சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு மயானத்தில் பாகுபாடு காட்டுவது தீண்டாமையே!
பொது மயானத்தை ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பயன்படுத்த அனுமதி மறுப்பது தீண்டாமைக்குச் சமமான குற்றம் என்று குறிப்பிட்ட நீதிபதி வி.லட்சுமி நாராயணா, ஈரோடு மாவட்டத்தில் மயான நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கவும், கல்லறைகளைச் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
“வாழும் போது கண்ணியத்துடன் வாழ உரிமை உள்ளது போல, இறந்த பிறகு கண்ணியமான இறுதிச் சடங்குகளைப் பெறுவதும் அடிப்படை உரிமையே” என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொது மயானத்தை ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பயன்படுத்த அனுமதி மறுப்பது, தீண்டாமைக்கு சமமே என சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், கருமாண்டி செல்லிப்பாளையம் கிராமத்தில் உள்ள வண்டிப்பாதை நிலத்தை மயானமாக மாற்றக் கோரியும் மயானம் என்று வரையறை செய்யப்பட்ட இடத்தில் அடக்கம் செய்ய உறுதி கோரியும் கிராமத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வி.லட்சுமி நாராயணா முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கருமாண்டி செல்லிப் பாளையம் கிராமத்தில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் வண்டிப்பாதை புறம்போக்கு நிலம் என்று வகைப்படுத்தப்பட்டபோதும் இந்த நிலத்தை 70 ஆண்டுகளாக மயானமாக பயன்படுத்தி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அருந்ததியர் சமூகத்தினர் இந்த இடத்தை இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பயன்படுத்தி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை பொதுவாக உள்ள மயானம் அல்லது தகனம் செய்ய இடத்திற்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுவது குற்றம், இது தீண்டாமையின் ஒரு வடிவம் என்று தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட இடத்திலுள்ள நிலம் ஆக்கிரமிப்பு மற்றும் குப்பை கொட்டும் பகுதியாக மாறாமல் இருக்க கருமாண்டி செல்லிப்பாளையம் பேரூராட்சிக்கும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, மயானத்தில் உள்ள கல்லறைகளைப் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டார். பெரியார் முழக்கம் இதழ்26022026
