ஜாதி பேசும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
பள்ளி மாணவர்களிடையே ஜாதிப்பாகுபாடுகளை உருவாக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை கடந்த வாரம் சுற்றறிக்கை விடுத்துள்ளது. இது பாராட்டி வரவேற்கத்தக்கதாகும்.
இத்தகைய ஜாதி உணர்வு கொண்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறினால், அது பள்ளி வளாகத்தில் கடும் விளைவுகளை உருவாக்கி விடும்; பள்ளிகளின் நம்பகத்தன்மையை சீர்குலைத்து விடும் என்றும் கல்வித்துறையின் சுற்றறிக்கை எச்சரிக்கிறது.
சுற்றறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
* பள்ளி நிர்வாகம் மாணவர்களின் ஜாதி அடையாளத்தை ரகசியமாக பாதுகாக்க வேண்டும்.
* ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையிடமிருந்து கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தக் கூடாது.
* இதுகுறித்து நிர்வாகம் விளக்கம் கேட்க விரும்பினால், மாணவர்களை தனித்தனியாக முதல்வர் அறைக்கு அழைத்துப் பேச வேண்டும்.
* மாணவர்களிடம் அலைபேசி இருந்தால் அதை பறிமுதல் செய்து பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
* மாணவர்களுக்கான கோரிக்கை பெட்டியை வாரம் ஒரு முறை, மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு திறந்து பார்த்து பரிசீலிக்க வேண்டும்.
* மாணவர்களின் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தலைமை கல்வி அலுவலகத்தில் தெரியப்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் ஜாதிப் பாகுபாடுகளை நீக்குவது குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அமைத்த குழு இந்த பரிந்துரைகளை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பள்ளி மாணவர் சேர்க்கையின் போது பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய ஒரு சுற்றறிக்கையில், ஜாதிக் கயிறுகளை அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியது.
இது தவிர, தமிழ்நாடு அரசின் ஐந்தாவது காவல் ஆணையத்தின் அறிக்கைஒரு முக்கிய கருத்தை பள்ளிக் கல்வித் துறைக்கு பரிந்துரைத்தது ஜாதி பதட்டம் நிறைந்த பகுதிகளில் , உள்ளூர் ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் நியமனத்தை தவிர்க்க வேண்டும் என்பதே அந்த பரிந்துரை பள்ளிக்கல்வித்துறை இதையும் பரிசீலிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
பள்ளிக்கல்வித்துறையின் இந்த செயல்பாடுகள் பாராட்டி வரவேற்கப்பட வேண்டியவை!
விடுதலை இராசேந்திரன், முகநூல் பதிவு.
பெரியார் முழக்கம் இதழ் 25092025
