் குலத் தொழிலை நிர்ணயித்தது. “சூத்திர பஞ்சமர்கள்” உடல் உழைப்பு சந்தையில் தள்ளப்பட்டனர். அவர்கள் செய்த தொழில்களையும் இழிவு செய்தார்கள். வேதக் கல்வியையும் அதை மனப்பாடமாக மூளையில் ஏற்றிக் கொள்வதையும் பார்ப்பனர்கள் தங்களுக்கான பிறப்புரிமையாக்கிக் கொண்டார்கள். வேத பார்ப்பனிய சிந்தனைகள் சமூகமயமாக்கப்பட்டன. பல நூறு ஆண்டுகளைக் கடந்தாலும் சமூக மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அதன் அடித்தளம் இப்போதும் உறுதியாகவே இருக்கிறது.

இதற்கு ஒரு சான்று கூற முடியும். சமூகத்தின் உயிர் வாழ்க்கைக்கு அடிப்படை தேவைகள் மூன்று . “உணவு-உடை-வீடு” இந்த மூன்று துறை உற்பத்தியில் பார்ப்பனர்கள் பங்களிப்பு என்ன?

உணவுக்கான விவசாயஉற்பத்தியில் எங்கேயாவது ஒரு “பிராமணனை” காட்ட முடியுமா?

கண்டதுண்டா? கண்டதுண்டா? ஏர்பிடித்த “பிராமணனை”க் கண்டதுண்டா? என்ற பெரியார் இயக்கத் தோழர்களின் கேள்விக்கு இதுவரை பதில் இல்லை!

வீடு கட்டும் கட்டுமான தொழிலில் ‘பிராமணர்கள்’ பங்களிப்பு உண்டா?’
இதைத்தான் பெரியார் தொண்டர்கள் “சித்தாளும்,கொத்தாளும் நம்மாளு;சீனியர் ஆபிஸர் அவாளு” என்று மக்கள் மொழியில் கேள்வி கேட்டனர்.

அதேபோல் ஆடை தயாரிக்கும் நெசவுத் தொழில்களில் `பிராமணர்களை’க் கண்டுபிடிக்க முடியாது. இவற்றில் ஆராய்ச்சியாளராக பார்ப்பனர்கள் இருப்பார்கள் ஆனால் உற்பத்திக்கு வர மாட்டார்கள்.

அதே நேரத்தில் கடவுளை நெருங்கக்கூடிய அர்ச்சகர் தொழிலை பார்ப்பனர்கள் தங்களுக்கு மட்டுமே உடைமையாக்கிக் கொண்டார்கள்.கோயிலுக்கு வரும் பிரதமரும் குடியரசுத் தலைவரும் இவர்களுக்கு தலை வணங்க வேண்டும்.

இப்போதும் தூய்மைப்பணியில், மூட்டை சுமக்கும் வேலையில் ஒரு ‘பிராமணனையும்’ பார்க்க முடியவில்லை.

உழைக்கும் பாட்டாளி வர்கத்துக்காக போராடுவதாகக் கூறும் பொதுவுடைமைக் கட்சிகள் இந்த சமூக வரலாற்றைக் கவனத்தில் கொள்ளவில்லை . உலக நாடுகளின் தொழிலாளர்கள் பாட்டாளிகளைப் போல இந்தியாவையும் பார்த்தார்கள். அதற்கு அடித்தளமாக இருக்கும் ஜாதிக் கட்டமைப்பை பார்க்க மறுத்தார்கள். உண்மையிலேயே இந்த பிரச்சினையைக் கவனத்தில் கொண்டு இருப்பார்களானால் முதலாளி சுரண்டலோடு பார்ப்பன சுரண்டல் எதிர்ப்பையும் தங்கள் கொள்கையாக இணைத்திருப்பார்கள். மாறாக பார்ப்பன எதிர்ப்பை “வகுப்பு வாதம்” என்று புறந்தள்ளினார்கள்;

1954-ல் தொடக்கப் பள்ளி மாணவர்களை ஜாதித் தொழிலுக்கு தள்ளினார் அன்றைய முதல்வர் ராஜகோபாலாச்சாரி என்ற பார்ப்பனர்; “பெட்ரோலும் தீப்பந்தமும் தயாராகட்டும்” என்று பெரியார் ஆவேசத்துடன் களம் இறங்கியதால் தடுத்து நிறுத்தப்பட்டது. இப்போது நிலை மாறிவிட்டதா? அதே திட்டத்தை ஒன்றிய பாஜக ஆட்சி ’விஸ்வகர்ம’ திட்டமாக இப்போது அறிவித்தது; தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி தான் இதை அமல்படுத்த மறுத்தது. இதற்கு மாற்றாக ஜாதி அடையாளங்களை தகர்த்து கலைஞர் கைவினைத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

உடல் உழைப்புத் தொழில் மீதான கீழ்மையான பார்வையை மாற்றி அமைக்க தொழில்திறன் பயிற்சிகளை பெரும் அளவில் உருவாக்கி உடல் உழைப்பு மீதான மதிப்பீடுகளை உருவாக்க வேண்டும் என்கிறது பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வறிக்கை. தமிழ்நாடு முதல்வரின் “ நான் முதல்வன் திட்டம்” இந்த நோக்கில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதோடு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. மூளை வேலை என்றாலும் உடல் உழைப்பு வேலை என்றாலும் சமநிலை ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஒரு காலகட்டம் வரை உடல் உழைப்பு வேலைக்கு கூடுதல் ஊதியம் வழங்கப்பட வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கும் கல்லூரி போராசிரியர்களுக்கு ஒரே ஊதியம் வழங்கப்படுவது குறித்து ஆட்சியாளர்கள் பரிசீலிக்க வேண்டியது அவசியம். ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் டாக்டர்களை விட வாகன ஓட்டுநர்களுக்குக் கூடுதல் ஊதியம் வழங்கப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறோம்!
– பெரியார் முழக்கம் இதழ் 26032026

You may also like...