சென்னிமலையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
ஈரோடு தெற்கு மாவட்டக் கழகம் சார்பில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பேரணி- மற்றும் பொதுக்கூட்டம் சனிக்கிழமை 14.09.2025 அன்று மாலை 6 மணியளவில் சென்னிமலை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தோழர்கள் கலந்து கொண்ட வாகனப் பேரணி வெள்ளோடு மாரியம்மன் கோவில் திடலில் இருந்து மேளதாளத்துடன் தொடங்கியது.
தலைமைக் குழு உறுப்பினர் காவலாண்டியூர் ஈஸ்வரன் பேரணிக்கு தலைமை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி, கரூர் மாவட்டத் தலைவர் மோகன் தாஸ், ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் சென்னிமலை செல்வராசு, திராவிடர் எழுச்சிப் பேரவை மாநிலத் தலைவர் சக்திவேந்தன், சுற்றுச்சூழல் போராளி முகிலன், கழக மாநிலப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
திமுக சென்னிமலை கிழக்கு ஒன்றியச் செயலாளர் செங்கோட்டையன் பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்தார். பேரணி வெள்ளோடு, அனுமன்பள்ளி , அரச்சலூர், தலவுமலை, கே. ஜி. வலசு, கருங்கவுண்டன் வலசு வழியாக பொதுக்கூட்ட மேடையை அடைந்தது. பேரணியின் இடையே அரச்சலூரில் பொல்லான் பேரவைத் தலைவர் வடிவேல் ராமன் பேரணியை வாழ்த்தி வரவேற்று, பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் வழங்கி உபசரித்தார். பேரணியில் இரு சக்கர வாகனங்களில் சுமார் 60 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத்திற்கு ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் சி. செல்வராசு தலைமையேற்றார்.
பெரியார் பிஞ்சுகள் செங்காந்தள் “பசுமையும் பாரம்பரியமும்” எனும் தலைப்பில் பேசினார். நிறைமதி, “பசுமையும் பாரம்பரியமும்” எனும் தலைப்பில் பாடல்பாடி, “சமத்துவமே மகத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இயலருவி பெரியார் பற்றிய பாடல்கள் பாடினார். சிவகிரி அன்பெழில் பெரியார் பற்றி உரையாற்றினார்.
ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் எழிலன், ஈரோடு தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் செ. சசிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக, திமுக ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர், மாநிலக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் வி.சி சந்திரகுமார், சென்னிமலை ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி இளங்கோ மற்றும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
சமூக நீதி மக்கள் கட்சித் தலைவர் வடிவேல் ராமன், திராவிடர் எழுச்சிப் பேரவைத் தலைவர் சு. சக்திவேந்தன், தற்சார்பு விவசாயிகள் சங்கம் கி. வே. பொன்னையன், திமுக இளஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
U2 BRUTUS சத்யா “கலைத்துறையில் திராவிட இயக்க புரட்சி” என்ற தலைப்பில் தமிழ் சினிமாத் துறையில் சமூக நீதி மற்றும் சமத்துவம் பற்றி காட்சிகள் வெளிவந்ததை பற்றி உரையாற்றினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர், திமுக மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் வி.சி சந்திரகுமார் “திராவிட இயக்கம் வளர்த்த சமூகநீதி” என்ற தலைப்பில் பெரியார் செய்ய நினைத்ததை, அண்ணா அவர்கள் சட்டமாக நிறைவேற்றியதையும், கலைஞர் அவர்கள் அச்சட்டங்களை செயல்படுத்தியதையும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்பாடுகளை செயல்படுத்திக் கொண்டிருப்பதைப் பற்றி உரையாற்றினார்.
U2 BRUTUS மைனர் “திராவிடமும் தமிழ் தேசியமும்” என்ற தலைப்பில் தமிழ் தேசியம் என்று சொல்லி திரியும் போலி தமிழ்தேசிய வாதிகளையும், ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பல் பல்வேறு கோணங்களில் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவ நினைப்பதைப் பற்றியும் சிறப்பாக உரையாற்றினார்.
பேரலை இந்திரகுமார் தேரடி “ நீதிக்கட்சி முதல் திராவிடர் இயக்கம் வரை” என்ற தலைப்பில் பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளையும், கலர், கலர்களாக கயிறுகளைக் கட்டித் திரியும் ஜாதியவாதிகளின் நிலைமையும், கலர் போன கயிற்றை மாட்டித் திரியும் பார்ப்பனர்களின் நிலைமை பற்றியும் உரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.
சென்னிமலை வடுகபாளையம் கிராமத்தில் தலித் மக்களின் பிணங்களை அடக்கம் செய்ய ஜாதியவாதிகள் தடுத்து வந்தனர். சுடுகாட்டு தீண்டாமைக்கு எதிராக கழகம் 2012 ஆம் ஆண்டு நடத்திய போராட்டத்தில் ஈடுபட்ட 46 பேர் மீது வழக்கு போடப்பட்டது. இவ்வழக்கை நமது அமைப்பின் சார்பாக முன்னெடுக்கப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி உறுதுணையாக நின்று வழக்கை நடத்தியுள்ளார். மக்கள் வழக்கறிஞர் ப.பா மோகன் 7 வருடங்களாக வழக்கை நடத்தியுள்ளார். வழக்குக் கட்டணம் ஏதும் வாங்காமல் விடுதலை பெற்றுத் தந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கழகத் தலைவர் கொளத்தூர் மணி சென்னிமலை பொதுக்கூட்டத்திற்கு வரும் செய்தியறிந்த, 30-க்கும் மேற்பட்ட வடுகபாளையம் பெண்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு பயனாடை அணிவித்து நன்றியைத் தெரிவித்தனர். இந்நிகழ்வு காண்போரை நெகிழ்ச்சியடைய வைத்தது.
மாநில அமைப்புச் செயலாளர் தோழர் ப. இரத்தினசாமி நன்றியுரையாற்றினார். புரட்சிகர இளைஞர் முன்னணி அ.செல்வராசு, சிபிஎம் தாலுகா கமிட்டி உறுப்பினர் ம. ராமசாமி, சிபிஅய் மாவட்டக் குழு உறுப்பினர் பொன்னுசாமி, விசிக சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர் இளஞ்சுடர் ஈஸ்வரன், சென்னிமலை ஒன்றியச் செயலாளர் ஆதித்தமிழர் பேரவை பழனிச்சாமி மற்றும் கழகத் தோழர்கள் திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு, கோவை மாநகரத் தலைவர் நிர்மல், செல்லப்பன், கிருஷ்ணமூர்த்தி, ப. குமார், திருமுருகன், பழனிச்சாமி, மணிமேகலை, கிருஷ்ணன், நல்லதம்பி, கோபிநாத், பிரபு, இசைக்கதிர், விஜயரத்தினம், சுரேஷ், கிருத்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
