ஊழலால் ஊசலாடுகிறார் அதானி!

பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அந்த அடையாளத்தை பா.ஜ.க.விடம் கொடுத்துவிட்டு, தலையாட்டி பொம்மை போல, பா.ஜ.க.வின் முடிவுகளுக்கு இணங்கி கட்டுப்பட்டு நிற்கிறது. கூட்டணியை அறிவிக்கும் துணிச்சல் கூட அ.தி.மு.க.வுக்கு இல்லாமல், அமித் ஷா சென்னை வந்து அறிவித்துவிட்டுப்போனார். அதன்தொடர்ச்சியாக இப்போது அ.தி.மு.க. தலைமையில் முதல் பிரச்சார கூட்டத்தை நடத்தாமல், பா.ஜ.க செங்கல்பட்டில் நடத்திய கூட்டத்தில் அ.தி.மு.க.வும் பத்தில் ஒன்றாக கலந்துகொள்ளும் பரிதாபத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

அக்கூட்டத்தில் பலரும் ஊழல்… ஊழல் என்று பேசியிருக்கிறார்கள். ஆனால் அதானியின் ஊழல்தான் இன்றைக்கு உலகம் முழுக்க பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதானி கிரீன் எனர்ஜி திட்டங்களுக்காக இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் இதை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களிடம் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளதாகவும், இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெகுவாகப் பாதித்திருக்கிறது என்றும் குற்றம்சாட்டி, அமெரிக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (எஸ்.இ.சி.) அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் கெளதம் அதானி மற்றும் சாகர் அதானிக்கு முறைப்படி சம்மன் அனுப்பி விசாரிக்க, இந்தியத் தரப்பில் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்பதால் இருவருக்கும் மின்னஞ்சல் மூலம் சம்மன் அனுப்ப அனுமதி கோரியுள்ளது.

இந்த சட்ட நடவடிக்கைகள் காரணமாக, அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன், மற்றும் அதானி போர்ட்ஸ் போன்ற பங்குகள் 10% வரை வீழ்ந்திருக்கின்றன. இதில் எல்.ஐ.சி.க்கும் ஒரே நாளில் 12,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் கெளதம் மீதான இந்த ஊழல் புகார் குறித்து பிரதமர் மோடியோ அல்லது பாரதிய ஜனதா கட்சியோ இதுவரை வாய் திறக்கவே இல்லை. எதிர்க்கட்சிகள் மீது மட்டும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துகிற பா.ஜ.க.வின் வழக்கமான அரசியல் தமிழ்நாட்டில் இதற்குமுன்பும் எடுபட்டதில்லை, இனியும் எடுபடப்போவதும் இல்லை.
பெரியார் முழக்கம் இதழ் 29012026

You may also like...