பெரியார் பற்றிய செய்திகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதா! ஜீவாவின் வாழ்க்கை வரலாறுகளில் விடுபட்டது எப்படி?ஜீவாவின் பெரியார் மீதான விமர்சனம் 12-கொளத்தூர் மணி
காந்தி ஆசிரமத் தலைவர் கும்பலிங்கம் அவர்களுடைய அறிக்கை கூறுகிறது, அந்த ஆசிரமம் 11.2.1926 அன்று தொடங்கப்பட்டது என்று. இந்த செய்தியைத் தாங்கி இருக்கிற அதே ‘குடிஅரசு’ இதழின் 5ஆம் பக்கத்தில் மற்றொரு செய்தியும் பதிவாகி இருக்கிறது. அச்செய்தி “ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள் 6.4.1926-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஸ்ரீமான்கள் பிச்சா சுப்பிரமணிய செட்டியார், ராய. சொக்கலிங்கம் செட்டியார், வ.ராமசாமி அய்யங்கார் முதலியவர்களுடன் காரைக்குடியில் இருந்து காலை 9 மணிக்கு வந்ததும், வாத்திய கோஷத்துடன் ஆதிதிராவிடக் குழந்தைகளுக்காக ஸ்ரீமான் கும்பலிங்கம் பிள்ளை பார்வையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் காந்தி ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்” என்ற செய்தியை நாம் பார்க்கிறோம்.
பெரியாரை தவிர்த்த ஜீவா
ஏற்கனவே 7.4.1926 நாளிட்ட ‘குமரன்’ இதழில் வந்திருந்த செய்தியை நாம் பார்த்திருக்கிறோம். அந்த செய்தியில் இதே நாளில் “6.4.1926 அன்று பெரியார் 10 மணிக்கு சிராவயல் வந்து காந்தி கிணற்றைத் திறந்து வைத்ததும், அதேபோல மாலை 6 மணிக்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பெரியார் தலைமை வகித்து சில நிமிடங்கள் முகவுரை கூறியவுடன், எழுத்தாளர் வ.ரா. அவர்கள் ‘கடமையும் உரிமையும்’ என்ற தலைப்பிலும், பிச்சப்பா சுப்ரமணியம் செட்டியார் அவர்கள் ‘சுதந்திரம்’ என்ற தலைப்பிலும், ராய.சொக்கலிங்கம் அவர்கள் ‘வகுப்பு’ என்ற தலைப்பிலும் உரையாற்றிய செய்தியும், மதுரை ஊமைபிள்ளை என்கிற பள்ளிக்கூட ஆசிரியர் தமது பள்ளிக்கூடத்தைப் பற்றி சில வார்த்தைகள் கூறியதாகவும் அவ்விதழில் காணப்படுகிறது. ( ஆனால் கும்பலிங்கம் பிள்ளை என்ற ஏற்கனவே சேரன்மாதேவி குருகுலத்திலும் ஆசியராகப் பணியாற்றி, இப்போது ஆசிரமத் தலைவராகவும் இருக்கிற கும்பலிங்கம் என்ற ஆசிரியர், மதுரை ஊமைப்பிள்ளை பள்ளிக்கூட ஆசிரியர் பற்றி மட்டும்தான் குறிப்புகள் இருக்கின்றனவே தவிர ‘ஜீவானந்தம்’ என்ற ஒரு ஆசிரியர் இருந்ததற்கான பதிவைக் கூட காண முடியவில்லை)
அதைத் தொடர்ந்து பெரியார் அரசியல், ஆசாரத் திருத்தம், தற்கால மதவாதிகளின் போக்கு ஆகியவற்றைப் பற்றி எளிய நடையில் இரண்டேகால் மணி நேரம் ஒவ்வொருவருடைய உள்ளமும் உருகுமாறு உண்மை உணர்வும், பொருட்பொலிவும் உள்ள வசனத்தில் உரையாற்றியதாக” அவ்வேடு சொல்லுகிறது. ஆனால் தோழர் ஜீவா அவர்களால் நேரடியாய் சொல்லப்பட்டு வரலாறு எழுதிய தோழர் இஸ்மத் பாஷா, தோழர் பாலதண்டாயுதம் ஆகியோரைப் போன்றே ஜீவா வாழ்க்கை வரலாறுகள் எல்லாம் வ.ரா. அவர்கள் வருகை பற்றியும், அப்போது ஜீவா அவர்கள் ‘நாடும் இளைஞரும்’ என்ற தலைப்பில் தனித்தமிழ் நடையில் உரையாற்றியது பற்றியும், அவர் வ.ரா. பிரமித்துப்போனது பற்றியும் பதிவு செய்திருக்கிறார்கள். அப்படி ஒரு பதிவினை ‘குமரன்’ ஏட்டிலும் நம்மால் காண முடியவில்லை; ‘குடிஅரசு’ இதழிலும் அவ்வாறான செய்திகளைப் பார்க்க முடியவில்லை.
அடுத்ததாக குடிஅரசு இதழின் 24.7.1927 நாளிட்ட இதழில் 5-ஆம் பக்கத்தில் ‘காரைக்குடியில் திரு.நாயக்கர்’ என்ற தலைப்பில் ஒரு பதிவு காணப்படுகிறது. அதில் 16.7.1927 அன்று பெரியார் காரைக்குடிக்கு சென்றது குறித்தும், பல இடங்களில் வரவேற்புகள் நிகழ்ந்தது பற்றியும் பதிவுகள் காணப்படுகின்றன. “அந்நிகழ்வில் திரு.நாயக்கர் அவர்கள் பெரிய கரகோஷத்தினுடன் எழுந்து மேடை மீது இவர்ந்து (ஏறி) மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து நின்ற மக்களை நோக்கி சுமார் 2 மணி நேரம் வரை வெகு உருக்கமாக, நகைச்சுவையுடன் அன்பு உணர்வும், அற உணர்வும் பொங்கித் ததும்ப தேன்மாரி என சொன்மாரி பொழிந்தனர். அது பின்னர் வரும்” என்ற செய்தியும் காணப்படுகிறது.
அதோடு அந்த ஊர்வல நிகழ்வில் சிராவயல் காந்தி ஆசிரமத்தாரும், பிற அன்பர்களும் தேசிய கீதம் பாடிக்கொண்டு வந்தனர் என்ற செய்தியும், கூடி இருந்த மக்கள் குறித்து எழுதுகிறபோது சிராவயல் முதலிய ஊர்களில் இருந்து ஏராளமான அன்பர்கள் வந்திருந்தனர் என்றும், கூட்டமானது ஆயிரம் இதழ்களான தாமரை மலர் போல மகிழ்ச்சி கடலென நிலவியது என்றும் காணப்படுகிறது. ஆக பெரியார் 16.7.1927 அன்று காரைக்குடி வந்தபோது சிராவயல் ஆசிரமத்தார்கள் வருகை தந்திருக்கிறார்கள்; சிராவயலில் இருந்து மக்கள் வருகை தந்திருக்கிறார்கள்; இந்த செய்திகள் ஒருவேளை தோழர் ஜீவா அவர்களுக்கு தெரிந்திருக்காதோ, என்னவோ அல்லது தெரிந்திருந்தும் அவர் வாழ்க்கை வரலாறு எழுதிய தன் தோழர்களிடம் அதைச் சொல்லவில்லையோ தெரியவில்லை ; ஆனால் பெரியார் வருகை பற்றிய எந்தப் பதிவுகளும் ஜீவாவின் வாழ்க்கை வரலாறுகளில் இல்லை.
தனிக்கிணறு கூடாது
அதுமட்டுமின்றி 31.7.1927 குடி அரசு இதழின் 3,4ஆம் பக்கங்களில் 20.7.1927 அன்று சிராவயல் ஊருக்கே இரண்டாவது முறையாக பெரியார் சென்றிருக்கிறார். அந்தச் செய்தியின்படி காந்தி ஆசிரமத்தாரும், ஆதிதிராவிட வாலிபர் சங்கத்தாரும் தனித்தனியே இரண்டு வரவேற்புப் பத்திரம் வாசித்து கொடுத்த சமயம் திரு.நாயக்கர் செய்த ‘சொற்பொழிவின் தத்துவம்’ என்ற தலைப்பிட்டு அவருடைய உரையை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் “சென்ற வருடம் இதே ஊருக்கு வந்திருந்த சமயம் காந்தி கிணறு என்ற ஒரு கிணற்றை ஆதிதிராவிடர்களுக்கு மாத்திரம் என்று வெட்டி அதைத் திறந்து வைக்கும்படி கேட்டுக்கொண்ட போது நான் இதே அபிப்பிராயத்தைத் தான் தெரிவித்தேன்.
காரணம் என்ன என்றால் அவர்கள் படிக்கக்கூடாது என்பதற்காகவாவது அவர்களுக்கு தனி சௌகரியம் ஏற்படுத்திக் கொடுக்கக்கூடாது என்பதற்காகவாவது அல்லவே அல்ல. இம்மாதிரி ஒரு வகுப்பாருக்குத் தனி சௌகரியம் ஏற்படுத்திக் கொடுத்து, நம்மோடு கலந்து வாழும்படி செய்யாததன் பயனாய் நிரந்தரமாய் இவர்கள் இழிந்தவர்கள் என்பதை நிலை நிறுத்தி அவர்களை மீளவிடாமல் செய்து வருகின்றோம் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களை முன்னுக்கு கொண்டு வருவதற்கும் சமத்துவம் அடையச் செய்வதற்கும், பாடுபடும் பெரியோர்கள் அந்த சமூகத்திற்கு என்று தனியாக கிணறும், கோவிலும், பள்ளிக்கூடமும் வெட்டவும், கட்டவும், ஏற்படுத்தவும் நினைப்பதானது அச்சமூகத்தாரை நிரந்தரமாய் இழிவுபடுத்தி வைப்பதற்கு ஆதாரங்களையும், அவசியங்களையும், கற்சிலைகளையும், சிலாசனங்களையும் உண்டாக்கி வைத்துள்ளோரே ஆவார்கள்” என்றும் பேசியிருக்கிறார்.
இதுதான் பெரிய மனிதரின் பண்பா?
ஆக ஒரு முறை பெரியாரோடு உடன் வந்திருந்து சிறிது நேரம் உரையாற்றிய எழுத்தாளர் வ.ரா. அவர்களைப் பற்றி, அவர்கள் உரையாற்றியதைப் பற்றிக் குறிப்பிடாமல் அவருக்கு முன்னால் ஜீவா உரையாற்றியது பற்றி பல்வேறு வகையில் முலாம் பூசி சொல்ல முடிந்தவரால், ஏன் இரண்டு முறை அதே ஊருக்கு, அதே காந்தி ஆசிரமத்திற்கு வந்திருந்த பெரியாரையும், அதுவும் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட சிராவயல் ஆசிரமத்திற்கு ஏப்ரல் மாதத்திலேயே, அந்த ஆசிரமம் தொடங்கப்பட்ட இரண்டாவது மாதத்திலேயே முதல் முறையும், அதற்கு ஓராண்டு கழித்து இரண்டாம் முறையும் வந்திருந்த பெரியாரைப் பற்றி, அவரது காரைக்குடி நிகழ்வின்போது ஊர்வலத்திலும் கலந்து கொண்டு ‘தேசியப் பாடல்களைப் பாடிய சிராவயல் காந்தி ஆசிரமத்தார்’ என்று குறிப்புகள் இருக்கிற நிலையிலும், அதுகுறித்துப் பேசாமலே விடுவது என்பது பெரிய மனிதராகப் போற்றப்படும் ஒருவரின் பண்பாகுமா என்ற கேள்வி எவர் ஒருவருக்கும் எழத்தானே செய்யும்!
‘குடி அரசு’ ஏட்டில் காணப்படுகிற பதிவின்படி பெரியாரை ஜீவா சந்தித்த நிகழ்வு 9.3.1930இல் நிகழ்ந்துள்ளது. “தென்மாப்பட்டில் ‘வைக்கம்வீரர் வாசக சாலை’யின் ஆண்டு விழா கூட்டத்திற்கு தோழர்கள் சௌந்தரபாண்டியன், எஸ் ராமநாதன், கைவல்ய சுவாமிகள், பட்டுக்கோட்டை தண்டபாணி, திருச்சி விஸ்வநாதம் ஆகியோருடன் செல்லும் வழியில் நாச்சியார்புரத்தில் ‘உண்மை விளக்க நிலையத்’தாரால் பெரியார் அவர்கள் வரவேற்கப்பட்டு வாத்தியங்களுடன் அங்குள்ள ஆதிதிராவிடர் பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்” என்றும், “அங்கு ஊ.பு.அ சௌந்தர பாண்டியன் தலைமையில் நிலையத்தார் சார்பாக உபசாரப் பத்திரம் (வரவேற்பிதழ்) திரு. ஜீவானந்தம் அவர்களால் வாசித்துக் கொடுக்கப்பட்டது” என்றும் காணப்படுகிறது. அதற்குப் பின்னர் ஆத்மா ராம் அவர்கள் திரு.பாண்டியன் முதலியோரை வரவேற்று உரையாற்றியுள்ளார். ( ‘நாச்சியார்புரம்’ என்ற தலைப்பில் இவ்வூரில் ஆயுர்வேத வைத்தியசாலை ஆத்மாராம் சுவாமிகளால் நகரத்தாரின் பொருள் உதவியின் மேல் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. இவ் வைத்தியசாலையில் ஏழை மக்களுக்கு உபகாரம் உண்டு’ என்ற செய்தி 7.6.1926 நாளிட்ட ‘குமரன்’ இதழில் நான்காம் பக்கத்தில் வெளியாகி உள்ளது)
அதன்பின்னர் தென்மாப்பட்டு சென்று அங்கு செயல்பட்டு வரும் வைக்கம்வீரர் வாசகசாலையின் ஆண்டு விழாவில் பெரியாரும் தோழர்களும் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளனர். இந்த இடத்தில் வேறு சில செய்திகளைப் பார்ப்போம். ஜீவாவின் வாழ்க்கை வரலாறு ‘பொதுவுடைமையின் முகவரி ஜீவா’ என்ற தலைப்பில் 2008ஆம் ஆண்டில் தோழர் பொன்னீலன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அந்நூலுக்கு முன்னுரை வழங்கிய முனைவர்.தே.வேலப்பன் அவர்கள் “சாமுவேல் ஜான்சன் அவர்களுக்கு ஒரு பாஸ்வெல்; திரிசிரபுரம் (பெரும் புலவர் மீனாட்சி சுந்தரம்) பிள்ளைக்கு ஒரு உ.வே.சா; ஜீவாவுக்கு ஒரு பொன்னீலன்” என்று பாராட்டப்பட்ட நூல் அது. அந்நூலின் 44 வது பக்கத்தில் உள்ள செய்திகளை பார்ப்போம்.
“நீண்ட காலம் சிராவயலில் தாக்குப் பிடிக்க முடியவில்லை ஜீவாவுக்கு. காந்தியடிகளைக் கடவுளாக மதித்தவர் அவர். ஆயினும் வர்ணாசிரம தர்மக் கோட்பாட்டில் காந்தியடிகளுக்கு இருந்த பிடிப்பு ஜீவாவுக்குக் கடுமையான மன உறுத்தலைத் தந்தது. வர்ணாசிரமக் கொடுமைக்கு எதிராக மேலும் மேலும் தீவிரம் காட்டுகிறார் அவர். இந்தப் போக்கு சிராவயல் ஆசிரமம் நடத்துபவர்களுக்கும் ஜீவாவுக்கும் இடையில் முரண்பாடுகளை வளர்த்தது. எதிலும் சமரசம் செய்து கொள்ளாதவரான ஜீவா அங்கிருந்து வெளியேறி பக்கத்து ‘நாச்சியார்புரம்’ வருகிறார். அங்கு ஒரு ஆசிரமம் அமைத்து சிறிது காலம் அடித்தட்டு மக்களுக்கு கல்வித் தொண்டாற்றுகிறார். அங்கும் தன் பணியைத் தொடர முடியாமல் கடைசியில் சிவகங்கை வருகிறார் அவர். அங்கு அக்காலத்தில் சுயமரியாதைச் சுடரொளியாகத் திகழ்ந்த எஸ். ராமச்சந்திரன் சேர்வை அவர்களுடன் சேர்ந்து சுயமரியாதைத் தொண்டாற்றத் தொடங்குகிறார்”
“ராமச்சந்திரன் சேர்வை சிவகங்கை மன்னரின் உறவினர். சிவகங்கை சமஸ்தான வழக்கறிஞர். பெரியாரின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவர். ஜீவாவை சிவகங்கையில் தங்கவைத்த அவர், சுயமரியாதைப் பிரச்சாரம் செய்ய அவருக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கிறார்” “சிவகங்கையில் ஜீவாவின் முதன்மையான பணி மாலை நேரப் பள்ளிகளைப் பார்வையிடுதல். ராமச்சந்திரனின் ஏற்பாட்டில் சிவகங்கையைச் சுற்றி பல இடங்களில் மாலை நேரப் பள்ளிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றது. ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டு இரண்டு ஆசிரியர்கள், அவர்களுக்குத் தேவையான விளக்குகள், எழுது பொருட்கள், படிக்க வசதியான இடங்கள் முதலியனவற்றை ராமச்சந்திரன் சேர்வை ஏற்பாடு செய்தார். இந்த பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் கற்பிக்கப்பட்டதோடு பகுத்தறிவு கருத்துக்களும் போதிக்கப்பட்டன’’.
தென்மாப்பட்டு நிகழ்ச்சியின் உண்மை
46 ஆம் பக்கத்தில் “இந்தச் சூழலில் தான் ‘தென்மாப்பட்டு’ என்னும் ஊரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பெரியாரும் ஜீவாவும் ஒரே மேடையில் பேசுகிறார்கள். ஜீவாவின் பேச்சு பெரியாரைப் பெரிதும் கவர்ந்தது. கூட்டம் முடிந்ததும் பெரியார் ஜீவாவிடம் “நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என்று கேட்டார். ஆசிரியராகப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றார் ஜீவா.
“பெரியவர்களுக்கே சொல்லிக் கொடுக்கக் வேண்டிய பாடங்கள் ஏராளம் இருக்கின்றன. சிறு பையன்களுக்கு அவசரம் இல்லை. போய் அந்த வேலையை விட்டு விட்டு என்னோடு வாருங்கள்” என்றார் பெரியார். பெரியாரின் முழுமையான தொண்டராக மாறுகிறார் ஜீவா.
இந்தக் கதையின் உண்மைத் தன்மையையும் பார்க்கலாம். இப்போது தென்மாப்பட்டில் வைக்கம் வீரர் வாசகசாலை ஆண்டுவிழாவின் செய்திகளைப் பார்ப்போம். அது 9.3.1930 ‘குடி அரசு’ ஏட்டின் 4ஆம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. தென்மாப்பட்டில் எஸ். ராமநாதன் தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில் உரையாற்றியவர்களின் விவரங்களைப் பார்ப்போம். “ஜனாப் அப்துல் கரீம் அவர்களால் வரவேற்பு கீதம் பாடப்பட்டது. திரு. பெ. மாணிக்கவாசகம் அவர்களால் பார்ப்பனக் கொடுமைப் பாடல்கள் பாடப்பட்டன. பிறகு தலைவர் ராமநாதன் அவர்கள் முகவுரைப் பிரசங்கம் செய்தார்.
பிறகு திரு சௌந்தர பாண்டியன் அவர்கள் உபசாரப் பத்திரத்திற்குப் பதிலளிக்கும் முறையில் ‘சுயமரியாதை சங்கம்’ என்பது பற்றி ஒரு சொற்பொழிவாற்றினார். பிறகு திரு.திருச்சி விஸ்வநாதம் ‘முன்னேற்றம்’ என்பது பற்றியும், சோழவந்தான் திரு. பட்டாபிராம அய்யர் ‘பெண்கள் விடுதலை’ என்பது பற்றியும், திரு.ஈ.வெ. ராமசாமி ‘நமது நாட்டின் இழிநிலைக்குக் காரணம்’ என்பது பற்றியும், இளங்கோ என்னும் சிறுவன் ‘சுயமரியாதை’ என்பது பற்றியும், சிவகங்கை எஸ்.ராமச்சந்திரன் ‘தீண்டாமை’ என்பது பற்றியும், சாத்தூர் சேர்மன் கந்தசாமி முதலியார் ‘ஜாதி’ என்பது பற்றியும் சொற்பொழிவாற்றினார்கள். பிறகு புகைப்படம் எடுக்கப்பட்டது.
சுயமரியாதைப் பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன, நாடகங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன. “அவர்களைப் பாராட்டி வைக்கம் வீரர் வாசக சாலையார் சார்பாக பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள் வெள்ளி மெடல்கள் அளித்து நல்லுரை வழங்கினார். நடிக்கப்பட்ட நாடகம் சொற்பொழிவுகளை விட சிறந்த நலம் பயப்பது என்றும், இத்துறையில் நிலையத்தார் செய்த முயற்சி போற்றத்தக்கது என்றும், நாடகத்தைப் பல ஊர்களிலும், தமிழ்நாடு முற்றும் நடித்து மக்களுக்கு உணர்ச்சியூட்ட வேண்டும் என்றும், அது மற்ற நாடகங்களைப் போல கட்டுக் கதைகள் ரூபிக்காது, தினமும் நடக்கும் உண்மை நிகழ்ச்சிகளையே ரூபித்துக் காட்டுகின்றது என்றும் கூறி மேற்படி மாணவ மாணவிகளை ஈரோட்டு மகாநாட்டுக்கு வரும்படி அழைத்தார். பிறகு தலைவர் முடிவுரையானதும் தலைவருக்கும் உபநியாசர்களுக்கும் நன்றி கூறி கூட்டம் இரவு 9:00 மணிக்கு நிறைவேறிற்று’’.
ஜீவா பேசியதாக பதிவு இல்லை
இதுவே ‘குடிஅரசு’ ஏட்டில் தென்மாப்பட்டு நிகழ்ச்சி பற்றி பதிவாகி இருக்கிற செய்திகளாகும். நாச்சியார்புரம் ‘உண்மை விளக்க நிலையத்தார்’ பற்றிய செய்தியில் ஈ.வெ.ராமசாமியாருக்கு ஒரு உபசாரப் பத்திரம் நிலையத்தின் சார்பாக திரு. ஜீவானந்தம் அவர்களால் வாசித்துக் கொடுக்கப்பட்டது. திரு ஆத்மா ராம் அவர்களால் திரு பாண்டியன் முதலியோர்களை வரவேற்று ஒரு சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. திரு. ராமசாமியார் பதில் அளித்ததும் பிள்ளைகளால் சுயமரியாதைப் பாடல்கள் பாடப்பட்டது. தலைவர் பாண்டியன் அவர்கள் முடிவாக ஆதிதிராவிடப் பிள்ளைகள் விஷயமாக தன்னாலும் தனது போர்டினாலும் (அப்போது அவர் இராமநாதபுரம் டிஸ்ட்ரிக் போர்டு தலைவர்) கூடிய உதவி புரிவதாக வாக்களித்தார். பிறகு பெருத்த ஜே கோஷத்துடன் எல்லோரும் தென்மாப்பட்டுக்கு புறப்பட்டார்கள்.
இந்த இடத்தில் மட்டும் தோழர் ஜீவானந்தம் அவர்களுடைய பெயர் செய்தியில் கொடுக்கப்பட்டிருக்கிறதே அன்றி தென்மாப்பட்டு பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாக எந்தப் பதிவும் அதில் இல்லை. இளங்கோ எனும் சிறுவன் ‘சுயமரியாதை’ என்பதைப் பற்றி பேசியதுகூட பதிவாகி இருக்கிறபோது, தோழர் ஜீவா பேசியிருந்தால் அது பதிவு செய்யப்பட்டு இருக்காதா? என்ற அய்யம் இயல்பாகவே எழத்தான் செய்கிறது; அய்யத்திற்கு எதிர்மறையான விடைதான் கிடைக்கிறது.
பெரியார் முழக்கம் இதழ்05022026.
