இதுதான் இந்திய நாடாளுமன்றமா?

இந்தியாவின் நாடாளுமன்றத்தின் ஜனநாயகப் பெருமையை பார்த்து உலக நாடுகள் கைகொட்டி சிரிக்கின்றன. குடியரசுத் தலைவர் தேசப் பாதுகாப்பு குறித்து ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் பேசுவதும் அதற்கு பிரதமராக இருப்பவர் நன்றி கூறுவதும் மரபு.

“நான் அப்படியெல்லாம் நன்றி கூற முடியாது; நாடாளுமன்றத்தில் எனக்கே பாதுகாப்பு இல்லை; குறிப்பாக நான் அமர்ந்திருக்கும் இருக்கையிலேயே எனக்கு ஆபத்து; சந்தேகமிருந்தால் அந்த சபாநாயகர் நாற்காலியில் ஒருவரை உட்கார வைத்து இருக்கிறோமே அவரை கேட்டுப் பாருங்க”… என்று சபாநாயகரைக் கொண்டு அறிவிக்கச் செய்துவிட்டார் நாட்டின் பிரதமர்.

இதே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசத் தொடங்கினார். கைலாச மலையை சீனப் படைகள் ஆக்கிரமித்து வரும்போது இந்திய இராணுவ தளபதி அவசரமாக ஆலோசனை கேட்டார். தடுத்து நிறுத்துவதா? வேண்டாமா? என்று கேட்டிருக்கிறார். தேசத்தை காக்கும் ராணுவ அமைச்சர் ராஜநாத் சிங் கருத்து கூறவில்லை. பிரமர் மோடியோ “ சீனப்படைகளை எதிர்த்து போரிடலாமா? அல்லது ஆக்கிரமிப்புக்கு வழிவிடலாமா என்பது உங்கள் முடிவு எனக்கும் இதற்கும் தொடர்பில்லை” என்று கூறிவிட்டார் என்று ராணுவ தளபதியாக செயல்பட்ட நரவேனா அவர்களே தனது நூலில் பதிவு செய்ததைத் தான் ராகுல் பேசினார்.

பதறிப் போன பாஜக எம்பிக்களும், அமைச்சர்களும் “அதைப் பேச நீ யார்? பேசாதே! எங்களுக்கு இல்லாத தேச பக்தி உனக்கு வந்துவிட்டதா” என்று கூக்குரலிட்டு பேச்சை அடக்கி விட்டார்கள். தொடர்ந்து பேசவே அனுமதிக்கவில்லை. “இராணுவ தளபதியின் அந்த நூலை வெளியிட நாங்கள் அனுமதி மறுத்துவிட்டோம் அந்த வெளிவராத நூலில் இருந்து எப்படி எடுத்துக் காட்டலாம்” என்று கொந்தளித்தார்கள்.
ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளிடையே மோடி உரையாடும் காட்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிப்பரப்புகின்றன. தேர்வுகளை எழுதப் போகும் மாணவர்களுக்கு மன அழுத்தங்களை மோடி தீர்த்து வைக்கிறார் என்று பெருமை பேசுகிறார்கள். மாணவர்களின் கேள்விகளுக்கு மோடி பதில் கூறுவார். ஆனால் நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களின் கேள்விக்கு வாய் பேசமாட்டார். சீனப் படையை எதிர்த்து நமது மண்ணை ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது என்று ஏன் மோடியோ ராஜநாத் சிங்கோ உத்தரவிடவில்லை.
ராணுவ தளபதியே வெளியிட்ட உண்மையை ஏன் மறைக்க வேண்டும்?
அந்த நூலை வெளியிட ஏன் அனுமதி மறுக்க வேண்டும்?
ராணுவ தளபதி கூறுவது உண்மை இல்லை என்றால் அதை மறுப்பதற்கு ஏன் தயங்க வேண்டும்?
வேத மந்திரங்கள் முழங்க பல நூறு கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றம் எதற்காக? இப்படி பேச்சை தடுப்பதற்கும், பேச மறுப்பதற்கும் தானா? பெரியார் முழக்கம் இதழ்12022026.

You may also like...