சங்கிகளை தோலுரித்த `திருப்பரங்குன்றம் பைல்ஸ்’
‘திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்!’ என்ற முழக்கத்தோடு மதவெறி சக்திகள் கலவர முயற்சியில் இறங்கி உள்ளனர். சிக்கந்தர் தர்காவை இடிக்கும் நோக்கத்தோடு முருகன் கோயிலில் தீபம் ஏற்றும் பிரச்சினையை கையில் எடுத்துள்ளார்கள். இந்த வரலாற்று பின்னணியையும் கலவரக்காரர்களின் சதி முயற்சியையும் அம்பலமாக்குகிறது `திருப்பரங்குன்றம் பைல்ஸ்’ என்ற ஆவணப் படம்.
`அறக்கலகம்’ என்ற வலையொளி (யூடியூப்) குழு இப்படத்தை மிகச்சிறப்பாக தயாரித்து உள்ளது. திருப்பரங்குன்றம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுதும் பண்பாட்டு ரீதியாக இசுலாமியர்களும் இந்துக்களும் சகோதரத்துவ உணர்வுடன் காலம் காலமாக வாழ்ந்து வருவதை இப்படம் கண்முன் நிறுத்துகிறது. கிராமங்களுக்கு நேரில் சென்று இசுலாமிய, இந்து மக்களின் பேட்டிகளை உணர்வுபூர்வமாக பதிவு செய்திருக்கிறார்கள். இந்த ஆவணப்படம் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமையத்தில் மார்ச்-1, பகல் 11 மணியளவில் திரையிடப்பட்டது. ஊடகவியலாளர் ரெளத்ரா நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
சத்யா வரவேற்புரையாற்றினார். மைனர் வீரமணி நோக்கவுரையாற்றினார். தோழர்கள் லதா, சத்யா, பொன்ராஜ், உமாபதி குழுவினர் பாடல் பாடினார்கள். பாட்டர் ஆவணப் படம் திரையிடல் பணிகளை மேற்கொண்டார். U2BRUTUS வலையொளி குழு இந்த திரையிடலுக்கு ஏற்பாடுகளை செய்தது. இந்தக் குழு தொடங்கியுள்ள ‘U2BRUTUS Reads’ என்ற அமைப்பின் முதல் நிகழ்ச்சியாக இந்த திரையிடல் நிகழ்ந்தது. நிகழ்ச்சியில் பால்.வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் வாஞ்சிநாதன், அய்.ஜே.கே தலைவர் ஹைதர் அலி, கொட்டுக்காளி திரைப்பட இயக்குநர் பி.எஸ் வினோத்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். ஆவணப்படத்தின் சிறப்புகள் குறித்து சிறப்பு விருந்தினர்கள் பேசினர்.
படம் பார்வையாளர்களிடம் உணர்வலைகளை தட்டி எழுப்பியது. தமிழ்நாடு முழுவதும் இந்த ஆவணப் படத்தைக் கொண்டுச் செல்ல வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். படத்தை இயக்கிய இயக்குநர்கள் தவம் மற்றும் தமிழ்தாசன், படத்தொகுப்பாளர் காமாட்சி ராமன், ஒளிப்பதிவாளர் ஹரி ஆகியோருக்கு பெரியார் படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
பெரியார் முழக்கம் இதழ் 05032026
