சாதனைகளைத் தொடர வைப்போம்!

இந்த ஆட்சியின் சாதனைகள் தொடர வேண்டும் என்று ஏன் கூறுகிறோம்? நேர்மையுடன் சிந்தித்துப் பார்ப்போம்!
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளைப் போல் தமிழ்நாட்டில் இதுவரை நடந்திருக்கிறதா?

“பதவி ஏற்றவுடன் முதல்வர் ஸ்டாலின் முதல் கையெழுத்தோடு தொடங்கியது பெண்களின் கட்டணம் இல்லாப் பேருந்து பயணம்; மகளிர் உரிமைத்தொகை; புதுமைப்பெண்; பள்ளிக் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி; மக்களைத் தேடி மருத்துவம்; நான் முதல்வன்; என்று நூற்றுக்கணக்கான திட்டங்கள் அணிவகுத்து வந்து கொண்டே இருந்தன.

அறிவிக்கப்பட்ட திட்டங்களில் இதுவரை நிறைவேற்றப்படாத திட்டம் என்று எந்த ஒரு திட்டத்தையாவது கூற முடியுமா ? எதிர்க்கட்சிகளால் கூடஇந்த திட்டங்களில் குற்றம் குறைகளை காணமுடியவில்லை?
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது இத்தகைய சாதனைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கிறதா? இங்கே தான் நடந்தது.
அதுமட்டுமா! பெண்களுக்கான உரிமை திட்டங்களின் வெற்றிகளை உணர்ந்து இந்தியாவில் பாஜக உள்ளிட்ட 8 மாநிலங்கள் இதை செயல்படுத்த தொடங்கிவிட்டன. வழிகாட்டியது தமிழ்நாடுதான்.
பொருளாதார வளர்ச்சியில்; பெண் கல்வியில்; பள்ளிக்கல்வியில்; ஏற்றுமதியில்; தனிநபர் வருவாயில்; சமூக வளர்ச்சியில் என அனைத்து மாநிலங்களையும் விட தமிழ்நாடு முன்னணியில் நிற்கிறது. இதை கூறுவது யார் தெரியுமா? ஒன்றிய ஆட்சிதான்.
ஒன்றிய பாஜக அரசின் பொருளாதார ஆய்வு அறிக்கைகளும் நிதி நிறுவனங்களுமே ஒப்புக் கொண்டிருக்கின்றன;மருத்துவ சேவைகளுக்கு அய்.நா விருது வழங்குகிறது.
இப்படி இந்தியாவின் ஒரு மாநிலம் வளர்ச்சியில் சாதனைகளை நிகழ்த்தியிருப்பதை ஒன்றிய ஆட்சி பாராட்ட வேண்டுமா? வேண்டாமா?
மாறாக இந்த வளர்ச்சிகள் ஒன்றிய ஆட்சியாளர்களை உறுத்துகிறது. ஏன் தெரியுமா?
இந்த வளர்ச்சிகளுக்கு அடிப்படை திராவிடமாடல்; அனைவரையும் உள்ளடக்கிய சமூக நீதிமாடல்; சனாதனத்தை மறுக்கும் மாடல்!
இந்தியாவை இந்துக்களின் ஒற்றைத் தேசமாக மாற்றுவதற்கு இந்த திராவிட மாடல் தான் தடைக்கல்லாய் நிற்கிறது.
நமது தனித்துவமான மாநில அடையாளங்களை சிதைக்கிறார்கள். என்ன நடக்கிறது பாருங்கள்?
திட்டங்களுக்கு அனுமதி இல்லை; நிதி ஒதுக்க மறுக்கிறார்கள்; ஆளுநர்களை ஆயுதமாக்கி மிரட்டுகிறார்கள்;அமலாக்கத் துறையும், புலனாய்வுத் துறையும் களமிறக்கப்படுகின்றன; சமஸ்கிருதமும் இந்தியும் மெல்ல மெல்ல நுழைகிறது; இந்தியா இந்து பெண் கடவுள்களின் பூமி என்ற ‘வந்தே மாதர’ பாடலை அனைத்து மதத்தினர் மீதும், மத நம்பிக்கை இல்லாதவர்கள் மீதும் திணிக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அறிவியல் அடிப்படையில் உறுதி செய்யப்பட்ட தமிழர்களின் ‘கீழடி’ நாகரிக ஆய்வுகளை ஏற்க மறுக்கிறார்கள். ஆரியர்களின் கங்கைச் சமவெளி நாகரிக காலத்திலேயே தமிழர்களின் கீழடி’ நாகரிகம் இருந்தது என்ற தொல்லியல் ஆய்வை மாற்றி எழுது என்று உத்தரவு போடுகிறார்கள். இதை விட வேறு கொடுமை உண்டோ!
மோடியா? லேடியா? என்று சவால் விட்ட ஜெயலலிதாவின் மறைவு அவர்களுக்கு வசதியாகப் பயன்பட்டது. தமிழகத்தில் தந்திரமாக ஊடுருவ அஇஅதிமுகவுக்கு வலை வீசினார்கள்.
அஇஅதிமுகவை சின்னாபின்னமாக சிதைத்தார்கள்; ஊழல் வழக்குகளை வைத்து தலைவர்களை தங்கள் வலைக்குள் கொண்டு வந்தார்கள்.
நான்காண்டு கால எடப்பாடி ஆட்சியை இயக்கியது யார்? ஒன்றிய பாஜக தான். இதை எடப்பாடியே ஏற்றுக் கொள்கிறார்.

“மாநில உரிமைகளை அவர் அடகு வைத்தார்; உதய் மின் திட்டம்; உணவு பாதுகாப்பு சட்டம்; காஷ்மீர் உரிமை பறிப்பு சட்டம்; முத்தலாக் சட்டம்; விவசாயிகள் சட்டம்; டெல்லி மாநில உரிமை பறிப்பு சட்டம்; குடியுரிமை சட்டம் என்று அத்தனை சட்டங்களுக்கும் ஒப்புதல் தந்து மாநில உரிமைகளை சிதைக்கும் பாஜகவின் துரோகத்திற்கு துணை நின்றார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எந்த ஒரு பாஜகவின் சட்டத்துக்கோ, திட்டத்துக்கோ எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறாரா? இல்லை! அனைத்துக்கும் பச்சை கொடிதான்; பெரும் துரோகம்!

இப்போது அதிமுக அணி என்.டி.ஏ அணியாக பெயர் மாற்றப்பட்டு விட்டது. இது அமித் ஷாவின் அணி!
தமிழ்நாட்டில் பாஜகவின் நேரடி அதிகாரத்துக்கு கதவுகளை திறந்து இரட்டை எஞ்சின் ஆட்சிக்காக காத்திருக்கிறார்கள்; அஇஅதிமுக கொடியில் பறக்கும் அண்ணாவின் படத்தை அழித்து அமித் ஷாவை வரைந்து கொண்டிருக்கிறார் எடப்பாடி.
மற்றொரு பக்கம் தவெக விஜய் விசில் ரசிகர்களுடன் வருகிறார். “விஜய் தான் வரட்டுமே; ஒரு மாற்று வேண்டாமா? என்று சிலர் கேட்கிறார்கள்; நடிகர் சங்கத்தின் தலைவராக வேண்டுமானால் அவர் வரலாம்; ஆனால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையோடு விளையாடுவதற்கு அவரை எப்படி அனுமதிக்க முடியும்?

சினிமாவில் நடித்து கோடி கோடியாக பணம் குவித்து; தமிழ்நாட்டு மக்களின் இன்ப துன்பங்களில் எந்தப் பங்கும் வழங்காத ஒருவர்; “நான் ஒருவனே தமிழ்நாட்டின் தலைவன்” என்று பேசலாமா ? என்மீது அவதூறு கூறினால் அதுமக்கள் மீதான அவதூறு என்று கொக்கரிப்பது ஆணவமா? இல்லையா?
ஒன்றிய பாஜக ஆட்சியை எதிர்க்கவே மாட்டோம் என்று ஒரே நேர்கோட்டில் விஜயும், எடப்பாடியும் கைகோர்த்து களத்தில் நிற்கிறார்கள் என்ற உண்மை புரிகிறதா!
வாக்காளர்களே!
திராவிட மாடல் ஆட்சியில் ஜாதி, மதக்கலவரங்கள் இல்லை; தடியடி துப்பாக்கிச் சூடுகள் இல்லை.
ரேஷன் கடைகள் சிறப்பாக இயங்குகின்றன.
பிரச்சனைகளை தீர்க்க அதிகாரிகள் மக்களை நோக்கி வருகிறார்கள்.
மதக் கலவர சதிகளை முறியடித்துக் காட்டுகிறார்.
“மாநில உரிமைகளுக்காக சட்டப் போராட்டம் நடத்துகிறார்.
இவர் காலத்தில்தான் சட்டமன்றமே மக்கள் மன்றமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
மக்கள் சந்திப்பில் மனம் நெகிழ்கிறார்.
பெரியார்,அம்பேத்கர், மார்க்ஸ் முதல் வள்ளுவர்; வள்ளலார் வரை நமது வழிகாட்டிகள் அனைவரும் கொண்டாடப்படுகிறார்கள்.
கொள்கை எதிரிகளையும் காழ்ப்புணர்வு இன்றி மதிக்கிறார்; எல்லாவற்றிற்கும் மேலாக கட்சிகளைப் பழிவாங்கும் ஜெயலலிதா காலத்தின் அரசியலை முற்றாக ஒதுக்கித் தள்ளி மக்களுக்கான சாதனைகளை நிகழ்த்தும் மகத்தான தலைவராக வலம் வருகிறார்.
ஆட்சியின் சாதனைகளை வெளிநாடுகளின் ஏடுகளும் புகழ்கின்றன.
திமுக ஆட்சியை உறுதி செய்வோம்!
– திராவிடர் விடுதலைக் கழகம்
பெரியார் முழக்கம் இதழ் 05032026

You may also like...