சக்லத்வாலா எழுதிக் கொடுத்ததைத் தான் பெரியார் படித்தாரா? ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் (14) -கொளத்தூர் மணி

1931 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி விருதுநகர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிந்து இரவு சாப்பாட்டிற்குப் பிறகு விஷய ஆலோசனைக் கூட்டம் மாநாட்டு பந்தலில் திருவாளர் பாண்டியன் அவர்கள் தலைமையில் இரவு 10:30 மணிக்குத் துவங்கப்பட்டு இரவு 3:30 வரை நடந்தது. விஷய ஆலோசனைக் கமிட்டி ஆரம்பம் ஆனதும், சோழவந்தான் திரு. வெங்கடசாமி அய்யர் அவர்கள் விஷய ஆலோசனைக் கமிட்டிக்குப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னார். இதற்குத் தலைவர் அவர்கள் அகாலம் ஆகிவிட்டதால் இனி தேர்தல் நடத்துவது சிரமம் என்றும், இருந்தபோதிலும் கூட்டத்தின் அபிப்ராயத்தைத் தெரிய ஆசைப்பட்டு சபையின் அபிப்பிராயம் கேட்டார். பெரும்பான்மையானவர்கள் பொதுக் கூட்ட முழுமையுமே விஷய ஆலோசனைக் கமிட்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். பிறகு அந்தப்படியே தீர்மானிக்கப்பட்டது.
முதன்முதலாக மதங்கள் கண்டனத் தீர்மானம் விவாதிக்கப்பட்டது. அதில் சிறிது காரமான விவாதம் நடந்தது என்றாலும் முடிவில் ஒரே ஒரு ஓட்டு தான் விரோதமாய் இருந்தது. பிறகு கதர் தத்துவக் கண்டன தீர்மானத்திலும் சிறிது விவாதங்கள் நடந்தது. எனினும் அதற்கு மூன்று ஓட்டுகள் மாத்திரம் விரோதமாகவும் மற்ற தீர்மானங்கள் எல்லாம் ஏகமனதாகவுமே நிறைவேற்றப்பட்டது.
மறுநாள் காலையில் 9.8.1931 பத்தரை மணிக்கு மாநாடு கூடியதும் தீர்மானங்கள் எல்லாம் மாநாட்டில் ஏக மனதாகவே நிறைவேறின. கதர்கண்டனத்துக்கு மாத்திரம் ஒரே ஒருவர் எதிரிடையாய்க் கை தூக்கினர் என்றாலும் யாரும் எதிர்த்துப் பேசவே இல்லை. கதர் தீர்மானம் ஓட்டுக்கு விடும் முன் ஒரு நண்பர் அதாவது நாச்சியார்புரம் திரு. ப. ஜீவானந்தம் அவர்கள் எழுந்து கதர் கட்டலாமா அல்லது வேண்டாமா என்று ஒரு கேள்வி கேட்டார்.
அதற்கு திரு. எஸ். ராமநாதன் அவர்கள், “திரு.காந்தியார் அன்னியர் துணியைக் கொளுத்துவது கிழித்தெறிவது என்பது போன்ற அளவு பலாத்கார உணர்ச்சியும் துவேஷ உணர்ச்சியும் நமக்கு இல்லை என்றும், கதர்த் துணி இடத்தில் நமக்கு எவ்வித விரோதமும் இல்லை என்றும், கதர் சுயராஜ்யத்தைக் கொடுக்கும் என்பதிலும் கதர் ஒரு தேசிய முற்போக்குக்கு ஆனது என்பதிலும் அது ஒரு தேசியத் தொழில் என்பதிலும் கதர் பொருளாதார திட்டம் என்பதிலும் தமக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை என்றும், கதர்த் தத்துவ உணர்ச்சி மக்களின் சமதர்மக் கொள்கைக்கும் கூட்டுறவுக்கும் தொழில் முற்போக்குக்கும் விரோதம் என்றுமே தாம் கருதுவதாகவும், இதற்காக இப்பொழுது கட்டி இருக்கும் கதரைக் கொளுத்தவோ, வாங்கியிருக்கும் கதரைக் கிழித்தெறியவோ வேண்டியதில்லை என்றும், கதர் வாங்குவதால் தாங்கள் பொருளாதார நஷ்டத்தால் பாதிக்கப்படுவதில்லை என்று கருதுகின்றவர்கள் வாங்கி உபயோகிப்பதற்கு தீர்மானம் விரோதம் இல்லை” என்றும் சொன்னார்.
ஜீவாவின் வாழ்க்கை வரலாற்றாளர்கள் சொல்வதைப் போல விஷய ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானங்களை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார் என்பதற்கும், கடுமையான நீண்ட விவாதம் நடந்தது என்பதற்கும் எந்த சான்றும் இல்லை; அடுத்த நாள் வாக்கெடுப்புக்கு சற்று முன்னர் கதர் கட்டலாமா வேண்டாமா என்று மட்டும் கேள்வி எழுப்பி விடை பெற்றுள்ளார் என்னும் நிலையில், ஏன் ஜீவா வரலாற்றாளர்கள் இப்படி எழுதி உள்ளனர், நிச்சயமாக ஜீவாவின் வாய்வழி சொற்களில் நம்பிக்கை கொண்டு அவர் புனைந்து உரைத்த வீரச்செயல்களை நம்பிக் கொண்டு தான் இப்படியாக எழுதியிருக்க முடியும்!
மேலும் ஜீவா விருதுநகர் மாநாட்டை பற்றி, அவரது ‘ஈரோட்டுப்பாதை சரியா’ நூலில், “இந்த மகாநாட்டின் முக்கிய அம்சம், எல்லா மதங்களும் ஒழிய வேண்டுமென்ற தீர்மானம். இங்கும் கண்டனக் கோடாலி காந்திஜியின் மீதும், கராச்சித் திட்டத்தில் மத நடுநிலைமைத் தீர்மானம் கண்ட காங்கிரஸ் மீதுமே வீசப்பட்டது. மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இந்தி எதிர்ப்பு, கதர் எதிர்ப்புத் தீர்மானங்கள், பகுத்தறிவு இயக்கத்தின் பலன்கள் என்று கூறப்பட்டபோதிலும் காங்கிரஸ் எதிர்ப்பு நோக்கம் கொண்ட அரசியல் தீர்மானங்களே” என்கிறார்.
கராச்சி காங்கிரஸ் மாநாடு
1931 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கராச்சியில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு கூடியது. அந்த மாநாட்டுக்கு முன்னதாகவே “கராச்சிக்கு போகின்றவர்களே! இந்தியாவுக்கு எது வேண்டும்? என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில் மூன்று கோரிக்கைகளைப் பெரியார் முன்வைக்கிறார். ஒன்று மக்களுக்குள் பிறவியில் உயர்வு தாழ்வு உணர்ச்சி மறைதல், இரண்டு ஆண் பெண் வித்தியாச உணர்ச்சி ஒழிதல், மூன்று ஏழை பணக்காரன் என்ற தன்மை உணர்ச்சி அழித்தல் ஆகியவை மூன்றுமே முக்கியமாகும் என்று குறிப்பிடுவதோடு, “சமதர்மம் என்பது சுயராஜ்யம் வந்தபின் தானாகவே வந்துவிடும் அல்லது பிறகு உற்பத்தி செய்து கொள்ளலாம் என்று சொல்லி வருவதன் மூலமே தெரியலாம். சுயராஜ்யம் பெற்றாலே சமதர்மம் ஏற்பட்டுவிடும் என்று சொல்லுவது அறியாமை அல்லது உண்மையை மறைத்து சொல்லுவது என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஏனெனில் சுயராஜ்யம் பெற்ற தேசங்களில் எல்லாம் பூரண சுயேச்சை பெற்ற தனி அரசு நாடுகளில் கூட சமதர்மம் இல்லாமலும், சமதர்மத்திற்குப் பாடுபடுவதால் அதன் எதிரிகள் சுயராஜ்யம் இல்லாவிட்டால் கூட பாதகம் இல்லை; சமதர்மம் மாத்திரம் கூடாது என்று கிளர்ச்சி செய்வதும் நாம் அறியாததல்ல. ஆகவே சுயராஜ்யத்திற்கும் சமதர்மத்திற்கும் சம்பந்தமில்லை என்பதை சமதர்மத்தில் லட்சியம் உள்ளவர்கள் நன்றாய் உணர வேண்டுமாய் வலியுறுத்துகிறோம். அன்றியும் சுயராஜ்யத்தின் திட்டமே வேறு என்பதையும், அதனால் பயன் அடைபவர்கள் வேறு என்பதையும் நன்றாக யோசித்து உணர வேண்டும். சுயராஜ்யம் கிடைத்தால் சம தர்மம் கிடைத்துவிடும் என்று நம்புகிறவர்களும் சமதர்மம் இல்லாமல் சுயராஜ்யம் கிடைத்தால் மக்கள் நடைமுறையாக நலமடைவார்கள் என்று எண்ணுகிறவர்களும் கண்டிப்பாய் ஏமாந்து போவார்கள் என்பதை உறுதியாய் சொல்லுகின்றோம்” என்று அந்த தலையங்கத்தில் குறிப்பிடுகிறார் பெரியார்
கராச்சி மாநாடு முடிந்த பின்னால் ஏப்ரல்-5ல் வெளிவந்த குடிஅரசு இதழில் ‘கராச்சி’ என்ற தலைப்பில் மிக நீண்டதொரு தலையங்கம் எழுதியிருக்கிறார். அம்மாநாட்டு நடப்புகளில் பெரியார் மட்டும் கருத்து மாறுபாடு கொண்டார் என்பதற்கு மேலாக வேறு யாரெல்லாம் கராச்சி மாநாடு பற்றி எதிர் கருத்து சொல்லி இருக்கிறார்கள் என்பதற்கு இரண்டு பேருடைய உரையை அந்த தலையங்கத்தில் எடுத்துக்காட்டுகிறார். முதலாவது உரை கராச்சி காங்கிரஸின் வரவேற்க கமிட்டி தலைவர் சுவாமி கோவிந்தானந்தர் கூறியதின் சாரம்:- “பாமர மக்களுக்கு அனுகூலமான ஆட்சியை ஸ்தாபிக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம். ருசியாவின் சமதர்மக் கொள்கையை இந்தியாவுக்கு ஏற்ற விதத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதே எனது அவா. சமதர்மத்தோடு கூடின பூரண சுயேச்சையே இந்தியாவின் முடிவான லட்சியம். இந்தியாவின் ஜீவநாடி காந்தி – இர்வின் ஒப்பந்தத்தை ஆதரிக்கவில்லை. பகத்சிங்கும் மற்ற தேச பக்தர்களும் செய்த தியாகத்தை அனுகூலமாய் கொண்டு கையில் வலுத்தவர்களும் ராஜீயவாதி(அரசியல்வாதி)களும் இப்போது பயனடைந்து வருகிறார்கள்”
அடுத்தது மாநாட்டுத் தலைவர் சுபாஷ் போஸ் பேசியதின் சாரமாவது:- “காங்கிரஸ் கொள்கைகள் பயனற்றதாகவும் பலவீனம் உள்ளதாகவும் இருக்கின்றது. காங்கிரஸ் தலைவர்களோ முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகின்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களது நடத்தைகளோ வாயில் பேசுவது ஒன்றாகவும், காரியத்தில் செய்வது வேறு ஒன்றாகவும் இருக்கின்றன. அவர்களது வேலை திட்டங்களோ எவ்வித புதிய மாறுதல் கொள்கைகளும் அற்றவைகளாகும். அவர்கள் உள் எண்ணங்களோ எப்படியாவது மக்களிடத்தில் விஷயங்களை சரிக்கட்டி காட்டிக் கொண்டு போனால் போதும் என்பதே ஆகும். அவர்களது லட்சியங்களோ ஜமீன்தார்களுக்கும் குடியானவனுக்கும், பணக்காரனுக்கும் கூலிக்காரனுக்கும், மேல் ஜாதிக்காரன் என்பவருக்கும் தீண்டப்படாத என்போருக்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் எல்லோருக்குமே தாங்கள் நல்ல பிள்ளையாய் இருக்க வேண்டும் என்பதே லட்சியமாய் கொண்டவர்கள். நமக்கு சுதந்திரத்தை சம்பாதித்துக் கொடுக்க காங்கிரஸ்காரர்களால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு சிறிதும் இல்லை. ஆதலால் இந்தியா சுதந்திரம் அடைய வேண்டுமானால் வேறு ஒரு புதிய ஸ்தாபனத்தை உண்டாக்கி கொள்ள வேண்டும்” என்பதாகும்.
மேலும் சுதந்திரத்திற்காக வகுக்கப்பட்ட கொள்கை விஷயத்திலும் திரு.போஸ் அவர்கள் கூறியதாவது:- “விவசாயிகள் தொழிலாளிகள் ஆகிய இவர்களுக்கு சமதர்மம் ஏற்பட வேண்டும்; ஜாதி வேற்றுமைகள் ஒழிக்கப்பட வேண்டும்; சமூகம் மதம் என்பதான மூடநம்பிக்கைகள் எல்லாம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்; பெண்களை புதிய தர்மங்களை ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும் என்பன ஆகியவைகள் ஆகும்.” ஆகவே இந்தக் கொள்கைகள் கூட இதுவரை குடிஅரசு பிரச்சாரம் செய்து வந்ததோடு இது சுயமரியாதை இயக்கத்தின் முக்கியமான கொள்கைகளாகவும் இருப்பது யாவரும் அறிந்ததே ஆகும் என்று தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜீவா தனது ஈரோட்டுப் பாதை சரியா நூலில் ‘சமதர்ம நாத்திக இயக்கம்’ என்ற தலைப்பில் “சுயமரியாதை பகுத்தறிவு இயக்கம் நாளடைவில் சமதர்ம நாத்திகப் பிரச்சாரத்திலும் இறங்கியது. சமதர்ம நாஸ்திக பிரச்சாரம் செய்ய சோவியத் யூனியனின் சமூக வாழ்வு எடுத்துக்காட்டாக இருந்தது சுயமரியாதைக்காரர்களுக்கு, அங்கு மதமற்ற சமூக வாழ்வை கண்டனர், எனவே ரஷ்ய காதல் பிறந்தது. ஈ.வெ.ரா. ரஷ்யாவுக்குப் போக விரும்பினார் என்று குறிப்பிட்டுள்ளார்
அதே பக்கத்தில் ஈ.வெ.ரா ஐரோப்பா சென்றிருந்த காலத்தில் தோழர் சிங்காரவேலின் தொடர்பு சமதர்ம இயக்கத்திற்கு கிடைத்தது. சிங்காரவேலு குடிஅரசு பத்திரிக்கையில் தொடர்ச்சியாக எழுதிய கட்டுரைகள் சமதர்மம், நாத்திகம் ஆகியவைகளைப் பற்றிய புத்தொளியையும் புதிய பார்வையையும் சுயமரியாதை இயக்கத்தாருக்கு அளித்தன என்கிறார் ஜீவா.
1932 ஆம் ஆண்டு ஈ.வெ.ரா. இங்கிலாந்து சென்றிருந்தபோது பொதுவுடமை இயக்கத்தைச் சார்ந்த தோழர் சக்லத்வாலாவின் நட்பு கிடைத்தது. ஒரு தொழிலாளர் பொதுக் கூட்டத்தில் பிரிட்டிஷ் தொழிலாளர் தலைவர் லான்ட்ஸ்பரி உரையாற்றினார். லாண்ட்ஸ்பரிக்கு விடை கூறும் முறையில் ஈ.வெ.ரா.வுக்கு பேச சந்தர்ப்பம் கிடைத்தது. தோழர் சக்லத் வாலா எழுதிக் கொடுத்த பிரசங்கத்தை ஈ.வெ.ரா படித்தார். “இந்தியர்களாகிய எங்களை நீங்கள் ஒரு பரிகசிக்கத்தக்க சமூகமாகக் கருதலாம். ஆனால் நாங்கள் பிரிட்டிஷ் தொழிற் கட்சியை ஆட்சியை மிகமிக பரிகசிக்கத்தக்க ஒன்றாகக் கருதுகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”
“இந்தியச் சுரங்கங்களில் 10 மணி நேர வேலை கொடுக்கப்படுகிறது. சுமார் 40 ஆயிரம் பெண்கள் தினம் 5 அணா கூலிக்கு பூமிக்குள் வேலை செய்கிறார்கள். இந்தக் கொடுமையையும் ஆபாசத்தையும் போக்க தொழிற்கட்சி அரசாங்கம் என்ன செய்தது?
அவ்வளவோடு மாத்திரம் அல்லாமல், இந்தியா தனது – இந்திய அரசர்களும், ஜமீன்தார்களும், முதலாளிமார்களும், ஐரோப்பிய வியாபாரிகளுமே ஆதிக்கம் வகிக்கும்படியானதும் தொழிலாளிகளுக்கும், பணக்காரர்களுக்குமே பாத்யமும், பொறுப்பும் இல்லாததுமான ஒரு அரசியல் சபை மூலம் நிர்வாகம் கிடைக்கும் படியான காரியத்திற்கு உதவி செய்கிறார்கள். ஆதலால் யார்க்க்ஷயர் தொழிலாளிகளே! நீங்கள் இந்தப் போலிக் கட்சிகளையும், கொள்கைகளையும் நம்பாமல் மனித சுதந்திரத்துக்கும் சமத்துவத்துக்கும் உண்மையாகவே போராடுவதற்காக உலகத் தொழிலாளிகளின் ஒற்றுமையை எதிர்நோக்கிக் கொண்டிருங்கள்.”
கம்யூனிஸ்ட் சக்லத்வாலாவோடு சேர்ந்தபோது ஈ.வெ.ரா பார்ப்பன ஆதிக்கத்தையும், பனியாசுரண்டலையும் மறந்துவிட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதில் என்ன தர்க்க நியாயம் உள்ளது? ஒன்று கம்யூனிஸ்ட் சக்லத்வாலா எழுதிக் கொடுத்ததைத்தான் பெரியார் படித்தார் என்று சொல்லியிருக்கக் கூடாது. பெரியாராகவே பேசினார் என்றால் இங்கிலாந்தில் இருக்கிற தொழிலாளரிடம்போய், பார்ப்பன ஆதிக்கத்தையும் பனியா சுரண்டலையும் மறந்துவிட்டார் என்று ஒரு புதிய நகைச்சுவையையாவது சொல்லாமல் இருந்திருக்க வேண்டும். ஆனாலும் ஜீவா சொன்னார்; எனவே நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்ற போக்கைத் தான் ‘ஈரோட்டுப் பாதை சரியா’ என்ற நூல் நமக்குச் சொல்லுகிறது.
பெரியார் முழக்கம் இதழ் 05032026

You may also like...