“ஜல்லிக்கட்டின் காட்டுமிராண்டித்தனங்களும் மூடநம்பிக்கைகளும்” – ம.கி.எட்வின் பிரபாகரன்

ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதற்கு எத்தனையோ போலியான பண்பாட்டு பெருமிதக் காரணங்கள் சொல்லப்பட்டாலும் கூட, உண்மை வேறாக இருக்கின்றது. ஜல்லிக்கட்டினுடைய மூலாதாரமான நோக்கம் ஒரு வீரனின் ரத்தம் விவசாய நிலத்தில் சிந்தப்பட வேண்டும் என்பதுதான்.  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு நீங்கள் சென்றால் தெரியும். முதல் காளையான ஊரின் கோவில் காளையை அவிழ்த்து விடுவதற்கு முன்பு, அந்த மக்கள் சாமியிடம் வேண்டிக் கொள்வதெல்லாம், “இந்த வருசம் அதிகமா குத்து விழணும் சாமி” என்பதுதான்.

நிறைய காளைகள் பிடிபட வேண்டும் என்று சாமி கும்பிட மாட்டார்கள். ஜல்லிக்கட்டின் பிரதான நோக்கம் காளையை அணைவதல்ல; வீரனை அடையாளப்படுத்துவதுதான். தனது நிலத்தில் வீரனின் ரத்தம் சிந்தப்படுவதன் மூலம் விவசாயம் செழிக்கும் என்ற விவசாய சமூகத்தின் ஆதி நம்பிக்கையே இதன் அடிப்படை. கோவில்களில் நடக்கும் வேள்வியின் எச்சங்களை கொண்டு வந்து நிலத்தில் தூவுவதோ அல்லது கோவில் தீர்த்தங்களை கொண்டு வந்து நிலத்தில் தெளிப்பதோதான் விவசாயம் செழிப்பதற்கான வழி என்ற வைதீக நம்பிக்கைக்கு மாற்றாக, மனிதனின் ரத்தத்துளிகளை உரமாக்கும் உழைக்கும் மக்களின் நம்பிக்கை வெளிப்பாடே இது.

 

அதனால்தான் ஜல்லிக்கட்டு வைதீகக் கோவில்களின் வழிபாட்டு விழாக்களுக்காக நடத்தப்படுவது இல்லை. உழைக்கும் மக்களின் நாட்டார் வழிபாட்டு மரபின் பகுதியாகவே நடத்தப்படுகிறது.” என்று தீக்கதிர் இதழில் (14/06/2016) மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

அதுபோல, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் ஊர் மக்களிடம் இது குறித்து கேட்ட போதும், “ஏற்கெனவே ஒரு தடவை நிதி நெருக்கடியில எங்க ஊரு ஜல்லிக்கட்ட நடத்த முடியாம விட்டிருக்காங்க. அது தெய்வ குத்தமாகிப் போனதால ஊரே வாந்தி, பேதினு வந்து அல்லோல கல்லோலபட்டுப் போச்சு. உடனே ஊர்கூடி முடிவெடுத்து, ஜல்லிக்கட்ட நடத்தி முடிச்சு தெய்வத்தோட உக்கிரத்த தணிச்சிருக்காங்க. அதனால இப்ப தடைபோட்டா, மறுபடியும் ஊருக்குப் பேரழிவு வந்துரும்னு பெரியவங்க பயப்படுறாங்க.” (ஜூனியர் விகடன் – 07 ஜனவரி, 2007) என்றே பதில் அளித்துள்ளனர்.

அதேபோல நியூஸ் 7 தொலைக்காட்சியில் இதுகுறித்து நடைபெற்ற விவாதத்திலும் கூட, ஷாலினி என்ற மதுரை பெண், ““ஊரே செழிப்பு இல்லாமல் போய்விட்டது. சின்ன சின்ன வயசுப் பசங்க என்ன காரணம் என்று தெரியாமல் திடீர் திடீரென்று இறந்துவிடுகிறார்கள். அந்தக் காலத்துலே ஜல்லிக்கட்டு ஏன் வந்தது என்றால், ஊரில் பெரிய வியாதி வந்ததாம். அதை சரி பண்ணுவதற்கு, இந்த மண்ணில் ரத்தம் சிந்த வேண்டும் என்று நம்பினார்களாம். அதற்காக ஜல்லிக்கட்டைக் கொண்டு வந்தார்கள்” என்ற கருத்தை கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

ஆக, ஜல்லிக்கட்டு போட்டி என்பது ஒரு ஆண்மகனின் ரத்தம் மண்ணில் சிந்தப்படும் போது அந்த மண் செழிக்கும் என்கிற மிக மோசமான காட்டுமிராண்டி கால மூடநம்பிக்கையின் அடிப்படையிலேயே விளையாடப்படுகிறது என்பதும், இதனாலேயே ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மிகப் பெரிய ஆதரவானது கிராமத்து சிறு தெய்வ வழிபாட்டில் ஈடுபடும் மக்களிடம் உள்ளது என்பதும் தெளிவாகிறது. அதேபோல, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தாவிட்டால் தெய்வ குத்தம் ஆகிவிடும் என்கிற சிந்தனை ஓட்டமும் மக்களிடம் இருக்கின்றது. அறிவியல் வளர்ச்சி இல்லாத காலகட்டத்தில், வாந்தி பேதி ஏற்பட்டால் அதற்கு என்ன காரணம் என்று மக்கள் அறியாதிருந்த காலகட்டத்தில், இத்தகைய மூடநம்பிக்கைகள் சமூகத்தில் நிலவி வந்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், அறிவியல் வளர்ச்சி மிக வேகமாக நடைபெற்று, பல்வேறு துறைகளிலும் நாம் முன்னேறி இருக்கக்கூடிய இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் கூட, வாந்திபேதிக்கு காரணமான சுகாதாரமற்ற பழக்க வழக்கங்களையும், நோய்க் கிருமிகளையும் பற்றிய புரிதல் இல்லாமல், அறியாமையில் மக்கள் இருப்பதே இந்த கண்மூடித்தனமான ஜல்லிக்கட்டு ஆதரவுக்கான காரணமாக இருக்கின்றதே தவிர, “இது தமிழர் பாரம்பரியம்” என்ற காரணமோ, நாட்டு மாடுகளை காப்பாற்ற வேண்டும் என்ற காரணமோ, நாட்டு மாடுகளால் மட்டும்தான் சத்தான பாலை வழங்க முடியும் என்கிற உண்மைக்கு புறம்பான காரணமோ மெய்யான காரணங்கள் அல்ல என்பதும், மனிதர்களின் ரத்தத்தை காணிக்கையாகத் தரக்கூடிய ஆதிகாலத்து நரபலி கலாச்சாரத்தின் மிச்ச சொச்சமே இந்த ஜல்லிக்கட்டு பழக்க வழக்கம் என்பதும், எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி புலனாகிறது.

சில சமூக அக்கறையாளர்கள், மாட்டின் கொம்பில் கூம்பு வடிவத்தில் ஏதாவது தற்காப்பு கருவிகளை பொருத்தினால், மனிதர்களை மாடு குத்தும் பொழுது மனிதர்களுக்கு ஏற்படும் காயத்தை குறைக்கலாம் என்கிற கருத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மாட்டை வளர்ப்பவர்களுக்கோ, மனிதர்களின் ரத்தம் மண்ணில் விழ வேண்டும்; அப்போதுதான் மண் செழிக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறபடியால், மாட்டின் கொம்பை மிகக் கூர்மைப்படுத்தும் செயல்களில்தான் ஈடுபடுகின்றனர். எனவே மற்ற விளையாட்டுப் போட்டிகளைப் போல, பாதுகாப்பு உபகரணங்களுடன் இந்த விளையாட்டை நடத்தக்கூடிய ஒரு சூழல், மக்களுடைய நம்பிக்கைக்கு உகந்ததாக இல்லை. அரசு, அப்படி ஒரு பாதுகாப்புத் திட்டத்தை கொண்டு வந்தாலும் கூட, அது மண்ணில் விழும் ரத்தத்தை தடுக்கும் என்பதால், மக்கள் அதனை எதிர்க்கத்தான் செய்வார்கள்.

சங்க காலத்தில் விளையாடப்பட்ட ஏறுதழுவுதலுக்கும் இக்கால ஜல்லிக்கட்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இக்கால ஜல்லிக்கட்டை, ஏறுதழுவுதல் என்று நாம் எடுத்துக் கொள்ள முடியாது. அந்த காலத்தில் பெண்களுக்கு சொந்தமான பல காளைகள், ஒரு தொழுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கும். ஒரு பெண்ணுக்குரிய காளையை ஒரு இளைஞன் அடக்கினால், அவனுக்கு அந்த பெண்ணை மணமுடிக்கும் தகுதி வந்ததாகக் கருதப்படும். இந்த வழக்கம் சில சமூகங்களிடம் இருந்து வந்தது. ஆனால் இன்றைய ஜல்லிக்கட்டு என்பது மணம் முடிப்பதற்காக நடத்தப்படும் நிகழ்வல்ல. மாறாக, ரத்த காணிக்கை தருவதற்காக நடத்தப்படும் நிகழ்வாகும். இது நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட விளையாட்டு என்று எழுத்தாளர்கள் காந்தி ராஜன், சந்திரசேகரன் ஆகியோர் எடுத்துரைத்துள்ளனர். (“The Hindu”, 15.01.2008)

“ஜல்லிக்கட்டில் பிடிபடாத மாடுகள், பொலிகாளைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, வீரியமான கன்றுகளைப் பெற பயன்படுத்தப்படும் என்று நண்பர்கள் பலர் சொல்கின்றனர்… அறிவியல்ரீதியாக இதில் எந்த உண்மையும் இல்லை. ஆரோக்கியமான ஆணும், ஆரோக்கியமான பெண்ணும் இணைவதன் மூலம் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என்பதுதான் மருத்துவ அறிவியல். பலமான ஆண்தான் நல்ல குழந்தையைத் தரமுடியும் என்றால், அர்னால்ட், முகமது அலி, மைக் டைசன், WWF வீரர்கள் போன்றவர்கள்தான் உலகின் எல்லா குழந்தைகளுக்கும் தந்தையாக இருந்திருக்க வேண்டும்” என்ற தோழர் கீற்று நந்தனின் கருத்து மிகச் சரியானதாகும்.

ஜல்லிக்கட்டு நடத்தினால் மட்டுமே நாட்டுக் காளை இனங்களை பாதுகாக்க முடியும் என்ற ஒரு பொய்யான வாதம் முன்வைக்கப்படுகிறது. கோழிகள் இந்த நாட்டில் காப்பாற்றப்பட்டு வருகின்றன; ஆடுகள் காப்பாற்றப்பட்டு வருகின்றன; பன்றிகள் காப்பாற்றப்பட்டு வருகின்றன. இப்படி எத்தனையோ விலங்குகள் இந்த நாட்டில் ஜல்லிக்கட்டு போன்ற எந்த விளையாட்டுகளும் இல்லாமலேயே காப்பாற்றப்பட்டு வரும் நிலையில், மாட்டைக் காப்பாற்ற மட்டும் ஒரு விளையாட்டை நடத்தித்தான் ஆக வேண்டுமா? கோழி, ஆடு, பன்றி போன்ற விலங்குகளை மனிதர்கள் உண்ணும் காரணத்தினால், மனிதர்களின் தேவைக்கு ஏற்ற வகையில் கோழிப் பண்ணைகளும், பன்றித் தொழுவங்களும் அமைக்கப்பட்டு, இந்த விலங்கினங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அதேபோல, நாட்டுக் காளை இனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறவர்கள், மாட்டுக்கறி உண்ணும் பழக்கத்தை அதிகப்படுத்தினால், மக்களின் தேவைக்கேற்ப மாட்டு இனங்களும் பாதுகாக்கப்படும். இதற்கு ரத்தம் சிந்தும் ஒரு விளையாட்டு தேவையில்லை.

நாட்டு மாட்டுப் பால் தான் சத்தானது எனவும், கலப்பின மாடுகளில் கறக்கப்படும் பால் சத்தானது அல்ல என்றும் மூடநம்பிக்கைகள் பரவலாக இருக்கின்றன. நம்முடைய

உணவில் இருக்கும் கொழுப்புகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1. நிறைவுறாத கொழுப்பு (Unsaturated fat), 2. நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat), 3. மாறுபக்க கொழுப்பு (Transfat). இதில் மாறுபக்க வகை உணவுகளை நாம் அறவே தவிர்த்து விடுவது நல்லது. அதேபோல, நிறைவுற்ற கொழுப்பு வகை உணவுகளை எந்த அளவுக்கு குறைத்துக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நல்லது. இதனை ஈடுகட்டும் வகையில், நிறைவுறாத கொழுப்பு வகைகளை உட்கொள்வது உடலுக்கு நல்லது. பாலில் இருக்கும் கொழுப்பு என்பது நிறைவுற்ற கொழுப்பு வகையைச் சார்ந்தது‌. அது நாம் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டிய கொழுப்பாகும். நாட்டு மாட்டுப் பாலில், நிறைவுற்ற கொழுப்பின் அளவு அதிகம் என்பதால், அந்த கொழுப்பு உடலுக்கு எந்த நன்மையும் செய்வதில்லை. அதனால், நம்முடைய தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம், தேவையற்ற கொழுப்புகளை குறைத்து, நீல நிற பாக்கெட்டில் நிறமாக்கப்பட்ட பாலை (Toned Milk), இன்று வெகுஜன மக்களுக்கு வழங்கி வருகிறது. இவ்வாறாக, கொழுப்பு குறைந்த பால் வகைகள் தான், நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாக இருக்கும் நிலையில், கொழுப்பு அதிகம் உள்ள நாட்டு மாட்டுப் பால் தான் ஆவினை விடவும் நல்லது என்பது, அறிவியலுக்கு எதிரான ஒரு கருத்தாகும்.

விவசாய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி தான் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைவதற்கு காரணம். முன்பு மாடுகளை ஏர் உழ பயன்படுத்தி வந்த மக்கள், மாடுகளை பராமரிப்பதில் இருக்கும் அதிக செலவினங்களை கட்டுப்படுத்துவதற்காக, உழவுந்துகளைப் (Tractor) பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் வளரும்போது, விவசாயத்தில் மாடுகளின் தேவை குறையத்தான் செய்யுமே தவிர, அதிகரிக்கச் செய்யாது. எனவே மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள், அதற்கு மாற்றான மாட்டுக்கறி உணவு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வழக்கம்தான் இதற்கான தீர்வாக அமையும். நவீன தொழில்நுட்பங்கள் விவசாயத்தில் பெருகும் பொழுதுதான், தினக்கூலிகளாக பண்ணைகளில் பணிபுரியும் ஒடுக்கப்பட்ட மக்களின் பொருளாதாரம் உயர்கிறது.

கடந்த காலங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் எத்தனையோ ஜாதிய வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. ஆதிக்கவாதிகளிகன் மாட்டை ஒடுக்கப்படுவோர் அடக்கிக் காட்டும் பொழுது, அது மிகப்பெரிய கலவரமாகவெல்லாம் வெடித்திருக்கின்றது. எப்படி பெரியார் இயக்கங்களின் “கோயில் கருவறை தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்தை”, ஆத்திக ஆதரவுப் பிரச்சாரமாக எடுத்துக்கொள்ளாமல், ஆதிக்கத்துக்கு எதிரான குரலாக எடுத்துக் கொள்ள வேண்டுமோ, அதேபோல, ஜல்லிக்கட்டு ஜாதிய வன்முறைகளுக்கு எதிரான பரப்புரைகளையும் , ஜல்லிக்கட்டு தீண்டாமைகளுக்கு எதிரான சமவாய்ப்பை வலியுறுத்தும் பரப்புரைகளையும், ஆதிக்கத்துக்கு எதிரான குரலாக எடுத்துக் கொள்ளலாமே தவிர, இவற்றை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான குரலாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த ஆண்டு நடைபெற்ற மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில், ஜாதிப் பெயர் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட மாட்டாது என்கின்ற தமிழ்நாடு அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கது. மக்களுக்காக போராட்டக் களத்தில் பாசிச சக்திகளை விவேகத்துடன் எதிர்த்து நின்றால், அது “வீரம்”; சுய கவுரவத்திற்காக மாட்டுடன் மல்லுக்கட்டுவது “முதிர்ச்சியற்ற மனோபாவம்” என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரியார் முழக்கம் 25012024 இதழ்

You may also like...