யுஜிசி விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும்!
ஆனால் “ஜாதிப் பாகுபாடு” என்பது எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஒபிசிபிரிவினருக்கு எதிரான பாகுபாடுகளை மட்டுமே குறிக்கும் வகையில் இருப்பதாக உயர்ஜாதியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வி.பி. சிங் அமல்படுத்தியபோது வெளிப்படுத்திய கண்மூடித்தனமான எதிர்ப்பை இதற்கும் வெளிக்காட்டியுள்ளனர். உயர் ஜாதியினரே ஒடுக்குமுறையாளர்கள் என்று இந்த விதிகள் மறைமுகமாகக் கருதுகின்றன, இதனால் அவர்கள் துன்புறுத்தப்படலாம் என்று அச்சம் தெரிவிக்கின்றனர். பொய்யான புகார்களுக்குத் தீர்வு காணும் வழிமுறைகள் இதில் இல்லை. இவற்றில் ஏதாவது அடிப்படை நியாயமோ, நேர்மையோ இருக்கிறதா? ஆனால் பா.ஜ.க. அரசு கொண்டு வந்த இந்த விதிகளுக்கு பா.ஜ.க.விலேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் ரே பரேலி மாவட்டம் சலோனில் பாஜக கிசான் மோர்ச்சாவின் மாவட்டத் தலைவரான ஷியாம் சுந்தர் திரிபாதி, எதிர்ப்பின் காரணமாக ராஜினாமா செய்த தலைவர்களில் ஒருவர். ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள அவர், “விதிகள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்” என்றார்.
“இன்று இல்லையென்றாலும் நாளை கல்லூரிகளில் படிக்கும் எங்கள் மகன்களும் மகள்களும் தவறான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். யாராவது காதலைச் சொல்லி அவர்கள் மறுத்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம். SC, ST, OBC அல்லது சவர்ணர்கள் என யாராக இருந்தாலும் விதிகள் சமமாக இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் பாகுபாட்டை எதிர்கொள்வதில்லையா? எண்ணிக்கையில் அதிகமாக இருப்பவர்கள் குறைவாக இருப்பவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவார்கள். சவர்ணர்களுக்கு எதிராகப் பாகுபாடு நடக்காதா?” என்று கூறி அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அம்மாநிலத்தில் மட்டும் பாஜகவில் பத்துக்கும் மேற்பட்டோர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
“இந்த விதிகள் தெளிவற்றவை, தவறாகப் பயன்படுத்தக்கூடியவை மற்றும் நாட்டைப் பிளவுபடுத்தக்கூடியவை” என்று கூறி உயர் ஜாதி இந்துக்களின் எண்ணவோட்டத்தை தீர்ப்பாக எழுதி, உச்சநீதிமன்றம் தற்போது யுஜிசியின் இந்த புதிய விதிகளுக்கு தடை விதித்துள்ளது. ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அரசின் UGC விதிகளுக்கு ஆதரவாக எந்த வாதத்தையும் முன்வைக்கவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் போனதற்கு முக்கியக் காரணமே பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகள் சரிந்ததுதான் என்று கூறப்பட்டது. அதைச்சரி செய்யும் விதமாக பாஜக இம்முயற்சியில் இறங்கியதா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. எனினும் பார்ப்பனிய – உயர் ஜாதியினரை பகைத்துக்கொள்ள விரும்பாமல் பாஜக தலைமை உடனடியாக இம்முயற்சியில் இருந்து பின்வாங்கியிருக்கிறது.
ஆனால் யுஜிசியின் இந்த புதிய விதிகள் இன்னும் தீவிரமாக செயல்படுத்தப்பட வேண்டியுள்ளது என்பதே கள எதார்த்தம். நாடாளுமன்றக் குழுவிற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் UGC சமர்ப்பித்த சொந்தத் தரவுகளின்படி, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஜாதி ரீதியான பாகுபாடு புகார்கள் 2019-20 முதல் 2023-24 வரை 118.4% அதிகரித்துள்ளன. 2021-ல் மக்களவையில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதிலில், 2014 முதல் 2021 வரை உயர்கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்துகொண்ட 122 மாணவர்களில் 68 பேர் (55%) பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் (SC-24, ST-3, OBC-41). ஆகஸ்ட் 2022 தரவுகளின்படி, 45 மத்தியப் பல்கலைக்கழகங்களில் SC பிரிவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ST பிரிவைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே துணைவேந்தர்களாக இருந்தனர். இடஒதுக்கீடு இருந்தும், உயர்கல்வி நிறுவனங்களில் 80% OBC, 64% தலித் மற்றும் 83% பழங்குடியினப் பேராசிரியப் பணியிடங்கள் காலியாக உள்ளன. 2006-ல் அப்போதைய UGC தலைவர் பேராசிரியர் சுக்தேவ் தோரட் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவக் கல்லூரியில் ஆய்வு நடத்தியது. அதில், SC/ST மாணவர்கள் கற்பித்தலில் மட்டுமல்லாமல், மதிப்பீடு, தேர்வு, விடுதிகள் மற்றும் உணவகங்களில் சமூகப் புறக்கணிப்பு, மற்றும் சாதி ரீதியான ராகிங் ஆகியவற்றால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டது.
எனவே உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டியது மிக அவசியமானது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்.
பெரியார் முழக்கம் இதழ்05022026.
