ஜாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான கலந்தாய்வு கூட்டம்

தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் ஜாதிய வன்கொடுமைகள் பின்னணியும் சட்ட ரீதியான தீர்வும் என்ற தலைப்பில் எவிடென்ஸ் அமைப்பின் சார்பாக கலந்தாய்வு கூட்டம் 24.01.2026 அன்று காலை 10 மணியளவில் மதுரை, நரிமேடு பகுதியில் உள்ள பிசிஎஸ் ஹாலில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார்.

எவிடென்ஸ் கதிர் ( எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர்) மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அதிகளவு ஜாதிய வன்கொடுமைகள் நடந்து வருகின்றன. ஜாதிரீதியான படுகொலைகள், தாக்குதல்கள், ஆணவக் குற்றங்கள், பாலியல் வல்லுறவுகள் உள்ளிட்ட பல்வேறு வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஜாதிய வன்கொடுமைகளை தடுப்பதற்கு எஸ்.சி./எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருந்த போதிலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஜாதிய உணர்வுகளை தூண்டுகிற ஜாதிய சக்திகள் அதிகளவு வளர்ந்தும் வருகின்றன. அத்தகைய சக்திகளுக்கு எதிராக உரிய நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இவ்வன்கொடுமைகளுக்கு காரணமான சமூக, அரசியல், பொருளாதார நிலைகளை கண்டுணர்வது மிக முக்கியமான பணியாக கருதியும், அதுமட்டுமல்லாமல் வன்கொடுமைகளை தடுப்பதற்கென்று இருக்கக்கூடிய காவல்நிலையங்கள், நீதிமன்றங்கள், அரசின் பிற துறைகள் நியாயமாகவும் முழுமையாகவும் செயல்படும் நிலைகளையும் ஆராய்வது இக்காலகட்டத்தின் முக்கிய பணியாக கருதியும், சாதிய வன்கொடுமைகளுக்கான காரணங்கள் என்ன? அதற்கான தீர்வுகள் என்ன? என்பதையும் வன்கொடுமைகளுக்கு எதிராக இருக்கக்கூடிய சட்டங்கள், அரசு நிறுவனங்களின் பணிகளில் இருக்கக்கூடிய இடைவெளியை தீர்க்க என்ன செய்யப் போகிறோம்? என்கிற இரண்டு கட்ட நிலைகளை பற்றி இக்கலந்தாய்வு கூட்டத்திற்கு நோக்கவுரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி வன்கொடுமைகளுக்கான சமூக, அரசியல், பொருளாதார பின்னணி அதற்கான தீர்வுகளை பற்றியும் சமூக விரோதத்திற்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவும் நடந்து கொள்ளும் ஆதிக்க ஜாதியினருக்கு எதிராக இடதுசாரி அமைப்புகள் ஒற்றுமையாக இருந்து வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுவர்களின் வழக்குகளை இறுதி வரை கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக முன்வைத்து உரையாற்றினார். சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பார்வேந்தன் வன்கொடுமைகளுக்கான சமூக, அரசியல், பொருளாதார பின்னணி அதற்கான தீர்வுகளை பற்றி விளக்கவுரையாற்றினார்.
பெரியார் முழக்கம் இதழ்05022026.

You may also like...