. சமத்துவபுரமாகிய நரசிம்மன்நகர் (14)
வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை ‘முரசொலியில்’ ர.பிரகாசு எழுதி வருகிறார். `நரசிம்மன் நகர்’ கடந்த இதழின் தொடர்ச்சி இது.
ஆனைமலை ஆற்றங்கரையை அடுத்து, நரசிம்மனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு ஒன்று இருந்தது. மக்கள் போக்குவரத்து நிறைந்த பகுதி. அங்குள்ள நெடுஞ்சாலையை யொட்டி திராவிடர் கழகக் கட்டடமும் அதில் பகுத்தறிவுப் படிப்பகமும் அமைக்கப் பட்டிருந்தன. அங்குள்ள நாயக்கர் தெருவில்தான் நரசிம்மனின் வீடு இருந்தது. அந்த வீட்டிற்குள் பெரியாரின் வேன் வந்து செல்வதற்காகவே நுழைவாயிலில் தனிவழி அமைத்திருந்தார். வீட்டின் புல்தரையில் பெரியாருடன் அமர்ந்து பேசிய வரலாறும் உண்டு. இத்தகைய பேச்சுக்களின் ஊடாக, நரசிம்மனுக்கு மூன்று முக்கிய ஆலோசனைகளை வழங்கியிருந்தார் பெரியார்.
1) தன்னிடம் இருக்கும் நிலத்திலோ அல்லது புதிதாக வாங்கியோ தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒன்றாக இருக்கும் வகையில் பகிர்ந்தளிக்க வேண்டும்.
2) தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பேரூராட்சியில் அரசு நிலத்தில் சகல தரப்பு மக்களையும் உள்ளடக்கிய `சமத்துவக் குடியிருப்பு’ ஒன்றை அமைக்க வேண்டும்.
3) தாழ்த்தப்பட்டவர் ஒரு வரை பேரூராட்சித் தலைவர் ஆக்க முயற்சிக்க வேண்டும்.
கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மூன்று ஆலோசனைகளையும் நிறைவேற்றினார் நரசிம்மன். குறிப்பாக, ஆனைமலையில் பைமாசி நஞ்சப்ப கவுண்டர் என்பவருக்குச் சொந்தமான காலியிடம் ஒன்று இருந்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் சிலர் அங்கு குடிசை அமைத்து தங்கியிருந்தனர். எதிர்பாராத விதமாக நிகழ்ந்த தீ விபத்து ஒன்றில், குடிசைகள் தீக்கிரையாகி விட்டன. அதனால், அந்த இடத்தை விற்றுவிட முடிவெடுத்தார் பைமாசி நஞ்சப்ப கவுண்டர்.
பெரியாரின் அறிவுரையை நிறைவேற்று வதற்கான வாய்ப்பாக இதை எடுத்துக்கொண்ட நரசிம்மன், அந்த இடத்தை தானே வாங்கி, தீ விபத்தில் வீட்டை இழந்தவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் பகிர்ந் தளித்து, தமிழ்நாட்டின் முதல் சமத்துவபுரத்தை மலரச் செய்தார்.
அடுத்து, காந்தியவாதியாக இருந்த காலத்திலேயே தன்னு டன் இணைந்து பணியாற்றிய ஏ.எம்.மாசாணி என்பவரை, பொதுத்தொகுதி யில் நிறுத்தி வெற்றி பெறச் செய்து, பேரூராட்சி மன்றத் தலைவராக்கினார். அந்த ஏ.எம்.மாசாணி மற்றும் மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சியினரை இணைத்துப் போராடி, புதிய குடியிருப்புப் பகுதி ஒன்றை உருவாக்கினார். அரசை வைத்தே அனைத்து சமூக மக்களுக்கும் அந்தக் குடியிருப்பில் நிலத்தைப் பகிர்ந்தளித்தார். அவருடைய உழைப்பைப் போற்றும் விதமாக, மக்கள் அந்தப் பகுதிக்கு `நரசிம்மன் நகர்’ என்றே பெயர் சூட்டினர்.
இத்தகைய கொள்கை உறுதிமிக்க சாதி ஒழிப்புப் போராளி நரசிம்மன் அவர்கள் 1967-ஆம் ஆண்டிலேயே மறைந்துவிட்டார்.
“கழகத்தின் கண்போன்ற தோழர் நரசிம்மன் அவர்களை இயக்கத்தின் முக்கிய பொறுப்பில் எனக்குப் பின்னால் அமர வைக்க நினைத்திருந்தேன். ஆனால், அவர் என்னை முந்திக்கொண்டார்” என விடுதலையில் இரங்கல் செய்தி எழுதினார் பெரியார்.
ஆனால், அவர் எழுப்பிச் சென்ற நரசிம்மபுரம் இன்றும் ஜாதி, சமய வேறுபாடுகளற்ற சமத்துவபுரமாக அவரை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.
புரட்சிப்பெரியார்முழக்கம்04092025
